மாரிச்சாமி
இன்னிக்காவது என் எழுத்து அச்சிலேறுமா
என் கவலை எனக்கு
இன்னிக்காவது காசு அனுப்புவானா
தந்தையின் கவலை அவருக்கு
மண்ணை நம்பி இருந்தவரு
மகனை நம்பி இருக்காரு...
விதை நெல் வாங்க காசில்லை
விதைச்சாலும் விளைய வாய்ப்பில்லை
ஏர் பிடிச்சு என்ன எழுத வச்சவரு
பிள்ளை தரிசாகி போயிட்டானேன்னு கலங்குனவரு
நிலத்தை முதப்பிள்ளையா நினைச்சு கொஞ்சுனவரு
நிலம் தரிசாகிப் போனதும் பாதி செத்துட்டாரு....
பருவமழை பொய்த்து பல காலமாச்சு
ஆறு குளம் வத்தி கருவேலங் காடாச்சு
ஆத்து மணல் அள்ளுன ஒன்றியம்
ஆறே வருசத்துல அமைச்சராகி போயிட்டாரு
ஒட்டுப்போட்ட சனம் ஒசத்தியா பேசுது
ஒழுகுற வீட்டுல ஓட்டப் பானைய வச்சுக்கிட்டு.....
கடவுள் கண்டெடுத்த விவசாயிக பலரு
பரதேசம் போய்ட்டாக பஞ்சம் பொழைக்க
பொண்டாட்டி இல்லாத சம்சாரி மாதிரி
ஆளில்லாத ஊருக்கு கட்ட மீசக்காரு
பெரசன்ட் ஆகிட்டாரு அன்ன போஸ்ட்ல
கொடிக் கம்பம் நிக்குது கொடியில்லாம....
அப்பன் பாட்டை கதையா எழுதி நிக்குறேன்
பதிப்பாளர் வீட்டு வாசல்ல புத்தகத்தோட
மாரிசாமி நல்ல மனம் கொண்டவரு தான்
இருந்தாலும் பணம் பண்ணும் மனம் யோசிக்குது
புதுசா கொடி தூக்குறவன் பின்னே போற
ஊர் உலகம் புதுசா எழுதுறவன வாசிக்குமா???....
மனசு வச்சா எழுத்து அச்சில் விழும்
விழுந்த எழுத்து மண்ணில் விதையா விழும்
மேகம் கருத்தா என்ன கெட்டா போகும்?
மாரி பொழிஞ்சா பூமி அழிஞ்சா போகும்?
மகனை விட இப்ப மாரிய கோவிச்சுக்கிறாரு
இருவரும் மாரிச்சாமியின் வரவை நோக்கி....
- தமிழ்நிலவு