கண்முத்து காண்க
வேய்ங்குழற் நிறமொத்த
இமையெனுஞ் சிப்பிகள்
முத்தன்ன கருமணியைத் தாங்குதோ!? – கருமணி
மெத்தன்ன வெண்பஞ்சு மெத்தையில் தூங்குதோ?!
சித்தமும் பித்தத்தால்
உன்மத்த மாகுதே?!
மனமுந்தன் கண்மத்தால்
கடைபடல் நேருதே?!
கோரவும் இல்லையுன்
மான்விழிப் பார்வை - நீ
பார்த்ததும் பாதிநான்
எங்குதான் போயினேன்?!
மீதியுங்கூட வென்
மெய்ம்மொழி கேளாமல்
ஆதிநீ தானென
ஆடுதே கண்மணி...?!
பாடுதே ராகமும்..
ஓடுதே சோகமும்...
போகமா? மோகமா?
யாது நீ? சொல்லிடு....
வேய்ங்குழற் நிறமொத்த
சிப்பியுள் வெண்பஞ்சு
மெத்தைமேல் துயிலுண்ட
மயிலிந்தக் கண்மணி!
வெயிலதன் வினை தீர,
நிழலதைத் தருகின்ற
குளிர்பசும் நிறங்கொண்ட
மரமிந்தக் கண்மணி!!
உருமுமென் உள்ளத்துள்
உரமிட்டுத் தரமாக்கி
உயர்வாக்கும் உணர்வதை
உதிர்க்கும் இக் கண்மணி!
மதியதால் மனமிது
மரத்தேதான் போனதும்
மகிழ்வெனும் ஒளிதர
வருவாயென் கண்மணி!!!
வருவாயென் கண்மணி!!!
வருவாயென் கண்மணி!!!
*****************************************
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்