புதிதாய் தெரிகிறது காற்றும்

சுவாசிக்க கடினமாக ஒன்றுமில்லை
ஆனாலும் புதியதாய் இருக்கிறது
புகுந்தவீட்டின் காற்று

உப்பும் காரமும் மாறியிருக்கவில்லை
ஆனாலும் அளவில் சந்தேகமும்
தயக்கமும் வந்துவிடுகிறது

பேசும் மொழியை மறக்கவில்லை
ஆனாலும் வார்த்தைகள் யோசித்து
வேலி தாண்டுகிறது

உயிர் தோழிகளோடு சண்டையேதுமில்லை
ஆனாலும் காரணமின்றி பிரிவு
மெல்ல அதிகரிக்கிறது

அதிகாரத்தோடு கண்டிப்புகள் எதுவுமில்லை
ஆனாலும் திடுக்கிட்டு விழிக்கிறேன்
ஏனென்று தெரியவில்லை

பாசத்திற்கு பஞ்சம் கொஞ்சமுமில்லை
ஆனாலும் அம்மாவின் அலைபேசிகுரலில்
எதையோ உணர்கிறேன்

இங்கு சௌகரியத்திற்கு குறையேதுமில்லை
ஆனாலும் பிறந்தவீட்டிற்கு செல்லும்
நாளையே எண்ணியிருக்கிறேன்

அவரும் தங்கையும்
கொஞ்சி கொள்ளும் போதெல்லாம்
அண்ணனோடு முட்டிக்கொண்டு
பேசாத நாட்கள்
நினைவில் வந்துபோகும்
வார்த்தைகள் தொண்டையில் சிக்கும்

மாமனாருக்கு உணவை
பரிமாறும் போதெல்லாம்
"உப்பு"மா என்று
சிரித்த அப்பா
நினைவில் வந்துபோவார்
மனம் எங்கும் கரிக்கும்

பாங்காய் உனது
வேலைகள் என்ற
மாமியாரின் முகத்தில்
"எதையும் சரியா செய்யாத"
என்று கொட்டும் அம்மா
நினைவில் வந்துபோக
கண்கள் கலங்கி நிற்பேன்

"இதுவும் உன் வீடு தான் "
யார்சொன்னாலும் தூக்கம்
மட்டும் வருவதேயில்லை
எனதறையில் தூங்கியதைபோல

நான் புதிதா
இல்லை எனக்குதான்
இவைகள் புதிதா
சுற்றி அனைத்துமே
புதிராய் தொர்ரமளிகிறது

என்னை பழகிக்கொள்ள
சொல்லும் மனது
அதுவும் புதிதாகவே இருக்கிறது
என்று மாறியதென்றே தெரியவில்லை

திருவிழாவாக நடந்தது திருமணம்
அதனால்தானோ என்னவோ
அனைவரையும் பிரிந்து
என்னை தொலைத்து
தொலைந்துபோய் நிற்கிறேன்

என்னை இழக்கிறேனா ..
இல்லை பெறுகிறேனா...

தினம் பூத்து சிரித்து
வா(நே)சம் வீ(பே)சி
உதிர்ந்து கொண்டிருந்த
ஓர் ரோஜாசெடி
என்னிடம் கேட்டது

த(க)ண்ணீர் ஊற்றி
ஓர் மகளாய்
தாகத்தோடு நின்றேன்

எழுதியவர் : மணிமேகலை (8-Nov-14, 3:02 pm)
பார்வை : 143

மேலே