மெளனமாய் ஒரு பூகம்பம்-4 - சந்தோஷ்

மெளனமாய் ஒரு பூகம்பம் - 04

யாரோ பார்ப்பதாய் உணர்ந்த கற்பனாவின் கவனம் கருவாச்சி காவியத்திலிருந்து திசைமாற வைத்தது, புத்தகத்திலிருந்து எழுந்த கற்பனாவின் கண்களுக்கு அவளின் இமைகள் சிறகடித்து முத்தம் கொடுத்துக்கொண்டிருக்க , எதிரிலிருக்கும் வாசுவின் இதயத்தில் லப் டப் கள் வேகமெடுத்தன.

கற்பனாவின் விரல்கள் அவள் மார்பில் விழுந்த கார்கூந்தலை விலக்கும் அதே நொடியில், கற்பனாவின் கயல் விழிகள் வேல் விழியாய் சீறி செல்லமாய் பாய்ந்தது வாசுதேவனின் காந்தவிழிகளில்..!

உடல் சிலிர்த்தான்,
உயிர் அறிந்தான்,
உலகம் மறந்து -புது
யுகம் கண்டான்.

அவள் விழி மோதலினால் -ஒரு
காதல் வலிக்கண்டான்.
-------
ஆண்களுக்கான கர்ப்பப்பை
இருதயத்தில் இருக்கிறதாம்.

அது,
காதலில் கர்ப்பமடைந்து
சதைப்பிண்டமில்லா
உணர்ச்சி சிசுக்களை
சுமப்பதுமாய் பிரசவிப்பதுமாய்
சுகம்காணும் பலமுடையதாம்.

உலக காதலர்களில்
உன்னதமான சில
உண்மை காதலன்களின்
உள்மனமறிந்த ரகசியமிது..!

பொங்கியெழும் காதலுக்கு
நினைவுச்சின்னமாய் ஒரு
தாஜ்மஹாலை நிறுவமுடியா
வசதியில்லா ஹாஜகான்கள்
வாழம் பூமியடா இது..!
இது தமிழ் தேசம் மட்டுமல்ல
காதலை கெளரவிக்கும்
காதலர்களின் தேசம்...!

காதலியோ காதலனோ
தன்னை விட்டுச்சென்றாலும்
காதலை விட்டுத்தராத
புனிதமான சிலர்
புதைக்கப்படா பிணங்களாய்
நடமாடும் தேசமிது.


இப்படியான ஒரு தேசத்தில் வாழம் ஒரு தமிழன் வாசுதேவன். முதன் முதலாய் தன் ஆன்மாவில் படம்பிடித்த ஓர் உருவத்திலும் , கற்பனை தொன்மங்களில் இவன் ஆழ்மனம் ”கற்பனா ”என்று உருவாக்கிய ஒர் உடலமைப்பிலும் நிகரான சாயலிருக்கும் ஒருவளின் விழியின் பார்வையில் காட்சிப்படுகிறான். நிச்சயமாய் இவள் பார்த்த அந்நொடியில் இவன் இருதயம் நின்று மீண்டும் துடித்தது.

இன்னும் இன்னும் இவள் பார்வையின் கோணம் வாசுதேவனின் மீதுதான். இவள் தொடர்பார்வையில் இவன் தொலைந்துக்கொண்டிருந்தான்.
கற்பனா நோக்க நோக்க. இவன் இமைகள் படப்படக்க.
ஆண்மைக்குள் பெண்மைபிறந்து வெட்க ரேகையிட ஆரம்பித்தது.

இந்த பாவையின் பார்வைக்கு என்ன அர்த்தம்.? இது எந்தவிதமான பார்வை..? எரித்துவிடும் பார்வையாய் பார்க்கிறாளோ ? சிநேகத்தை ஏந்திக்கொள்ளும் பார்வையாய் பார்க்கிறாளோ ? பார்த்த நொடியில் காதலை பரிமாற துடிக்கும் பார்வையோ? எவன் என்று அறியாமல் காதலன் என்று ஏற்றுக்கொள்ளும் பார்வையோ?

கேள்விப்பிடுங்கியாய் கேட்டுத்தொலைக்கிறது வாசுதேவனின் பகுத்தறிவு..!
பகுத்தறிவையும் கிழிக்க தொடங்கியது இவனின் பேராவல்கள். ஆவல்கள் ஆசை பேரலையாய் ஆர்பரிக்கிறது.

இதோ..! இன்னும் இன்னும் இந்த விழிக்காரி பார்த்துக்கொண்டேதான் இருக்கிறாள்.
என்ன நினைத்து என்னை பார்க்கிறாள் என்று எண்ணத்தொடங்கியவனுக்கு . கற்பனாவின் விடாப்பிடியான விழிப்பார்வையில் எழும் சூறாவளியில் உடல்வியர்க்கும் புதுசுக உணர்வை வாசுதேவனுக்கு கொடுக்காமல் இல்லை.


கற்பனா பார்வையின் அர்த்தம் அறியாமலே கருப்பழகியின் பார்வையை இவன் விழியால் பருகத்தொடங்கினான்.
----

இவன் இவளின் நெற்றியை உற்றுப்பார்க்க, இவள் உணர்வு சீண்டலில் நிமிர்ந்து இவனை பார்க்க. விழியும் விழியும் மோத காதல் பற்றிக்கொள்ளுமா?

ஒரே அலைவரிசையிலிருக்கும் இருவர் சந்திக்கும்போது பார்வையால் காதல் பற்றிக்கொள்ளத்தான் வேண்டும். அதுதான் காதல் ..!

பெண் தேடும் படலத்தில் ஓர் ஆண் ஒரு பெண்ணை பார்க்கும் அந்த ஒருசில நொடியில் தீர்மானிக்கிறானே இவள் தான் என் மனைவி என்று. ஆழ்மனதில் உருவகப்படுத்திய ஒருவளை காணும்போது மட்டுமே, இப்படியான ஒரு தீர்மானம் தானாக முன்மொழியும் . வெறும் பொன், பொருள், பெண் வீட்டின் வசதிகளை கண்டு தீர்மானிக்கும் எவனுக்கும் இந்த உன்னதம் , இந்த ஆழ்மனதின் புனிதம் பைத்தியகாரத்தனமாகவே தோன்றும்.

இவனுக்கு இவள்தான் என எழுதிவைத்திருக்கிறது என்பார்களே. இங்கே இவனுக்கு இவள் என்று எழுதியது யார்.? எந்த மொழியில் எழுதப்பட்டது?
யாரும் அதை அறிய முற்படுவதில்லை. இவனுக்கு இவள் என்றும் இவளுக்கு இவன் என்றும் எழுதப்பட்ட இடம் ஆழ்மனம். ஆழ்மனதில் எழுதப்பட்டவர்கள் துணையாக வரும் போது வாழ்வு பரிபூரண சந்தோஷமாக அமைந்துவிடுகிறது. இணைப்பிரியா ஜோடியாய் வாழ்ந்த வாழ்ந்துக்கொண்டிப்பவர்களும் , இணைப்பிரிந்தால் உயிர்விடும் தம்பதிகளும் இப்படிப்பட்ட ஆழ்மனதில் தங்கள் துணையயை உருவாக்கியவர்களாக இருப்பர்.

மனம் என்ற சொல்லுக்கே அர்த்தம் தெரியா சிலர் யாரையும் திருமணம் புரிந்து வாழலாம். அந்த பந்தத்தில் எந்த புனிதமிருக்கிறது.? புனிதம் என்ற சொல்லே காதல் தானே தருகிறது. அந்த காதல் என்பதே ஆழ்மனதில்தானே இருக்கிறது. வெளிமனதில் சதைகளை கண்டு காமத்தில் மூச்சடைத்து
“ காதல்” என்று சொல்பவர்கள் எவருக்கும் இந்த ஆழ்மன புனிதம் புரியாது.
---
இப்படியான ஆழ்மன புனிதமேடையில் நடமாடிய வாசுதேவனின் ” கற்பனா ” இப்போது இவன் எதிரில்...... இவன் விழிகளை நோக்கியவாறு அவள் விழிகள்.. !


இருவருக்குள்ளும் இரண்டு நிமிடங்களுக்கு மேற்பட்டு நீடிக்கிறது விழி வழியாக காதல் அறிமுகம்..!

மெளனமாய் பரிமாறிக்கொண்டிருக்கும் பார்வையில் காதல் பூகம்பத்தை உருவாக்கிக்கொண்டிருக்கும் நேரம் இது....!
மூன்றாம் உலகப்போர் கருவாச்சி காவியத்தில் வளருமா ?
கருவாச்சி காவியத்தில் மூன்றாம் உலகப்போர் நடக்குமா ?


( தொ ~ ட ~ ரு ~ ம் )

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (14-Nov-14, 3:07 pm)
பார்வை : 188

மேலே