முதுகெலும்பி 9

“அப்பொறம்டா முதுகெலும்பி ...ரொம்ப நாளு கழிச்சி பாக்குறோம்..வாவேன்.. அப்பிடியே புளியமரத்தடி கடைக்கிபோயி ரெண்டு மொந்த விட்டுட்டு வருவம்... தெம்பா இருக்கும்ல....” மயிலன் இழுத்தாம்....

"ஐயையோ.. வேண்டாமுடா .. இந்நேரம் போனாக்கா கொழலி அப்பா இருப்பாரு... அவ என்னைய கொன்னு கொலை அத்துருவா அப்பறம் “ன்னேன்...

"என்னது.. கொழலியா..? இது எப்பலேர்ந்து..?இடுப்புக்குள்ள கைவிட்டு அள்ளி சினேகமாத் தூக்கிவிட்டாம் மயிலன்.

"யாருகிட்டயும் சொல்லிராதடா... எனக்குமே சரியா தெரியல... அவெ பேசுறது எல்லாந் தேனக் கொழச்சி தீட்டுற மாதிரிதேங் கெடக்கும்.. ஆனா மனசுக்குள்ள என்ன வச்சிருக்கான்னு சரியாத் தெரியல...
முன்னமே ரொம்ப காயப்பட்டவ..கூடவே சுடுதண்ணி ஊத்துன வாழமரங் கணக்கா இப்பவேற அத்துக்கிட்டு வந்திருக்கா.. நாவேற பலாப்பழம் விழுகுற மாதிரி எதையாவது போட்டு ஒடைக்க.. ஒட்டிக்கிருக்கவ .. கண்ணாடிச் சில்லு மாதிரி ஒடைஞ்சி போயிட்டான்னா .. சீவனம் கஷ்டமாயிரும்டா... ஆடிமாச நாத்தங்காலு மாதிரி பதமாத்தேங் வெதக்கணும்.. இல்லன்னா வெள்ளாமைக்கி கேடு வந்துரும் சொல்லிப்புட்டேம்.."ன்னேன் ..

"நீ... கவலப்படாதடா..நீ இப்பிடி சொன்னதுல எனக்கு சிட்டுக்குருவி பனங்காய கொத்திப்புட்டு சிரிச்சிக்கிட்டே பறக்குமே... அந்த மாதிரி இருக்கு. ரொம்ப சந்தோசமுடா.மத்தவுகளுக்காக தன்ன சுடுகாடாக்கிகிட்டவ அவ. உம்மூலமாவாவது அந்த நெலத்துல ரோசாப்பூ பூக்கட்டும். நாந்தேம் வந்துட்டோம்ல.. ஒருபய தடுக்க முடியாதுரா.. கொழலி எந்தங்கச்சி மாதிரிடா" . கிட்டத்தட்ட கலங்கிகிட்டே சொல்லிக்கிருந்தாம் மயிலன்.

"பாரு... பேசிகிட்டே வயக்காடு வந்துட்டம். வா வா அப்பிடியே போயிட்டு தண்ணியக் கட்டிப்புட்டு வந்துருவம். எப்பிடி இருக்கு பாத்தியா பயிரு.. சும்மா பச்சக்குதுர மாதிரின்னேம்....

“ப்ப்ப்ஈயங்.... ப்ப்ப்ஈயங்...” ஒரு மணிக்கி பஸ்சும் வாரத்துக்கு சரியா இருந்திச்சி. "இஞ்சாரு.... யாருமே வராத நேரத்துக்கு சரியா வருவாம்..இவெம்... வேணுமின்னா ஆடி அசைஞ்சி வருவாம். ஒரு ரவுண்டு வந்துட்டு போகனுமின்னு வேண்டுதலு போல.ன்னு பேசிக்கிருக்கும்போதே அன்னைக்கின்னு அதிசியமா வண்டி நின்னுச்சி. இறங்கினாம் ஓடுநண்டு....

"அட............. என்னடா இந்நேரத்துல...காலேசிலேந்து வாறீயா.? பொங்கலுக்குதே இன்னும் நாளு கெடக்கே.. அதுக்குள்ளயா ஒன்னைய தொரத்தி விட்டுட்டாயங்க..? ன்னேம்... “ மயிலா.. இவம் யாரு தெரியுதா ஒனக்கு..?... புரியாம முழிச்சவன பொடரில தட்டி .... "டேய்.. இவெம் நம்ம ஓடுநண்டுடா.... எப்புடி வளந்திருக்காம் பாரு. கண்ணபொரத்து காள மாதிரி..."ன்னு சொல்ல அவனுக்குள்ள பொங்குன பெரும எனக்குள்ளயும் பரவிருச்சி...

“அட.. அதையாண்ணே கேக்குற...படிக்கப் போனதுக்கு இங்கினையே வய வாய்க்காலப் பாத்துக்கிட்டு இங்கயே கெடந்திருக்கலாம் போல.அம்புட்டும் அழுக்குண்ணே அங்க...

வெயிலடிக்கிறப்ப இடி விழுந்தா எப்புடி இருக்கும்? அப்புடி இருந்திச்சி எங்களுக்கு......! “ என்னடா.. ஊரே சேந்து உன்னைய படிக்க வச்சிக்கிருக்கம் .. நீ பாட்டுக்கு காத்தவராயங் கத பேசுறன்னேம்...

"அட...... அந்தளவுக்கெல்லாம் ஒண்ணுமில்ல. நாம எதோ படிச்சி காசு பணத்த சம்பாரிச்சி மூணுவேள நல்லசோறு திங்கலாமுன்னு படிக்க போறோம். அப்பனாத்தா சம்பாரிச்சி பதுக்கி வச்சிருந்ததுல வழிஞ்சி வழிஞ்சி ஒழுகுனகாச செலவு பண்றதுக்குன்னே வாராய்ங்க செல பக்கிங்க...அவிங்க பண்ற அலும்புக்குதே அளவே இல்லண்ணே.. இப்பக்கூட அவெங்கலாளதா பிரச்சின... அடிதடி.... இழுத்து பூட்டிட்டாய்ங்க. அதேம்.. வந்துட்டெம்"ன்னான் வெறுத்துப்போயி...

காசு இல்லாதவனுக்குதே பிரச்சன.... இருக்குறவனுக்கு கூடவா.. அடக்காட்டுமுனி....! என்னதாம் அப்பிடி...?!"

"ரெண்டு புள்ளைகண்ணே... ரெண்டுமே நல்ல பூத்த பணக்காரைங்க பெத்தது..! ரெண்டு பயலுவ... அவிங்களும் அப்பிடித்தெம். நம்ம பொடையம்பாம்புமா வரப்புப்புல்லுமா கெடப்பாய்ங்க. இவம் புள்ளைய அவெம் எதுவோ பண்ணிப்புட்டாம். அதுக்கு அவிங்க குரூப்பும்.. இவிங்க குரூப்பும் அடிச்சிக்கிட்டாய்ங்க. பொழப்புக்கு படிக்க வந்தேவம் ஓடறான்.. கொழுப்புக்கு வந்தெவம் ஆடறான். என்னத்த பண்ண..?"

"ஒன்னைய எதாவது பண்ணிப்புட்டாய்ங்களாடா...?"மயிலன் மடத்தண்ணி மாதிரி பொங்குனாம்.

“ என்னையவா? அவிங்களுக்குள்ள அடிசிக்கிருவாய்ங்க.. என்னையத் தொட்டா....... சேத்துல ஊறுன காலுண்ணே. ஒரு எத்துவிட்டேம்ன்னா எல்லாமே பிச்சிக்கிரும். அவிங்க அடிச்சிகிறதே சிரிப்பா இருக்கும்..... நமக்கு சரியான சோறு இல்ல இங்க...! தக்காளி அடிச்சி வெளையாடுவாய்ங்க. செண்டு போத்தா கொண்டுவந்து கண்ணுக்குள்ள அடிச்சிக்கிருவாய்ங்க. பைத்தியம்மாரி மண்டைமேல கோடு போட்டுக்கிருவாய்ங்க.கேட்டா.. இதேம் வயசு.. ஜாலிம்பாய்ங்க... "

அதுதானே பாத்தெம். சரி விடு... வந்துதே வந்துட்ட.. இன்னும் கொஞ்சநாளுதான கெடக்கு.. அறுப்புக்கு நின்னுட்டு ஒருசோலியா பொங்கல முடிச்சிப்புட்டு போகலாம் வா"ன்னு சொல்லிக்கிருக்கெம்..........

நடுவால பூந்தான் மயிலன். “ சரிடாம்பி... நீ வீட்டுக்கு போயி உங்கப்பா அம்மாவ பாரு... நானும் இவெனும் ந்தா......... கொக்க்க்க்ம்ம்ம் ".... ன்னவன வாயப்பொத்தி இழுத்தெம்.

"என்னண்ணே.... கொழலி அக்கா வீட்டுக்கு போறீகளா? தையிவேற வருது...ம்ம்ம்.. முதுகெலும்பிண்ணே.... நீ பெரிய்ய்ய்ய்ய ஆளுண்ணே..ன்னாம் ஓடுநண்டு...

பயபுள்ள காலேசிக்கெல்லாம் போயி வளந்திருச்சில்ல.. அதேம்.. சடக்குன்னு புரிஞ்சிருச்சி..

"கள்ளுமொந்த...... எஞ்செல்லம்... ஓடுநண்டு ஒம் ஓட்டம் காலுக்குள்ளதெம் இருக்கணும்.. வாயில இல்ல... ஊருக்குள்ள வெடிச்சி விட்ராதடா..."ன்னு கெஞ்சினேம்.............

"என்னண்ணே......... இப்பிடி நெனச்சிட்ட........ நா அப்பிடியா பண்ணிப்புடுவேன்... அந்தக்கா நல்லா இருக்கணும்ண்ணே.. இன்னும் அறுப்பு கெடக்கு.. இந்தா.. மயிலன் அண்ணே வந்திருக்கு... எம்புட்டு வேல கெடக்கு நமக்கு.......எப்பிடியும் இந்த வாட்டி நெல்ல நல்ல வெலக்கி வித்து ஒங்கலியாணத்த செறப்பா பண்ணிப்புடுவோம்.." தீர்மானமாத்தேஞ் சொன்னாம்.

ரொம்ப சந்தோசமா இருந்திச்சி... இனி அறுப்புக்கு எல்லாருக்குஞ் சொல்லி வைக்கணும்... நெல்லு ரொம்ப பழுத்துட்டா அப்பறம் வெலைய கொறச்சிப்புடுவாய்ங்க.......

(நெல்லும்.... சொல்லும் )

எழுதியவர் : நல்லை.சரவணா (12-Nov-14, 6:07 pm)
பார்வை : 362

சிறந்த கட்டுரைகள்

மேலே