ரோட்டரி மனிதநேயமதம்

உலகம் முழுதும் உள்ள ரோட்டரி சங்கங்கள் அந்தந்த பகுதி மக்களின் தேவைகளுக்கு ஏற்பவும், உலகம் முழுவதும் பொதுவாக காணப்படும் பிரச்சனைகளை களையவும் தங்களால் இயன்றவரை போராடிக்கொண்டிருக்கின்றன.

இந்த நூற்றாண்டின் மாபெரும் ரோட்டரி சாதனையாக, இளம்பிள்ளைவாதம் என்கிற போலியோவை 99% உலகிலிருந்தே ஒழித்ததை சொல்லலாம் . தடுப்பணைகள் கட்டுவது, பாதுகாப்பான குடிநீரை தருவது, விளையாட்டினை ஊக்குவிக்க போட்டிகள் நடத்துவது, இலவச கல்வி சேவைகளென நாள்தோறும் உலகின் ஏதாவதொரு மூலையில் நடக்கும் அதன் திட்டங்கள் ஒவ்வொன்றும் மனிதகுலத்தின் ஒவ்வொருவரையும் ஏதாவதொரு வகையில் சென்று சேர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

அந்த வகையில் கோவை மேற்கு ரோட்டரி சங்கமானது விபத்தாலோ,வேறு ஏதாவது காரணத்தாலோ கையிழந்த பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு இலவசமாக செயற்கை கைகளை வழங்கி உதவுகிறது. அந்த கையின் சிறப்பென்னவென்றால் அவை வெறும் கட்டை கைகளாக இல்லாமல் சிலபல எளிய வேலைகளை செய்கிறவகையில் இயங்கும் தன்மையில் இருப்பதுதான்..

வருடாவருடம் அவர்கள் இந்த சேவையினை செய்து கொண்டிருக்கிறார்கள். உன்னதமான இந்த சேவையினை செய்யும் கோவை மேற்கு ரோட்டரி சங்கத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

இதுபோல உதவிகள் தேவைப்படும் ஏழை எளிய மக்கள் அந்தந்த பகுதியில் உள்ள ரோட்டரி சங்கங்களை அணுகினால், அவரவர்களின் உண்மைத்தன்மைக்கு ஏற்பவும், பொருளாதார ரீதியாக அவர்களின் நிலைக்கு ஏற்பவும், அந்த உதவியின் அத்தியாவசியத்தை பொறுத்தும் நிச்சயம் உதவிகளை செய்வார்கள்.

வெறும் நற்பணி மன்றங்களாக இயங்காமல் ,மக்களின் உண்மையான சேவகனாக, அற்புதமான தொலைநோக்கு திட்டங்களை , எந்தவிதமான பிரதியுபகாரமும் கருதாமல், தன்னலமில்லாமல் செய்துகொண்டேயிருப்பதால்தான் , இன்றைக்கு 200க்கும் மேற்பட்ட நாடுகளில் , நூற்றாண்டுகளை கடந்தும் ரோட்டரியின் உதவிச்சக்கரம் சுழன்று ஒளிவீசிக் கொண்டிருக்கிறது , சூரியனைப்போல.

"ஊருக்கு உழைப்பது யோகம்" என்பது சத்தியவாக்கு. நூறுபவுனில் ஆபரணங்களை வாங்கி நாம் அணிந்துகொண்டாலும் ஏற்படாத சந்தோஷமும், திருப்தியும் , ஒரு அரைபவுன் தாலியினை வறுமையில் தவிக்கும் ஏழை பெண்ணின் கல்யாணத்திற்கு வழங்குகிறபொழுது உண்டாகிறதே... ஏன் தெரியுமா..?
"ஈதல் இன்பம்" என்று நம் தமிழர் பரம்பரை சுட்டிக்காட்டியிருப்பதுதான். ரோட்டரியின் அடிப்படையும் இதுதான். ஈத்துவக்கும் இன்பம் அறிந்தவர்கள் சுழற்சங்கத்தினர்.

ரோட்டரி , மதம் கடந்த ..... மனிதநேயமதம்.

எழுதியவர் : முருகானந்தன் (21-Oct-14, 11:02 pm)
சேர்த்தது : MURUGANANDAN
பார்வை : 146

மேலே