விரக்தியை விரட்டிவிடு மனமே - சந்தோஷ்

வாழ்க்கை பல விசித்திரங்களை திருப்பங்களை கொண்டது. தீடிர் திருப்பங்கள் இருதயத்தினை திடுக்கிட வைத்து வாழ்க்கையின் அஸ்திவாரத்தை அசைத்துப்பார்க்கும். . ஒரே நாளில் அடுத்தடுத்த திருப்பங்கள், ஒரு முடிவை நோக்கி நகர்வதற்குள் பல முடிச்சுக்களுக்கு தீர்வுகளை நோக்கி கட்டாயப்படுத்தப்படும் படு அவஸ்தையான அந்த நாள் இப்பொழுது எனக்கு.., எனக்கும்...!

அலைப்பேசியில் பேசப்பட்ட அந்த விவாதங்கள் என்னை அடக்கம் செய்யவே முற்பட்டன. எதற்காக சென்னைக்கு வந்தேனோ... அதற்கான ஊக்கக்காரணியே கதறி உடைந்த அந்த நிமிடம் என் இருதயம் வெடித்துப்போன மாயையை உருவாக்கியது. நிச்சயம் ஒரு பலவீன மனதுடையவனாக நானிருந்தால், இந்நேரம் இதை நான் எழுதமுடியாமல், ஏதோ ஒரு மின்மயானத்தில் பிணமாக சாம்பலாகி விட்டிருப்பேன். நல்லவேளையாக நான் நேசிக்கும் என் தமிழ், ஓர் எழுத்தாளன் என்ற என் திமிர் எனக்குள் ஒரு தன்னம்பிக்கையை விதையிட்டு என்னை இன்னும் இன்னும் “ வாழ்ந்துக்காட்டு “ என்று ஊக்கமளித்துக்கொண்டிருக்கிறது.

பொதுவாகவே என் சோகத்தை ஆத்திரத்தை கவிதையில் எழுதி காட்டி தணித்துக்கொள்வதுண்டு. ஆனால் இந்த விஷயத்தில் எதையும் வெளிப்படுத்திவிடக்கூடாது. வெளிப்படையாக எழுதி யாருக்கும் சங்கடத்தை உருவாக்கிவிடக்கூடாது என்பதை தீர்க்கமாக தீர்மானித்துவிட்டேன். சரி பின்பு எப்படி என் மனப்பாரத்தை இறக்கி வைப்பது...?

என் சக எழுத்தாளர், ஒரு வகையில் எனது குரு, சமீப காலத்தில் நெருங்கி பழகிக்கொண்டிருக்கும் அற்புத ஆற்றலுடைய என் நண்பனை அழைத்து ஆறுதல் தேட சொன்னது மனது. அழைத்தேன்.. பேசினேன். சொல்லவேண்டியதை சொல்லாமல் இலக்கியங்களை பகிர்ந்திட்டேனே தவிர இறக்கி வைக்க வேண்டிய மனப்பாரத்தை அவரிடம் சொல்லி ஆறுதல் தேட ஏனோ மனம் விரும்பவில்லை.

ஓர் ஆண் மகன் அழக்கூடாது...!
இந்த சமூகத்தின் மனவியாதி இது. இந்த சமூகத்தின் மூடநம்பிக்கை இது..!

துக்கம் தொண்டை அடைத்தால் என்ன தான் செய்வது மூடர்களே...?
நான் அழுதிடவேண்டும்.. அழுதே தீரவேண்டும். மெரீனா கடற்கரைக்கு சென்று அழுதிடலாம். என் கண்ணீரை கடலில் சிந்தி சோகத்தை கரையேற்றிவிடலாம் என முடிவெடுத்து வடபழனியிலிருந்து அண்ணா சதுக்கம் செல்லும் பேருந்தை எதிர்பார்த்து காத்திருந்து காத்திருந்து கடைசியில் எரிச்சல் மேலோங்க... கடற்கரைக்கு நடந்தே செல்லலாம். முடிவெடுத்து நடையளந்தேன்.

வடபழனி, கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம் வழியாக அண்ணா சாலை வந்தடைந்துப்போது என் மனதை விட கால்கள் சோர்ந்துவிட்டது.

LIC அருகிலிருந்த ஒரு பெட்டிக்கடையில் வெகுநாட்களுக்கு பிறகு ”கிங்க்ஸ் சிகரெட்” வாங்கி பற்றவைத்துக்கொண்டு சோகத்தையும் புண்பட்ட இருதயத்தையும் புகைவிட்டு ஆற்றிக்கொண்டேன். மீண்டும் நடை.. நடை.. நடந்து ... நடந்து கடற்கரை சாலையிலுள்ள உழைப்பாளர் சிலையை கடந்து, கடற்கரை மணலில் பாதம் பதித்த போது நேரம் இரவு 10 :30 .

ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளில் என் கால்களை நனைத்துக்கொண்டே பல முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் மனதிலுள்ள பாரங்களை கண்ணீராக மாற்றி கடலையில் சிந்தி மனதை தேற்றிக்கொண்டேன்.

இதுதான் வாழ்க்கை என்பதல்ல..
இனிதான் வாழ்க்கை இருக்கிறது.
அவமானங்களை உரமாக்குவோம்.
புறக்கணித்தவர்களுக்கு நன்றி சொல்வோம்.
அன்பு, பாசம், நேசம் எல்லாம் கடந்து
இலட்சியம் என்று ஒன்று இருக்கிறது.
சாதித்துக்காட்டுவோம். ..!
என ”ஓம்” போட்டு முடிவெடுத்த நேரம் நள்ளிரவு மணி 12:30. மிகவும் சாந்தமாக, புதிய மனநிலையோடு, உற்சாக மனிதனாக மாறிய அந்த தருணத்தில் என் முதுகில் ஒரு உருவம் கை வைத்தது.

“ யாரு சார் நீங்க..? இந்நேரத்தில இங்க என்ன செய்றீங்க ?“ போலீஸ்காரர் ஒருவர்.

மெளனமாக சிரித்தேன்.

” என்ன காதல் தோல்வியா ? ” காவலரின் பேச்சில் நக்கல் இழையோடியது..

பலமாக சிரித்து பதிலளித்தேன்.


இந்த உலகில்
தோல்விப்பெறாத ஒரே விஷயம்
காதல் மட்டுமே...!



”அட கவிதை எல்லாம் சொல்ற... பைத்தியக்காரனா நீ ? “ போலீஸ்காரர் என்னைப்பற்றி ஏதோ முடிவெடுத்துவிட்டார் .

ஹா ஹா ஹா ஹா

ஆம் ! நான் பைத்தியக்காரன் தானே...!

விரக்தியை விரட்டிவிட்ட தெளிவான பைத்தியக்காரன்....!

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (30-Nov-14, 1:37 am)
பார்வை : 191

மேலே