மலர்தோழி - சந்தோஷ்

இயல்பாய் கவிதையைப்போல ஒரு கவிதை
------------------------------------------------------------------------------

மலரே மலரே
மலர்வாய் மகிழ்வே
மலர்ந்து உதிர்ந்து
மடிவதே உன் வாழ்வே.
உதயத்தில் உனை வாழ்த்தினேன்
அஸ்தமனத்தில் நீ வீழ்கிறாய்.
சன்னதியில் கர்வப்படுகிறாய்.
சடலத்தில் கவலைப்படுகிறாய்.

உனை ஏந்திய
மங்கையின் கூந்தலில்
மனம் வீசுகிறாய்.
திருமணத்தில் மணமக்களுக்கு
மங்களம் ஊட்டுகிறாய்.

ரோட்டோரத்தில் கூவிக்கொண்டிருக்கும்
பூக்காரியின் முழங்கையில்
அளவிடப்பட்ட விலையில்
கைமாறி, கார்கூந்தலேறி
அன்றிரவிற்கு
ஏதோ ஒரு தம்பதியருக்கு
கட்டில் சுகத்தைதூண்டி
கழிந்த வியர்வையில்
பிழியப்பட்டு நசுக்கப்பட்டு
தியாகியாய் மடிந்துப்போகிறாய்.

ஏன் மலர்ந்தாய்
ஏன் மடிகிறாய்
என்று உனக்கும் தெரியவில்லை
உனை ஏன் வளர்த்தேன்
ஏன் பறித்தேன்
ஏன் கைவிட்டேன்
என்று எனக்கும் தெரியவில்லை

ஒன்றுமட்டும் புரிகிறது
மலர்த்தோழியே...!
இந்த உலகம்
என்னைப்போல
உன்னையும் தேவைப்பட்டால்
கொஞ்சி மகிழும்
தேவை முடிந்தால்
குப்பையில் வீசும்.

ஆனாலும் என் தோழியே..!
என்னைப்போல
தினம் தினம்
அனுதாபம் அவமானம்
இல்லாமல்
ஓரே ஒரு நாள்மட்டுமே
வாழ்வு உனக்கு..!

நீ கொடுத்து வைத்தவள்..!



-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (30-Oct-14, 6:40 am)
பார்வை : 113

மேலே