என் காதல்

ஆண்கள்பெண்கள் பயின்றுவந்த மேல்நிலைப் பள்ளியதில்,
புதிதாயொரு தேவதைதான் அன்றுவந்து சேர்ந்தது;
பன்னிரெண்டாம் வகுப்பினிலே நானுமங்கு மாணவன்தான்,
மதிமுகத்தைக் கண்டதுமேன் மதிமயங்கிப் போனது;

வகுப்பறைக்குள் அவள்காலை வைத்தஅம் மாத்திரமே,
நெஞ்சறைக்குள் வலக்காலை பதித்துஅவள் புகுந்திட்டாள்;
கண்களை ஈர்க்கின்ற காந்தமாக நடந்தவள்,
சரியாயென் பக்கவாட்டில் தன்னிருக்கை தேர்ந்திட்டாள்;

அன்றிருந்து நூல்நோக்க என்நெஞ்சம் ஒப்பவில்லை;
அவளசைவு ஒன்றும்என் பார்வைக்குத் தப்பவில்லை;
அவள்செல்லும் இடமெல்லாம் தூரத்தில் நான்தொடர,
என்னையவள் கவனிக்க வெகுகாலம் ஆகவில்லை;

இருந்தபின்னும் இப்படித்தான் என்நாட்கள் நகர்ந்தது;
நான்ஊற தேவதையின் கல்மனமும் தேய்ந்தது;
நிதம்ஒரு முறையேனும் விழிசமிக்ஞை கிடைத்தது;
தோழியரை சாக்காக்கி எனைப்பார்த்து சிரித்தது;

சீக்கிரமே அவள்தோழி எனக்கும்கூட தோழியாக,
காரியத்தை காகிதத்தில் எழுதிக்கொடுத்து அனுப்பினேன்;
காதல்பித்து தலைக்கேறி செயலெல்லாம் தடுமாற,
வீட்டில்வினவும் பெற்றோரை ஏதோசொல்லி மழுப்பினேன்;

தூதவளைச் சேர்ந்தவுடன் ஆவலோடு பிரித்திருப்பாள்;
எதையெதையோ எண்ணித்தான் கடிதத்தைப் படித்திருப்பாள்;
"நதிக்கரைக்கு வரவும்"என்ற ஒருவரிச் செய்திகண்டு,
நிச்சயமாய் சத்தியமாய் ஏமார்ந்தே போயிருப்பாள்;

அன்றுமாலை அவளுக்காய், குறித்தநேரம் முன்னதாக,
தோழர்கூட அறியாமல் தப்பிவந்தேன் அரிதாக;
மீனமிரண்டு விழியாக, மௌனமே மொழியாக,
காத்திருந்த எனக்காக அவளும்வந்தாள் தனியாக;

நிலம்செய்த புண்ணியமும் நான்செய்ய வில்லைபோல;
அவள்பார்வை மொத்தமும் அதன்மீதே இருந்தது;
பொறாமையில் நிசப்த்தத்தைக் குலைப்பதற்கு நான்முயன்றும்,
வார்த்தையேதும் வரவில்லை வாயுதான் வந்தது;

மனப்பாடம் நான்செய்த வரியெல்லாம் மறந்திருக்க,
கேலியாக என்னைப்பார்த்து சிரித்தது அந்நதிதான்;
தனிமையில் தேவதையும் வரம்கொடுக்க வந்துநிற்க,
எந்தன்வாய் ஊமையாகிப் போனதேனோ என்விதிதான்;

எப்படியோ முயற்சித்து "நான்"என நான்துவங்க,
இருவரின் இடைவெளியைத் திருடியதார் தெரியவில்லை;
என்மார்பில் முகம்புதைத்து, வளைக்கரத்தால் எனைவளைத்து,
கட்டிநிற்ப தவளென்று நான்நம்ப முடியவில்லை;

"என்னுயிரே! நானுமுன்னை காதலிக்கி றேன்'என்று,
என்வார்த்தை முடியும்முன் அவள்முடித்தாள் மொத்தமாக;
கேலிசெய்த நதித்தலையில் நான்சிரித்தோர் குட்டுவிட,
பார்வையை திருப்பிக்கொண்டு ஓடியது வேகமாக!!!

எழுதியவர் : அ ஜோயல் சாம்ராஜ். (17-Nov-14, 5:59 pm)
பார்வை : 425

மேலே