முதுகெலும்பி 5

இந்த மாட்டப்புடிச்சி கட்டிப்புட்டு வாரதுக்குள்ள உங்களுக்கு என்னடா அம்புட்டு அவசரம்..? அதுக்குள்ளே மொதக்கோடு தாண்டிட்டீயளா..?ன்னுகிட்டே வந்து சேந்துக்கிட்டேன்..

இந்த வெளையாட்டு என்னனா.... எங்க ஊர்ல இத தண்ணிக்கோடுன்னு சொல்லுவம். எங்க ஊரு மாதிரி பல ஊர்ல அத உப்புக்கோடு.. கிளித்தாண்டு.. அட்டியா பட்டியா..கொற்றிக்கோடுன்னுல்லாம் சொல்லுவாக.. இத எப்பிடி .வெளையாடனுமின்னா.. ஒரு பக்கத்துக்கு நாலு இல்லன்னா அஞ்சி பேரு..ஒரு குரூப்பு மறுகும்.. எதுத்தாப்புல மறு குரூப்பு அவுகள போகவிடாம மறிக்கும். மறுகுற குரூப்பு மறிக்கிற குரூப்புகிட்ட அடிவாங்காம அந்தப்பக்கம் போயிட்டு அப்பிடியே இங்கிட்டு திரும்பி வந்துட்டா கணக்கு ஒரு உப்பு. இந்த உப்புக்கணக்கு வச்சிதா செயிச்சவுக தோத்தவுகள முடிவு பண்ணிக்கிருவம். இந்த வெளயாட்ட ஆம்பளைப்பய.. பொம்பளப்புள்ளன்னு எல்லோரும் வெளையாடலாம் .

நாங்கல்லா வெளையாடுறப்ப எங்க ஊரு பெரிய மனுச எல்லாரும் சுத்தி இருந்து வெளையாட்டு பாத்துக்கிட்டே அன்னைய கதையெல்லாம் பேசிச் சிரிச்சிக்கிருப்பாக. ரொம்ப சந்தோசமா இருந்தாகன்னா “ அவனப்புடி... இவா ஓடுறா பாரு... எலேய் .. இவன மறுக விடாதடா” ன்னு அவுகளும் வெளையாடாமலேயே வெளையாட்டுல இருப்பாக. இந்த வெளையாட்டு செல நேரத்துல விடிய விடிய ஆடுவோம்... பௌர்ணமி.... கலியாணம்.. காதுகுத்து இப்பிடி முக்கியாமான நாளுகெழம வந்தா இந்த வெளையாட்டுதேம் பூரா ஆளுகளுக்கும்..

அப்புறம் சின்னான்.. எங்க ஊருல இவனுக்கு பட்டப்பேரு “ ஓடுநண்டு”. இவன மட்டும் யாராலையும் தொடவே முடியாது இந்த வெளையாட்டுல. ஏதோ ஒரு படத்துல நம்ம வடிவேலு அண்ணே சொல்லுவாகளே... அந்த மாதிரி...."சரட்டுன்னு போவாம்.... சரட்டுன்னு வருவாம்”

இவெம் இருக்க குரூப்புதா எப்பவும் செயிக்கும். அதே மாரி எங்க சுத்து வட்டார ஊருக்குள்ள எங்கிட்டு இந்த பந்தயம் நடந்தாலும் எங்களுக்குதே சம்மானம். பள்ளிக்கொடம் விட்டு அந்த மஞ்சப்பைய மாட்டிகிட்டு வெரட்டி வருவாம் பாருங்க. எங்க ஊருக்கு ஒத்த பஸ்சு வருமின்னு சொன்னேன்ன... அதுகூட வேகத்துல கொஞ்சம் குழி.. கொடம்.. பள்ளம்.. பாதையின்னு மட்டுப்படும்.. இவனுக்கு அதெல்லாங் கெடையாது.. சும்மா பறப்பாம்....!!

எப்பயாவது எங்க ஊருக்குள்ள வார வாத்தியாரு சொல்லுவாரு அவுக அப்பெங்கிட்ட
“ அவன நல்ல ட்ராக்ல ஓடி ப்ராக்டீஸ் பண்ண சொல்லுங்க “ நல்லா வருவான் “ சொல்லிட்டு போயிருவாரு.
இவெம் அப்பாவோ உருமாவ அவுத்து தலைய சொறிஞ்சிகிட்டே“ டேய்ய்ய்ய்ய் சின்னா....அவருகிட்ட என்னடா வம்பு பண்ணுன? மனுசம் என்ன வஞ்சிட்டு போறாரு.. இனிமே இந்த மாதிரி பேச்சே வரப்புடாதுன்னுட்டு மம்பட்டியத் தூக்கி தோள்ள வச்சிகிட்டு வயலப் பாக்க போயிரும். இவனுக்கும் என்னன்னே புரியாது. அனாலும் வயவரப்பு எல்லாம் பயபுள்ள ஓடிக்கிட்டே இருக்கும். எப்பயாவது இவுக தாத்தா வடவாங்கி வச்சிக்கிட்டு கூப்புடுவாக இப்பிடி..” எங்க இந்த ரயிலுக்கு பொறந்த பயல... டேய் சின்னா.........!!

அவெம் ஆறாப்பு போற வரைக்கும் அவன எங்க ஊரே ஒரு ஓடுபுள்ளையாத்தேம் பாத்துக்கிட்டு இருந்தோம். ஒருவாட்டி அவுக பள்ளிகொடத்துல ஓட்டப் பந்தயத்துல பய பிரிச்சிக்கிட்டு வந்தான்.
மொத சம்மானமாம். அவனுக்கு மட்டுமில்ல. எங்க ஊருக்கே அதேம் மொத சம்மானம். என்னடா இதுன்னு கேக்குறோம்.. “இல்லண்ணே.. வரிசையில நிப்பாட்டி ஓடச் சொன்னாய்ங்கே.. நா ஓடித் திரும்பிவந்து நிக்கிறே... அப்பதா எனக்கு பின்னாடி வந்தவே ஓடிக்கிட்டு வாரான் ..இங்கல்லாம் ரொட்டி முட்டாயிதான குடுப்பாக. அங்க இந்த பிளேட்டுதாண்ணே கொடுத்தாய்ங்க....!” சின்னானுக்கு முட்டாயி கெடைக்கலன்னு வருத்தம் அன்னைக்கி....

அவெம் ஓடிக்கிருந்தே மாதிரியே காலமும் ஓட ... “ இனிமே இவெம் ஓடுறதுக்கு பூட்டிஸ் வேணுமா...அதாங்க காலு முங்குன செருப்பு. என்னமோ சொன்னானே ஆங்.... “ஸ்பைக்சு”ன்னான்.

அதக் கேட்டான் .
“யம்மா..! யம்மோவ்..நானு பெரிய டவுனுல போயி ஓடப்போறேம்.. அங்க நெறைய பெரிய பள்ளிகொடத்துல இருந்தெல்லாம் வருவாய்ங்களாம். இங்கிலீசு எல்லாம் பேசுவாய்ங்களாம் . அங்க வெறுங்காலோட ஓட முடியாதாம் எனக்கு ... ஸ்..ஸ்... இது வேற எளவு வாயிலேயே வர மாட்டேங்குது ஸ்ஸ்..ஸ்பைஸ்க்சு... வாங்கணும்” கடேசியா சொல்லியே புட்டான் பய....!

"இந்த வெக்கங்கெட்ட மானம் என்ன பாடு படுத்துது மனுசன...நசநசன்னு தூறிகிட்டே எல்லா வெறகையும் நனச்சிப்புடுது. நானே ஊதிக்கிருக்கேன்..இவெம் வேற. போடா அங்கிட்டு..” புள்ள கேட்டு வாங்கிக் குடுக்க முடியலைன்னு ஆதங்கத்த வெளில காட்டிகிராம அடுப்ப ஊதித் தள்ளிக்கிட்டு இருக்கும் அவெம் அம்மா... இவனும் பேசாம போயிருவான்.

அன்னைக்கி ராத்திரி எப்பவும்போல.. பைப்படி தெடலு... எல்லாரும் கூடிருக்காக. நாங்களும் வெளையானடுகிட்டு இருந்தோம். அவுக அம்மா கூட்டத்துல பேசிக்கிருந்திச்சி..”"என்னமா வெளையாடுறாம்.. பாரு. என்னமோ தஞ்சாவூருல பெரிய பள்ளிகொடமேல்லாம் சேந்து பெரிய போட்டி நடத்துறாகளாம். அங்க ஓடுறதுக்கு என்னமோ பூடிசு வேணுமாம். நமக்குதா ஆட்டுக்குபோட புல்லுகட்டுக்கே வழியக் காணோம்.. எங்கிட்டு பூடிசு.... அது போகுது போ....." ன்னு சலுப்புத் தட்ட...

அன்னைக்கின்னு பாத்து சாமிதாத்தா வந்திருந்தாக... டேய்.. இங்க வா... இந்தா பத்து ரூவா வச்சிக்க... ன்னுட்டு “ இஞ்ச பாருங்க. என்னோட பங்க குடுத்துட்டேன்... நா இந்த ஊருதேம்.. நீங்களுந்தேன்.” ன்னுட்டு அர்த்தமா ஒரு பார்வைய பாத்தாரு. அடுத்து.. முத்தாயி அம்மாச்சி... நம்ம ஆளு... ஹி.. ஹி.. மாரி சித்தப்பா.... ன்னு எல்லாருங் அவுகளுக்கு முடிஞ்சத அவங் கையில திணிச்சாக. அப்பிடியே தெகச்சி போயிட்டாக சின்னான பெத்தவுகளும்..

ஊரே சேந்து ஒருத்தன ஓட வச்சோம். அவனும் செயிச்சி வந்தாம். நேரா டீக்கடைக்கி போயி “ தாத்தா நா செயிச்சிட்டேம். இத வச்சி நா பெரிய காலேசிக்கேல்லாம் போயி பெரிய படிப்பெல்லாம் படிக்கிறதுக்கு ஒதவியா இருக்குமாம் சுளுவா எடம் கெடைக்கிமாம். அங்க குடுக்குறப்ப சொன்னாக. அப்ப நீங்கதா மனசுக்குள்ள வந்தீக.... இந்த சம்மானமும் உங்களுக்குத்தேன்னு படக்குன்னு கால்ல விழுந்துட்டான் பய...
சாமித்தாத்தா.. லேசா சிரிச்சிக்கிட்டே “ நல்லாரு.. எது செஞ்சாலும் ஊருக்கு ஒதவுறாப்புல இருக்கணும்” ன்னு அவன அள்ளித் தூக்கி விட்டாரு. சுத்தி இருந்த எல்லா சனத்தோட மேல்துண்டும் முந்தானையும் ஒருவாட்டி கண்ணுக்கு ஒத்தடம் குடுத்துக்கிச்சி.... எங்க ஊரு மொத மொதன்னு செயிச்ச நாளு அன்னைக்கி ....
(இன்னும்.... ஓடும்)

எழுதியவர் : நல்லை.சரவணா (16-Oct-14, 12:08 pm)
பார்வை : 210

சிறந்த கட்டுரைகள்

மேலே