இதோ

வார்த்தைகளுக்குள் அர்த்தம் தேடித் தேடி வார்த்தைகள் கொடுக்கும் உணர்வுகள் இழந்து எப்போதும் ஒரு கதை அல்லது கட்டுரை அல்லது ஒரு நிகழ்வு அல்லது ஒரு ஆரம்பம் அல்லது ஒரு முடிவு .. தேடி சுவையான எழுத்துப் பட்சணங்களின் மீது ஆசை கொண்டு இந்த கட்டுரைக்குள் நுழைபவர்களுக்கு .....முதலிலேயே சொல்லிவிடுகிறேன்....

எச்சரிக்கை...!!!!

ஆபத்தான வளைவுகளுக்குள் பயணப்படுவது உங்களுக்கு சிரமமாயிருந்தால்
... இப்போதே திரும்பிச் செல்வது உத்தமம்.

எனக்குள் பற்றி பரவியிருக்கும் இந்த இறுக்கத்தின் மூலம் என்ன? அவ்வப்போது வந்து தொண்டை அடைத்து கண்களில் கண்ணீர் நிறைத்து கலக்கமாய் நெஞ்சை பிசைந்து ஏதோ ஒன்று செய்கிறதே அது என்ன? கருவினில் இருந்த பொழுதுகள் முற்றிலுமாய் மறந்து போனாலும் எப்போதாவது இருளின் ஆளுமைக்குள் நிற்கும் போது சட்டென்று ஏதோ ஒரு அனுபவம் சாட்டையை சரெலென்று சொடுக்கிவிட்டது போல உடம்பு அதிர்கிறதே அது என்ன?

கேள்விகள்...கேள்விகள்...கேள்விகள்...என்று கேள்விகளில் இருந்து ஜனித்த பதில்களின் நுனியில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் அறியாமையின் கொடூர முகம் கண்டு பட்டுப்போன கேள்விகளெல்லாம் என்னை கேலிப்பொருளாய் பார்க்கும் தருணத்தில் எது அபத்தம்? எது சத்தியம்? என்று தெரியாமல் குழப்ப வாசலில் என்னை தொலைத்த பொழுது திறந்த கதவின் பெயர்தான் கடவுளா?

இயல்பாய் நகரும் வாழ்வின் ஓட்டத்தில் இளைப்பாறும் பொழுதுகளில் அர்த்தமற்று தெரியும் ஓட்டங்களின் அதிர்வுகள் எல்லாம் சிதறிய வண்ணங்களாய் என்னைச்சுற்றி பரப்பிய ஓவியங்களில் நான் அமிழ்ந்து இட வலம் மறந்து பின் ஓவியமும் மறைந்து எச்சத்திலிருக்கும் ஒரு ஏகாந்த இருப்பின் அமைதியில் சூன்யத்தின் வேர் பிடித்துவிட்டதாக கருதும் பொழுதுகளில் ஒரு கூட்டமும் ஒரு நெரிசலும், எங்கேயோ அசுர கதியில் பறக்கும் ஒரு லாரியின் ஹாரன் சப்தமும் என்னை சுடு வெயில் கொண்ட பகல் பொழுதுக்குள் தள்ளிவிட்டு....

சட்டென பருமனான வாழ்க்கை ரோலரை என் மீது ஏற்றி இறக்கும் பொழுதினை எதார்த்தம், உண்மை என்று சொல்லி எனக்காக பரிதாபப்படும் சக ஜன கூட்டங்களின் கூற்றுகள் எல்லாம் பொய்யா இல்லை மெய்யா என்று தெரியாமலேயே என் தேகம் நசுங்கிப் போகிறதே?

ஒரு எறும்பிடம் நான் பேசிக் கொண்டிருந்த பேச்சின் சாரத்தில் அந்த சிற்றுயிரின் எண்ணங்கள் என்னவாயிருக்கும் என்று ஆராய முற்பட்ட அந்த கணத்தில் ஏதோ ஒரு பேருண்மையின் அறியப்படாத சூத்திரத்தின் சுவடுகளை சுமந்து கொண்டிருந்த அந்த சிற்றுயிரின் அடர்த்தியில் நான் என்னை மறந்த பொழுதில்.....

....வயிறு முட்ட குடித்து, நெஞ்சு முட்ட உண்டு, கூடுமான வரை காமம் என்ற கடவுளை உடல் போகம் என்ற மாயைக்குள் அடைத்து தீர்ப்பதாய் நினைத்து தீய்ந்து கொண்டிருக்கும் என்னை ஒத்த சக ஆறறிவு பிராணிகளிடமிருந்து நான் வேறுபட்டுத்தானே போகிறேன்?

என் மிச்சமும் சொச்சமும் வெட்ட வெளியின் சத்தியத்தை நிறைக்கத்தான் போகின்றன என்பதை அறிந்தும் இதோ வந்து கலந்து கொள்கிறேன்...என்னை நானே மயங்கச் செய்து......சப்தமிட்டு சிரிக்க....கோபமிட்டு கொக்கரிக்க.. திட்டமிட்டு பொருள் சேர்க்க...வெட்கமின்றி அறியா காமம் செய்ய......இதோ வந்து விட்டேன்...!

எழுதியவர் : Dheva S (13-Oct-14, 8:29 pm)
Tanglish : itho
பார்வை : 192

மேலே