வை ராஜா வை ஒரு கட்டுரை பாகம் ஒன்று

வை ராஜ வை !!

ஒன்னு வெச்சா ரெண்டு.
ரெண்டு வெச்சா நாலு.
நாலு வெச்சா எட்டு.
இதுல வை. அதுல வை.
எதுல வேணுனாலும் வை.

இவ்வாறு கூறி விட்டு, கையில் இருக்கும் மூன்று சீட்டுகளைக் காட்டி படம் இருக்கும் பக்கத்தை மறைத்து வைத்து, வை ராஜா வை என்று குரல் கொடுப்பார் ஒருவர்.

அவரைச் சுற்றி குறைந்தது நாலு அல்லது ஐந்து பேர்கள் நின்றுகொண்டிருப்பார்கள்.

அவரிடம் இருக்கும் மூன்று சீட்டுக்களில் ஒன்றில் ராஜா இருக்கும், மற்ற இரண்டும் ராணியாக இருக்கும்.

ராஜா சீட்டு மீது பணம் சரியாக வைத்திருந்தால் வெற்றி. ராணி படம் மீது வைத்திருந்தால் தோல்வி. இது தான் அந்த விளையாட்டு.

இது ஒரு சூது விளையாட்டு என்று தெரிந்திராத வயது எனக்கு. பள்ளிக்கூடம் சென்று மாலை நேரம் வீடு திரும்பும் போது, எங்கள் ஊர் காசி விஸ்வநாதர் கோவில் மண்திடலில் நாள் தோறும் நடக்கும் இந்த விளையாட்டை அங்கு புத்தகத்தை சுமந்து நின்றுகொண்டு பார்த்து ரசிப்பேன்.

நம்மிடமும் ஒரு நாலணாவோ, எட்டணாவோ இருந்தால் விளையாடி, ஓரிரண்டு ரூபாய்கள் கிடைத்துவிட்டால், தென்காசி பாக்யலக்ஷ்மி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் எம்.ஜி.ஆர். படம் என் நண்பன் முருகனுடன் சென்று கண்டு ரசிக்கலாம். ஆளுக்கு ஒரணா செலவில் நிக்கர் பை நிறைய பொட்டுக்கடலையும் வாங்கி திரைப்படம் தீரும் வரை வாயிலிட்டு மென்று கொண்டிருக்கலாம் என்றெல்லாம் ஆசைபப்டுவேன். ஆனால் அந்த காசிவிஸ்வநாதன் அதற்கு அருளவில்லை.

வெகு நேரம் காசு ஒன்றும் வைத்து விளையாடாவிட்டால் அவர், "என்ன தம்பி .. சும்மா நின்னுக்கிட்டு இருந்தா காசு வராது. சட்டைப்பையில் காலணாக் காசு இருந்தாலும் வை, நீ ஜெயிச்சிட்டயானா, அரையணா கிடைக்கும். விளையாடறயா .. அதுல வை .. இதுல வை .. எதுல வேன்னுனாலும் வை" ன்னு சொல்லி மூன்று சீட்டுக்களையும் எல்லோரும் பார்க்கும்படிக் காட்டி விட்டு, மண் தரையில் விரித்து வைத்திருக்கும் அவர் கைக்குட்டை மீது சீட்டுக்களை மறைத்து வைத்து, பின் ஜெப்படி வித்தை செய்வதுபோல் அவைகளை அங்கும் இங்கும் மாற்றி வைத்து, இப்போ எதுல வேனுனால் வை. வை ராஜா வை என்று சொல்லவார்.

அண்ணாச்சி .. என்கிட்டே காசு ஒன்னும் இல்லை. சும்மா நின்னு தமாசு பாக்கறேன்னு சொன்னா, வீட்டுக்குப் போடா, போலிசு வந்துட்டான்னா ஒன்னைப் பிடிச்சுக்கிட்டுப் போயிடுவான் என்று சொல்லி மிரட்டுவார். அப்படி மிரட்டியும் போகாவிட்டால், துரத்தியடித்துவிடுவார்.

கூடியிருப்பவர்கள் ஒருசிலர் வேட்டி மடிப்பில் வைத்திருக்கும் சில்லறைக் காசுகளைக் கையில் எடுத்து, ஒருமுறைக்கு இருமுறை கண்களில் ஒற்றிக்கொண்டு, அவரவர் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு, ராஜா என்று நினைத்து ஏதாவது ஒரு சீட்டில் வைப்பார்கள். இன்னொருவர் மற்றொரு சீட்டில் வைப்பார். கூட்டத்தில் நிற்கும் வேறு சிலர், ஒரு குறிப்பிட்ட சீட்டில் வைக்கவும் சொல்லுவார்கள். இறுதியில் மற்றும் ஓரிருவர் ஒரு ரூபா, இரண்டு ரூபா என்றும் வைப்பதுண்டு.

இந்த விளையாட்டில் கையில் இருக்கும் காசு பணத்தை இழந்தவர்கள் தான் அதிகம்.

தோற்றவர்கள் தெய்வத்தை குறைகுறி, தன் விதியை நொந்து கொண்டு அங்கிருந்து சென்றுவிடுவார்கள். எத்தனையோ பேர்கள், அதிர்ஷ்ட்ட தேவதை தன் பக்கம் இருப்பதாக நினைத்துக் கொண்டு, ரேஷன் வாங்குவதற்கு வைத்திருக்கும் ஐந்து ரூபா, பத்து ரூபா வரை வைத்து தோற்றுப் போயிருக்கிறார்கள் இந்த வை ராஜா வை விளையாட்டில்.

- தொடரும் -

எழுதியவர் : தர்மராஜன் வெங்கடாசலம் (9-Oct-14, 6:27 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 85

மேலே