++திடுக்கிடும் திருப்பங்கள்++முழுக்கதை++

++திடுக்கிடும் திருப்பங்கள்++முழுக்கதை++


பகுதி ஒன்று:

நிலவிற்கும் பயம் வந்து ஒளிந்து கொண்டதோ என்னவோ.....

இருட்டோ இருட்டு.. இல்லை ஒரே கும்மிருட்டு எங்கெங்கு காணினும்...

அமாவாசை இரவு.....

அந்த அமானுஷ்ய அமைதியை குலைக்கும் வகையில்

"சரக்" "சரக்" "சரக்" "சரக்"

என்ற சத்தம் எங்கிருந்தோ மெதுவாக ஆரம்பித்தது....

அது சிறிது சிறிதாக அபாயகரமாக கேட்கத்துவங்கியது....

இரண்டு கால்கள்...

இல்லை இல்லை நான்கு கால்கள் ஓடிக்கொண்டிருந்தன...

காலணி அணியாத இரண்டு கால்களை காலணி அணிந்த இரண்டு கால்கள் துரத்திக்கொண்டிருந்தன...

சட்டென வழியில் படுத்திருந்த இரண்டு தவளைகள் 'பக்' 'பக்' என்று தனது சகவாசிகளுக்கு எச்சரிக்கை கொடுத்துவிட்டு ஓடுவோரின் ஒத்தயடிப் பாதையைக் காலி செய்தது....

துரத்தல் இப்போது இன்னும் வேகமெடுத்தது...

முன்னால் ஓடியவன் ஓடி ஓடி ஊரின் எல்லையை அடைந்தான்...

அடுத்து ஒரு காட்டெருமை போன்ற கருமையுடன் ஒரு பெரிய மலை குறுக்கிட்டது...

முன்னால் ஓடியவன் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மலையில் ஏற ஆரம்பித்து விட்டான்...

துரத்துபவனும் எளிதில் விடுவதாக இல்லை.. அவனும் அவன் பின்னாலே மலையேறி மலையைக் கடக்க ஆரம்பித்துவிட்டான்....

மலையைக் கடந்தவுடன் "சொய்" என்ற சத்தத்துடன் ஒரு காட்டாறு ஓடிக்கொண்டிருந்தது....

முன்னால் ஓடியவன் ‘எவ்வளவு தண்ணி’ ‘எவ்வளவு வேகம்’ ‘என்ன ஆபத்து’ என்று எதையுமே பார்க்கவில்லை...

அவன் பாட்டுக்கு ஆற்றில் குதித்து நீச்சல் அடிக்க ஆரம்பித்துவிட்டான்....

துரத்துபவன் விடுவானா? அவனும் தான்....

முன்னே ஓடியவன் கரையை அடைந்தவுடன் அவனிடம் இருந்த சக்தியெல்லாம் இழந்ததைப் போல உணர்ந்தான்....

அவனால் அதற்கு மேல் ஓட முடியவில்லை.. அருகிலேயே ஒரு பாழுங்கிணறு கண்ணில் பட்டது..

சடாரென அதற்குள் குதித்துவிட்டான்...

குதித்தானா இல்லை யாராவது தள்ளினார்களா...? எனத் தெரியவில்லை

பின்னாலேயே வந்தவன் பெருமூச்சுடன் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தான்....

உள்ளே....

உள்ளே....

தண்ணீர் துளிகூட இல்லை....

முன்னே குதித்தவன் அங்கே சிலையாகிப் போயிருந்தான்...

இவனுக்கு பக்கென்று இருந்தது...

அப்போது தான் கவனித்தான்... தன் காலில் இருந்த ஒற்றைச்செருப்பை...

துரத்திக்கொண்டு வந்ததில் இவனது ஒரு செருப்பு எங்கோயோ விழுந்துவிட்டது போல....

எந்த யோசனையுமின்றி ஒரு குழம்பிய சிந்தனையுடன் வீட்டிற்கு திரும்ப எத்தனித்தான்.....

அப்போது...............

பகுதி இரண்டு:

சட்டென்று ஒரு சில்லென்ற உணர்ச்சி....

பார்த்தால் அவன் பாயில் படுத்திருந்தான்...

அவன் வீட்டிலே...

அப்போது... இதுவரை கண்டதெல்லாம் கனவா..?!??

குழம்பிய சிந்தனையுடன் வீட்டை விட்டு வெளியே வந்தான்..

வீட்டிற்கு முன்னே அவனது ஒற்றைச்செருப்பு அவனைப் பார்த்து பல்லிளித்தது...

அப்போ...

இன்னொரு செருப்பு...

படபடவென வந்தது அவனுக்கு...

தனியாய் இருப்பவனுக்கு தடை போட யாருண்டு...

நேற்று கனவிலே யாரையோ துரத்தியவன் இன்று தன் கனவினைத் துரத்த ஆரம்பித்தான்..

கனவில் கண்ட அதே ஒத்தையடிப்பாதை அவனை வரவேற்றது...

பகலில் கூட ஒரு தவளை இவனைப் பார்த்து பதறியவாறே கத்திக் கொண்டிருந்தது...

ஒத்தையடிப் பாதையை கடந்தவன் ஊரின் எல்லையை அடைந்ததும், அடர்ந்த காடானது இருளும் பகலும் கலந்து எதிர்பட்டது...

இரவில் கனவில் வந்த மலையானது, இப்போது 'பே' என்றவாறு எதிரில் நின்றது..

இவன் மலையேறினான்..

இறங்கியவுடன் கனவில் வந்த அதே ஆறு தேம்பி தேம்பி அழுவதைப் போல ஓடிக்கொண்டிருந்தது...

இவன் பிரமை பிடித்தவன் போல குதித்தான்.. நீந்தினான்.. கரை சேர்ந்தான்...

கொஞ்சம் தூரத்தில் கனவில் கண்ட அதே பாழுங்கிணறு..

"வந்திட்டியா" "வந்திட்டியா" என்பது போல வாயைப் பிளந்து நின்று கொண்டிருந்தது...

அருகிலிருந்த மரமோ... பேய் பிடித்து ஆடுவது போல "வா" "வா" என்று தலையாட்டிக்கொண்டிருந்தது...

ஓடியவன் மூச்சுவாங்கியபடியே அந்த கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தான்..

கனவில் காலியாய் வந்த கிணறு, அழுக்கு தண்ணீரால் நிறைந்திருந்தது...

கனவில் கண்ட அதே மனிதன், சிலையாய் இவனைப் பார்த்து சிரித்தபடி...

அந்த சிலையானது தண்ணீரில் மிதந்த படி...

இவன் இதயம் இல்லாதவனைப் போல.. திகிலுடன் நின்று கொண்டிருந்தான்...

எங்கோ தொலைவில் இவன் இதயம் துடிக்கும் ஓசை கேட்டது...

"லப் லப்"

"லப் லப்"

"லப் லப்"

பகுதி மூன்று:

இவனுக்கு ஒன்றுமே புரியவில்லை...

மனம் முழுவதும் பயம் ஆக்கரமிப்பு செய்திருந்தது..

சுற்றி சுற்றி இங்கும் அங்கும் பார்த்தான்.

ஒரு பறவை கூட கத்தாமல்.. அந்த இடமே மனித நடமாட்டமில்லாத மயானம் போல் கண்ணில் பட்டது.

திடீரென சுற்றுப்புறம் முழுதும் ஒரு இருள் சூழ்ந்தது..

இப்பொழுது தானே விடிந்தது...

அதற்குள் என்ன இருட்டு...?!?!? என நினைத்துக் கொண்டு இருக்கும் போதே....

இவன் நினைவுகள் பின்னோக்கி சென்றது...

சிறுவயதில் அடிக்கடி இவனுக்கு ஒரு கனவு வரும்.

இவன் எப்போதும் பாயில் தான் படுத்து தூங்குவான்.

திடீரென யாரோ இருவர் வருவார்கள்.

இவன் படுத்திருக்கும் பாயின் இருபுறமும் பிடித்து இவனை அப்படியே தூக்குவார்கள்.

பின் எங்கோ தூக்கிக்கொண்டு போய் இப்படியும் அப்படியும் தாலாட்டுவது போல அந்தப் பாயை ஆட்டியவாறே இவனை ஒரு கிணற்றுக்குள் தூக்கிப்போடுவார்கள்...

அந்த கிணறு முழுதும் நீர் நிறைந்திருக்கும்...

அப்படியே மேலேயிருந்து அந்த கிணற்றுக்குள் இவன் விழுந்து மூழ்கும் போது ஒரு குளிர்ச்சியான உணர்வு இவன் உடல் முழுவதும் பரவும்...

சட்டென முழித்து விடுவான்.

முழித்துப் பார்த்தால் அவனது பயமோ... இல்லை பாயின் பயமோ... அவன் பாய் முழுதும் நனைந்திருக்கும்.. அடுத்த நாள் அதற்காய் அவன் அப்பாவிடம் அடி வாங்கியது வேறு கதை...

அந்தக்கனவு அவனுக்கு அடிக்கடி வரும்.

நினைவுகளை ஒரு நிலைப்படுத்தி அவன் யோசித்து பார்த்த பொழுது.. ஒரு தெளிவு வருவதைப் போல உணர்ந்தான்.

அப்பொழுது சூழ்ந்திருந்த இருட்டு விலகி வெளிச்சம் வருகிற மாதிரி இருந்தது..

கிணற்றினை உற்றுப்பார்த்தான்..

ஆம்.

அதேதான்..

அந்தக் கிணறு

அவனது சிறுவயதில் கனவில் வரும்

அதே கிணறு.....

பகுதி நான்கு:

அவன் ஒன்றும் புரியாதவனாய் ஒரு வித அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருந்தான்.

மீண்டும் ஏதோ நினைத்தவனாய் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தான்.

இப்போது சற்று நேரம் முன்பிருந்த தண்ணீரைக் காணவில்லை.

சிலை கீழே படுத்தவாறு வானம் பார்த்துக்கொண்டிருந்தது.

உள்ளே இருந்த சிலையின் முகத்தை இப்போது தான் கவனித்தான். அது இவன் முகமாய் இருந்தது...

ஆம்...

இது இவனுடைய சிலையே தான்...

அப்போ...

அப்போ...

என்னையே நான் துரத்தினேனா...!!!

ஏன்...?

எப்படி....?

எதற்கு.....?

ஒன்றுமே விளங்காமல் இவன் நின்ற பொழுது...

'சரக்' 'சரக்' 'சரக்' 'சரக்' என்று யாரோ நடந்து வருவது போன்ற ஒரு சத்தம் கேட்டது...

எதிரே..

இவனது சிறுவயது கனவில் வரும் அதே இரண்டு பேர்...

ஒரு பாயுடன் வந்து கொண்டிருந்தார்கள்...

பகுதி ஐந்து:

பக்கென்று பயம் இவன் நெஞ்சை அடைத்தது..

இவன் பார்க்க பார்க்க..

அவர்கள் பக்கத்தில் வந்து கொண்டிருந்தார்கள்...

அவர்கள் நடந்து வருகிறார்களா இல்லை பறந்து வருகிறார்களா என்று கூட தெரியவில்லை...

ஆனால் நடப்பது போல சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது...

தன்னைப் பார்த்துத்தான் வருகிறார்களோ...

எப்படி தப்பிப்பது.....

என இவன் யோசிக்கும் முன்னே..

அவர்கள் அருகிலேயே வந்து விட்டார்கள்..

இவனுக்கு மூச்சை அடைப்பது போன்று இருந்தது... மயக்கம் வருவது போல இருந்தது...

பயத்துடனே பார்த்துக் கொண்டிருந்தான்..

ஆனால்...

ஆனால்...

அவர்களோ இவனை கண்டு கொண்டது போலவே காட்டிக் கொள்ளவில்லை...

நான்கு கண்களிமே ஒரு வித தீர்க்கத்துடன் எதையோ சாதிக்க செல்வது போல முன்னோக்கி பார்த்துக் கொண்டே சென்று கொண்டிருந்தார்கள்....

இவனுக்கு நினைவுகள் தப்பி உறக்கம் வருவது போல இருந்தது...

அப்படியே தூங்கிப்போனான்...

பகுதி ஆறு:

சடாரென இவனுக்கு விழிப்பு வந்த போது அவர்கள் இவனை பாயில் படுத்திருந்த நிலையிலேயே தூக்கிக்கொண்டு போவது போல கண்ணில் பட்டது.

ஆனால் இவனோ.. அந்நிகழ்ச்சியை தானே பார்த்துக் கொண்டிருப்பது போல உணர்ந்தான்.

இவனுக்கு ஒன்றுமே புரியவில்லை...

மெதுவாக அவர்களை பின் தொடர்ந்தான்.

இவனை தூக்கியிருந்த பாயுடன் கிணற்றுக்குள் தாலாட்டுவது போல தாலாட்டிவிட்டு அப்படியே தூக்கி உள்ளே போட்டார்கள். பின் அப்படியே இரண்டு பேரும் உள்ளே குதித்தார்கள்.

பின்னாடியே சென்று பார்த்தான்.

அங்கு ஒன்றுமே புலப்படவில்லை.

அங்கிருந்த சிலையையும் காணவில்லை.

குதித்தவர்களையும் காணவில்லை..

பாயையும் காணவில்லை..

பாயில் படுத்திருந்த இவனையும் காணவில்லை...

கிணற்றின் மேலே புதிதாக ஏதோ எழுதி இருப்பது போல இவனுக்கு தோன்றியது மிகவும் மங்களாக‌...

என்னவென்று ஒவ்வொரு எழுத்தாக எழுத்துக்கூட்டி படித்தான்...

அங்கு எழுதி இருந்தது...

"இது வேறொருவனின் கனவு"

"உனக்கு அனுமதி இல்லை"

ஏதோ புரிந்தவனாய்

இவன் காற்றில் கலந்து விட்டான்


(முற்றும்)

(பின் குறிப்பு: சில கேள்விகளுக்கான பதில்கள்...

இவன் என்றோ இறந்தவன்...

இதுவரை நடந்தவை அனைத்தும் இவன் இறந்த பிறகு இவனது கனவைக் காண இவன் மேற்கொண்ட முயற்சிகளே...

இவனது அந்தக்கால கனவை காணவேண்டும் என்ற ஆசையுடன் ஒரு கற்பனையுடன் சுற்றிக்கொண்டிருந்தான்...

ஆனால் தவறாக இவன் காண வந்ததோ

வேறோருவனின் கனவு...

அவ்வளவே...

"புரிந்தவர்கள் எனக்கு புரியவைக்கவும்
புரியாதவர்கள் புரிந்து கொள்ள முயற்சிக்கவும்!"

நன்றி வணக்கம்..

நட்புடன் அ வேளாங்கண்ணி)

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (14-Dec-14, 9:53 am)
பார்வை : 274

மேலே