மண் வாசனை

இது எத்தனை பேருக்குத் தெரிந்திருக்குமோ ஆனால் இதை எம் வாழ்வில் இருந்து பிரிக்க முடியாது.
தட்டிவான் யாழ்ப்பாணத்தில் குறிப்பிடத்தக்க ஊர்களுக்கிடையில் ஓடும் மிகப் பிரபலமான வாகனம். பருத்தித்துறையில் தொடங்கி நெல்லியடி ஊடக கொடிகாமம் கொடிகாமத்தில் இருந்து சாவகச்சேரி வரை போவது. இந்த வாகனம் பிரிட்டிஷ்காரனின் தயாரிப்பு.
இந்த தட்டிவானில் பயணம் செய்தால் நீங்கள் உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் வாகனங்களிலும் பயணம் செய்யலாம்.அவ்வளவு சௌகரியம் .

இனி அதன் வடிவமைப்பை பற்றி சொல்ல வந்தால் முன்னுக்கு மட்டும் கண்ணாடி மற்றப்படி யன்னல் கதவு எல்லாம் திறந்த வெளி. ஆச்சி அப்புமார் வெத்திலை குதப்பித் துப்ப ஏதுவானது ......
இருக்கைகள் பெரும்பாலும் மரத்தாலே ஆனவை. பின்னுக்கு பாதி முதுகுதான் சாஞ்சு இருக்கமுடியும். நீலக் கலர் பெயிண்ட் சுண்ணாம்பு வெத்தலை கறை படிந்து மல்டி கலரில் ஜொலிக்கும்.

எப்படியும் நெல்லியடிச் சந்தியில் இருந்து கொடிகாமம் சந்திக்கு 7 மணிக்கு வந்து விடும் தாளயடிக் கடலில பிடிச்ச மீன் பெட்டி, மரவள்ளிக் கிழங்குச் சாக்கு தேங்காய் மூட்டை மரக்கறி இத்தியாதிகள் பின் பக்கத்தில் கூரையில் பக்குவமாய் அடுக்கி இருக்க சாவகச்சேரி சந்தை நோக்கி பயணம் தொடங்கும்.

எவ்வளவு சனமாக இருந்தாலும் கொண்டக்டர் வானை எடுக்கமாட்டார்.முன் பக்கத்தில் டிரைவர் சீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் (அது அவருக்கான பிரத்தியேக ஆசனம் )ஆங்கில வாத்தியார் கயிலாயநாதன் கோகிலா கடையில வாங்கின உதயன் ஈழனாதம் பேப்பரை திருப்பித் திருப்பிப் படிச்சு சலித்து எங்க தம்பி இனியாவது எடுப்பா வானை எண்டு சொல்ல சேர் கொஞ்சம் பொறுங்கோ சனம் வரட்டும் எப்புடியும் அரை மணித்தியாலத்தில் பள்ளிக்கூடத்தில நிப்பன் யோசிக்காதேங்கோ இடையில ஹெலி பொம்பர் புட்காரா அடிக்காட்டி சரி.... எண்டு சொல்ல பின் சீடில் இருக்கும் பள்ளிகூடப் பொடியள் எட்டி ஹார்ன் அழுத்த 'பாப்! பாப்!' சத்தம்! யாரடா அவன்... அண்ணை வானை எடுங்கோ.... அங்கு களேபரம் தொடங்கும்.

பெரும்பாலும் ஒரே ஆட்களே தட்டிவானில் பயணிப்பார்கள். இவர்கள் சாவகச்சேரியில் வேலைபார்ப்பவர்கள், கொடிகாமம் சந்தையில் வியாபாரம் செய்பவர்கள்,பள்ளிச் சிறுவர் ஆசிரியர் என ஒரே மக்கள் செல்வதால் அவர்களுக்கு பலரையும் பழக்கமாய் இருக்கும் இதனால் ஒருவர் வரப் பிந்தினால் கூட வானை எடுக்கமாட்டார் . செல்ல முத்து ஆச்சி வரவில்லை தணிகாசலம் அண்ணை வரவில்லை கொஞ்சம் பொறுங்கள் என அவர்களுக்காக காத்துக் கிடப்பார்.

எல்லாரும் வந்தாச்சு அண்ணை எடு வானை கண்டக்டர் அலற டிரைவர் அந்த நேரம் பாத்து தேத்தணி குடிக்கப் போவார். வானும் தன் பாட்டுக்கு உறுமிக் கொண்டே இருக்கும்.

டிரைவர் வந்து வானை எடுக்க அண்ணை பாட்டைப் போடு எண்டு நாங்கள் சொல்ல எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம் ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள்.... கோரஸில் பசங்கள் விசில் அடிக்க சின்னத்தம்பி அண்ணை அந்த நேரம் பாத்து எட்டி யன்னலால் விரல் இரண்டையும் வாயில் வைத்து பக்குவமாய் வெத்திலை துப்ப சோளகக் காத்துக்கு அது திசை மாறி முன் சீடில் இருந்த ஆங்கில வாத்தியார் வெள்ளை ஷேட்டில் கோலம் போட அவர் மூக்கைச் சுளிக்க பயணம் தொடரும்.

கெதியா ஏறணை ஆச்சி!", "அந்தப்பெட்டியத் தள்ளி வையுங்கோ அம்மா" என்ற சத்தம் கேட்காமல் அந்தப் பயணங்கள் சாத்தியமில்லை. "கிறீச் கிறீச்" என்ற பிணைச்சல்கள், பலகைகளின் சத்தத்தோடு தாலாட்டுவதுபோல அசைந்துகொண்டு..... மண் புழுதியையும் தாரளமாக தெளித்துக் கொள்ளும் இனிமையான பயணங்கள் என்றும் மறக்க முடியாதவை!

யாழ்ப்பாண இடப்பெயர்வில் சிறியளவு பணியாற்றினாலும், உள்ளூரளவில் அதிக பணியை தட்டிவான்கள் ஆற்றியிருக்கின்றன. பயணிகளை, அலுவலக உத்தியோகத்தர்களை ஏற்றி இறக்குவதை விட, வியாபாரிகளை ஏற்றி இறக்கும் பணியையும் செய்திருக்கின்றன.


1990 களில் மரணித்த போராளிகளை உரிய பெற்றோர்களின் வீட்டிலிருந்து துயிலுமில்லங்கள் நோக்கி எடுத்துச் செல்லும் பணியையும் தட்டிவான்கள் ஆற்றின. மனதை உருக்கும் ஒரு துயரக் கீதத்தை பிறப்பிக்கும் ஸ்பீக்கரை தட்டிவானின் மேலாகக் கட்டி, அதனைச்சுற்றியும் சிகப்பு மஞ்சள் கொடிகள், வாழை மரங்கள் கட்டி, நடுவில், தட்டிவானின் நடுவில் குறித்த போராளியின் உடலம் வைக்கப்பட்டிருக்கும். அதன் கால் மாட்டில் இரு போராளிகள் துப்பாக்கிகளுடன் நிற்பர். தலை மாட்டில் தாயும் ஏனைய உறவினர்களும் அமர்ந்து, துயிலுமில்லம் வரைக்கும் அழுதபடி வருவர். அந்தத் தட்டிவானைக் கண்டதும் மக்கள் வீதியால் பயணிப்பவர்களும், ஊர்களுக்குள் வேலை செய்கின்றவர்களும் தட்டிவான்களைப் பார்த்தபடி அமைதியாக நிற்பர்.

டயர்கள் தட்டுப்பாடான அந்தக் காலகட்டத்தில் வைக்கோல் அடைந்தும், மண் அடைந்தும், காற்றில்லாமலும் போரில் மரணித்தவர்களின் உடல்களைக் காவினஇந்தத் தட்டிவான்கள்.

இப்படியே பொருளாதாரத் தடைகள், பாதைத் தடைகள், இடப்பெயர்வுகள் என அலைந்துழன்ற தமிழர்களைக் காவியதில் தட்டிவான்களின் பங்கு, மாட்டு வண்டில்களுக்கும், சயிக்கிள்களுக்கும் முந்திய இடத்தில் இருந்தது. 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜப்பானிலிருந்து வந்த மினி பஸ்கள் அந்த இடத்தைப் பிடித்துத் தட்டிவான்களை மறக்கச் செய்துவிட்டன.

எழுதியவர் : சிவநாதன் (14-Nov-14, 10:04 pm)
பார்வை : 248

மேலே