எனது கவிதைப் புத்தகத்தை புரட்டிப் பார்க்கிறேன் 5

ஞானி 1

ஞான் என்றால்
நான்
நீ என்றால்
அது உன்னைக் குறிக்கும்
இந்த பேதம்
அறுந்தால்
ஞானி
=====================================================================

வேசியின் வேள்வி 2

சரீரத்தை சதைபிண்டமாக்கி
சந்தையின் போகப்பொருளாக்கி
கசாப்பு கடை நடத்தும்
வெட்கம் கெட்ட வேசியே
ஆத்மா என்று ஓன்று உள்ளே
இருப்பதை மறந்து விட்டாயா
என்று கேட்டது ஆத்மா

நாக்கை தொங்கப்போட்டு
அலையும் நாய்களாய்
சதை தின்னும் பருந்துகளாய்
காமக் கழுகுகளாய் திரியும்
சமூகத்திடம் கேள் இந்தக் கேள்வியை

ஒவ்வொரு நாளும் உள்ளே உருகி
இறைவனை நினைத்து
வேதனையை வெட்கத்தை
வெந்து உருகும் உணர்சிகளை
அவிப் பொருளாக்கி
உள்ளே ஒரு வேள்வி தீ
வளர்க்கிறேன்.

நான் இறந்தபின்
ஆத்மாவே
உனக்கு நிச்சயம்
உய்வு உண்டு
=====================================================================

புத்தகம் 3

மலர்கள் தென்றல் தொட்டு
திறக்கும் புத்தகம்
இதழ்கள் புன்னகை தொட்டு
விரியும் புத்தகம்
இமைகள் காதல் தொட்டு
மலரும் புத்தகம்
கவிதை கவிஞன் எழுதும்
காதல் புத்தகம்
மனம் மனிதன் நித்தம்
திறக்கும் புத்தகம்
இயற்கை இறைவன் எழுதிய
அற்புத புத்தகம்
புத்தகம் எல்லாம்
கலைவாணியின் கை அடக்கம்
அந்தக் கலைவாணி
நான் வணங்கும் தெய்வம்
=====================================================================

சவம் சமம் 4

சரித்திரத்தின் பக்கங்களை
பேனாவினால் அல்ல
செயலினால் எழுது
செயல் வடிவம் பெறாத
எந்தச் சிந்தனையும்
பதப் படுத்தி வைத்த
சவத்திற்கு சமம்
=====================================================================

நெஞ்சக் கதவினை யார் திறப்பார் 5

வெளிச்சத்தின் பக்கங்களை
இரவில் மூடிவைத்தால்
பகலின் கதவினை யார் திறப்பார்

காதலின் பக்கங்களை
இமையில் மூடிவிட்டால்
நெஞ்சக் கதவினை யார் திறப்பார்

நனவின் பக்கங்களை
கனவில் மூடிவைத்தால்
வாழ்வின் கதவினை யார் திறப்பார்

கதவுகள் திறக்கட்டும்
காட்சிகள் விரியட்டும்
மானுடம் வாழட்டும்
=====================================================================

வசந்த வாசல் 6

மஞ்சள் வெய்யில் இதமாக
வந்த போதும் வரவில்லை

இளந் தென்றல் காற்று
சுகம் தந்த போதும் வரவில்லை

கவின் சாரல் காற்று
மழை தூவும் போதும் வரவில்லை

நீலமாய் விரிந்து நின்ற வானம்
மாலையாய் கவிந்த போதும் வசந்தம் வரவில்லை

ஆனால்
நீ வந்த போது
உடன் வந்தது
வசந்தம்
என் வாசல் தேடி
=====================================================================

மோகன தாசன் 7

ஆப்பிரிக்காவில் தொடங்கிய
சத்தியப் போரினை
அன்னை பூமிக்கு எடுத்து வந்தான்

வெள்ளை ஆடை ஓன்று இடுப்பில் கட்டி
கையில் ஏந்திய தடியுடன்
பாரதம் முழுதும் பவனி வந்தான்

அமைதியாய் அன்னியரை
எதிர்த்து நின்றான்
பின் வெகுண்டெழுந்து
வெள்ளையனே வெளியேறு என்றான்

சத்தியம் போற்றிய பாரத புத்திரன்
கஸ்தூரிபா வணங்கிய தலைவன்
சுதந்திர மோகன தாசன்

அடிகள் என்றால் அண்ணல் என்றால்
அவன் அடிதொட்டு வணங்கலாம்
மனிதன் என்றால்
அவன் வழி நின்று நடக்கலாம்
=====================================================================

தேசிய வீதி 8

தேசிய வீதி தேசிய வீதி
இது எங்கள் தேசிய வீதி

இரவில் கிடைத்த சுதந்திரத்தை கொண்டு
பகலே பார்க்காத மனிதர்கள் வாழும் தேசிய வீதி
(தேசிய வீதி.........இது ... )

தேசிய கீதங்கள் ஒலிக்க வேண்டிய வீதியெல்லாம்
ஜாதிய ஓலங்கள் கேட்க்கும் தேசிய வீதி
(தேசிய வீதி .... இது .. )

முலாம் பூசிய பொய்கள் எல்லாம்
சத்தியம் போல் பவனி வரும் தேசிய வீதி
(தேசியவீதி .....இது .... )

நல்ல நல்ல தலைவர்கள் எல்லாம் மறைந்து போய்
நாற்காலி நாயகர்கள் பதவி தேடி அலையும்
தேசிய வீதி
(தேசியவீதி...இது ... )

என்று விடியும் எப்போது விடியும் என்று
காத்திருந்த ஏழை பாரதன்
எங்கே எப்போது வெடிக்குமோ என்று
அச்சத்துடன் நடக்கும் தேசிய வீதி
(தேசியவீதி ...இது ... )

இந்தியா என்று வெள்ளையன் கொடுத்த பெயரை
பாரதம் என்று மாற்றாத மனிதர்களின் தேசியவீதி
(தேசியவீதி ....இது .. )

கடல் கொள்ளை மணல் கொள்ளை எல்லாம் போய்
ஆகாய அலைக் கொள்ளையில் அற்புதம்
நிகழ்த்தும் தேசிய வீதி
(தேசிய வீதி.....இது......)

இரவில் கிடைத்த சுதந்திரத்தை மடியில் சுமந்து
பகல் எல்லாம் தூங்கும் மனிதர்களின் தேசியவீதி
(தேசியவீதி ......இது .......)
=====================================================================

பண்பாடும் சோலை 9

சந்ததிகள் சாபக் கேடுகளாக
போகுமானால்
சாத்திரங்கள் காற்றில் பறக்கும்
குணங்கள் குப்பை மேட்டை அடையும்
பண்பாட்டுச் சோலையில்
பாலை விரியும்
கலாச்சார தோட்டம் எல்லாம்
கள்ளி முளைத்த காடாகிவிடும் !
பெற்றவர்கள்
காலத்தே கண்டு
குறை களைந்தால்
அவர்கள் மனிதர் ஆகலாம்
வாழ்க்கை கவிதை ஆகலாம்
சமூகம் பண்பாடும் சோலை ஆகலாம் !
=====================================================================

சுய சரிதை

சுய சரிதை எழுதிட
சாதனை எதுவும்
தேவை இல்லை
சிரிப்பும்
கண்ணீரும்
கலந்த இதயத்தை
திறந்து வைத்தால்
அதுதான்
வாழ்கைக் கதை !
=====================================================================
-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Nov-14, 3:44 pm)
பார்வை : 134

மேலே