நிர்வாணம் - Mano Red

யாருமில்லா தனிமையில்
அவள்
நிர்வாணமாகி இருந்தாள்,
யாருமே இல்லை
அது நிர்வாணமும் இல்லை....
இப்படியாக முடிகிறது
ஒரு கவிதை..!!

உடை நீங்குவது தான்
நிர்வாணமெனில்,
மானமென்னும்
உடை நீங்கி
உயிர் போவதற்கு
என்ன அர்த்தம்..??

நிர்வாணமென்பது
அசிங்கத்தில் இல்லை,
அடிபணிந்து
அசிங்கப்பட்டு நிற்கையில்
நிர்வாண நிலை புரியும்..!!

உடுக்கை இழந்தவனின்
கையறுநிலையில்
இடுக்கண் கலைந்தால்
நிர்வாணம் மூடி விடுமா..?
இலைமறை காய்
மறைவெல்லாம்
இன்னலில் தென்படுமா..??

அவமானத்தில்
அவலமாய் நிற்கும் நிலையே
நிர்வாணத்தில் உச்சம்,
இது
மிச்சமிருக்கும் உயிரை
துச்சமாய் தின்னும்..!

மனம் நிர்வாணமெனில்
ஆசைகள் களைந்து
ஆன்மாவாக அலையலாம்,
மானம் நிர்வாணமெனில்
ஆடைகள் கிழிந்து
நடை பிணமாகலாம்..!!

நிர்வாண நிலை
யாருக்கும் புரிவதில்லை,
ஆடை துறந்த
துறவிக்கும்,
ஆடை கிழிந்த
இழி பிறவிக்கும்
தெரிந்த புரிந்த நிலை அது..!!

எழுதியவர் : மனோ ரெட் (26-Oct-14, 8:37 am)
பார்வை : 206

மேலே