ராஜாவோடு ஒரு இரயில் பயணம்

தனியாகச் செல்ல வேண்டுமே என்ற தயக்கத்தில் காதோரமாய் இசைத்துக் கொண்டிருக்கட்டுமென்று இளையராஜாவையும் உடனழைத்துக் கொண்டு புறபட்டேன்...
சுற்றியிருந்த முக-புத்தகங்களை கொஞ்சம் வாசித்து முடித்தேன்...
அனைத்துப் புத்தகங்களிலும் பெரும்பாலும் மௌனக் கவிதைகளே வெவ்வேறு மொழிகளில் அச்சிடப்பட்டிருந்தது.. வெட்கத்தைவிட்டு கேட்டுவிடலாமா என்று நினைத்தும் என் வயது ஏனோ தடுத்தது..
இருந்தும் சிறுகுழந்தைபோல் ஏங்கிக்கொண்டிருந்தது மனது ஜன்னலோர இருக்கையைப் பார்த்து...மனதை ஆறுதல் படுத்திக்கொண்டு ராஜாவின் இசைக்கு செவிசாய்த்தேன்.. காற்றின் விசைக்கு தலைசாய்த்தேன்..
ஏதோவொரு கடவுளை ராஜா வாழ்த்திக்கொண்டிருந்தார்..
இல்லாத கடவுளுக்கு இசையர்ச்சனையா என்று சிரித்துக்கொண்டேன்..
என்கூற்று பொய்யென்பதுபோல் சிவனும் பார்வதியும் ஒன்றாய் ஒருவராய் என்முன்னே வந்து நின்றார்கள்..
காசுகொடுவென்று
கைதட்டி கேட்டார்கள்..
என்னுடன் இருக்கப் பிடிக்காததுபோல் என் சட்டைப் பையிலிருந்து எட்டிப்பார்த்தது பத்து ரூபாய் நோட்டு..எடுத்துக் கொடுத்தேன்..ஒரு கைவைத்து இருவரும் ஆசீர்வதித்துச் சென்றார்கள்..
செய்யாத தவறேதோ செய்துவிட்டதுபோல சுற்றியிருந்த முக-புத்தகங்கள் எனை வாசிக்க..
கடவுளுக்கே காசு கொடுத்தவன் நானென்ற பெருமிதத்தை முகத்தில் பூசிக்கொன்டேன்...
நேரம் கழிந்தது..
சட்டென்று வானிலை மாறியது..ஜன்னலோரக் கம்பிகள் மழையோடு விளையாடிக் கொண்டிருந்தது..
என்முன்னே யாருமில்லா இருக்கையொன்று அதன் இரு கைகொண்டு யாரையோ அழைப்பதுபோல் தெரிந்தது..திரும்பிப் பார்த்தேன்.. தேவதையைத் தவிர வேறு உவமைகள் கிடைக்காமல் திக்குமுக்காடிக் கொண்டிருந்தான் எனக்கு மட்டும் தெரிந்த அந்தக் கவிஞன்..
அங்கிருந்த மௌனக் கவிதைகளுக்கு நடுவே அவள் மட்டும் மன்மதக் கவிதையாய் தெரிந்தாள்..
அதில் ஒருசில வரிகள் வாசிக்குமுன்னே காதோரம் இசைத்துக் கொண்டிருந்த ராஜா கணவுகள் களையுமடா என்பதுபோல் ஏதோ முணுமுணுக்க..
பார்வையை திருப்பிக் கொண்டேன்..இல்லாத என்னவளை நினைத்துக் கொண்டேன்..
பயணம் முடிந்து படியில் இறங்கும் போது திரும்பிப் பார்த்தேன் அவளைக் காணவில்லை..ராஜாவிற்கு நன்றி சொல்வதாய் ஓய்வு கொடுத்து விட்டு கிளம்பிச் சென்றேன்...!!

எழுதியவர் : சதீஷ் (15-Dec-14, 5:21 pm)
சேர்த்தது : சதீஷ் தமிழன்
பார்வை : 65

மேலே