நாம் எங்கே போகிறோம்
அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றம் என்று
பழமையும் சேர்த்து நம் பண்பாடையும் சேர்த்து தொலைக்கிறோம்!
எங்கே போகிறோம் நாம்?
நாட்கணக்கில் உழைத்தும் உடலுக்கே வேலை அன்று!
மணிக்கணக்காய் உழைத்தும் மூளைக்கே வேலை இன்று!
அறிவியல் வளர்ச்சியை நான் குறைகூறவில்லை
அறிவினை பிழிந்து மன உளைச்சலை சம்பாதித்து என்ன புண்ணியம்?
எங்கே போகிறோம் நாம்?
பணம் தேவை தான்...பணமும் தேவை தானே தவிர
பணம் மட்டுமே தேவை என்றில்லை!
கணினி வழி முன்னேற்றம் வரமே! வரவேற்க தக்கதே!
இரவு பகலாய் அதனுள் மூழ்கிவிட்டு,
மூளைக் காய்ச்சலுக்கு ஆளாகும் கொடுமையை என்ன சொல்ல?
எங்கே போகிறோம் நாம்?
உணவு முறையிலும் கூட விதிவிலக்கில்லை!
வயிற்று பசிக்கும் உடல் நலத்திற்கும் உண்டோம் அன்று!
நாவின் ருசிக்கும் உடல் அழகிற்குமே உண்கிறோம் இன்று!
புதுரக அரிசிகளை இறக்குமதி செய்து, கிடைப்பதற்கரிய
கைக்குத்தல் அரிசிகளெல்லாம் ஏற்றுமதி செய்துவிட்டோம்!
ஒற்றை சுருள், இரட்டை சுருள் என ஏதேதோ வந்துவிட
கிராமத்து கூழும் கம்பங்களியும் எங்கோ போய்விட
நம் அடையாளம் மறந்து அறியாமையில் அழிவை விரும்புகிறோம்
எங்கே போகிறோம் நாம்?
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே
முன் தோன்றியது என் தமிழ் என
மார்தட்டும் நாம், நம் தமிழ் மொழி பேச வெட்கப்படுகிறோம்!
பிறமொழிகள் வேண்டாம் என ஒதுக்கவில்லை நான்!
இவைகளோடு ஒப்பிட்டு நம் மொழியை தாழ்த்த வேண்டாமென்கிறேன்!
நாம் நம் நாட்டில் நம் மொழியை பேச பெருமைப்பட வேண்டுமென்கிறேன்!
எங்கே போகிறோம் நாம்?
தலைமுறை தலைமுறையாய் விவசாயம் செய்து,
உலகின் பசியாற்றிய பூமித்தாயை விற்று
அடுக்குமாடிகளும், வானுயர்ந்த ஆலைகளும் அமைத்து
நாட்டின் முன்னேற்றம் என்கிறோம்!
எங்கே போகிறோம் நாம்?
பணம் தான் உணவா?
கட்டிடம் தான் கற்கண்டா?
எங்கே போகிறோம் நாம்?
வளரும் விஞ்ஞானமே!
வளர்க்கும் சமுதாயமே!
விடையுண்டோ இதற்கு?
எங்கே போகிறோம் நாம்?