கடவுளின் கல்யாணத்தில் மொய்வசூல்

மொண்டிபாளையம் பெருமாள் கோவில் அன்னூர் வட்டாரத்தில் பிரசித்தி பெற்றது. தாளக்கரை இலஷ்மி நரசிம்மர் கோவிலும், இத்த பெருமாள் ஆலயமும் வெறும் 7 கிமீ தூரத்தில் அருகருகே அமைந்திருப்பது வெகு விசேசம்.( தாளக்கரை இலஷ்மி நரசிம்மர் ஆலயத்தின் உள்ளே கோயில்கொண்டுள்ள சர்ப்ப விநாயகர் சன்னதியில் ராகுகேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஞாயிறன்று ராகுகாலத்தில் பரிகார பூஜையில் கலந்துகொண்டு வழிபட நலம் பெருகும்) பக்தர்கள் பெரும்பாலும் இரண்டு கோவில்களையும் தரிசனம் செய்துவிட்டுப்போவார்கள்.

நேற்றைக்கு மொண்டிபாளையம் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம். எதேச்சையாக போன எங்களுக்கும் அதை காணும் பாக்கியம் கிட்டியது. திருக்கல்யாண வைபவங்கள் எல்லாம் முடிந்தபிறகு , புரோகிதராய் மந்திரங்களை சொல்லி கல்யாணத்தை நடத்திய ஐயர் " மொண்டிபாளையம் பூதேவி,ஸ்ரீதேவி - எம்பெருமான் திருக்கல்யாணத்தில் கலந்துகொண்ட அன்பர்கள் இப்பொழுது தாராளமாக மொய் வைக்கலாம் . மொய் தர்றவங்க எல்லாம் மேடைக்கு வாங்க " என்று அழைத்தபொழுது பக்தர்கள் , முண்டியடித்துக்கொண்டு முன்வந்தார்கள். நானும்தான்.

இதில் என்ன மகிழ்ச்சி என்றால்....இதுவரையிலும் பல திருப்பணிகளில் பங்கெடுத்திருந்தாலும் கூட, திருக்கல்யாணத்தில் கலந்துகொண்டு, மொய் வைத்தது இதுதான் முதல்முறை. டிவி க்களில் பார்த்திருந்தாலும் , செய்தித்தாள்களில் படித்திருந்தாலும் எனக்கு இது புதிய அனுபவமே....
கடவுள் கல்யாணத்திலேயே கலந்து கொண்டு மொய்வைப்பதென்பது ஆனந்தம்தானே..!!

மேலோட்டமாக பார்த்தால், ஏதோ ஒரு சம்பிரதாயமாக தெரிந்தாலும், எல்லாம் வல்ல இறைவனோடு , எதுவும் அறியாத இதயங்களை இணைக்கிற , வாழ்க்கையின் ஒரே நோக்கத்தை செயல்படுத்த நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட இதுமாதிரியான அர்த்தமுள்ள இறைவழிபாட்டு சடங்குகள் , "ஆன்மீகமே இந்த தேசத்தின் பலம்" என்பதை திரும்ப,திரும்ப ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கிறது!

"பாரத தேசம் பழம்பெரும் தேசம்
நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்"

எழுதியவர் : முருகானந்தன் (21-Oct-14, 11:08 pm)
சேர்த்தது : MURUGANANDAN
பார்வை : 62

சிறந்த கட்டுரைகள்

மேலே