என்னுள் இறங்கும் அவளின் நினைவுகள்

நீண்டு கிடக்கும் வானத்திற்கும்
நிற்காது செல்லும் மேகத்திற்கும்
நிரந்தரமாயென்ன உறவு இருக்கக்கூடும் ?

இயற்கையின் வியப்புகள்
இமைகளைத் தாண்டி
விழிகளுக்குள் பாயும்போது
விசித்திரங்கள் நிகழக்கூடும் ...

நீண்ட பாதையின் வழியே
நிற்காது நடக்கையில்
நிமிடத்திலெழுந்த மழை
நிச்சயமான என்திசை திருப்பியிராவிடில்
நிகழ்ந்திருக்காதது...

மழைக்காக ஒதுங்க
மறைவிடம் தேடுகையில்
சாலையோர மரம்
சற்றுக் கண்ணில்பட்டதால்
காண நேர்ந்தது
கன்னியவளை...

அவளும் அவ்வாறே
மழைக்காக மரத்தடியினில்
ஒதுங்கியிருக்கக்கூடும்...

எங்களிருவரையும்
எதிரெதிரே செல்லவிடாது
அருகருகே அழைத்துவர
அம்மழைக்கென்ன ஆவலோ ?

அவள் மழைக்காலத்து
மலர்களின் மேல்
பட்டுத்தெறித்து நிற்கும்
புது நீர்த்துளிகள் போல்
புனிதமாய் தெரிந்தாள்...

புவியீர்ப்புவிசைக்கு
சக்தியிருக்கக்கூடும்
என்பதையே
என்மேல் அவள் வீசிய
விழிஈர்ப்பு விசையாலே
அறிந்துகொண்டேன்...

சிலநொடிகள்தான்
அவள்பார்வை
என்மீது பட்டதாய்
எனக்குப்பட்டது...

அவளை நான் காண்கையில்
அவள் இலைகளில் மிச்சமிருந்த
மழைத் துளிகளோடு
மழலைமொழி பேசிக்கொண்டிருந்தாள்...

சாலையோரம்
சட்டென்று நின்ற மழை
அவளை ...
அவள்வழி ...மீண்டும்
இழுத்துச் செல்கிறது ...

நின்று விட்டது... மழை
நிற்காமல் தொடர்கிறது
மெல்ல ...மெல்ல ..
என்னுள் இறங்கிக் கொண்டிருக்கும்
அவளின் நினைவுகள்
அவள் யாரோ ?
---------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (25-Dec-14, 8:19 am)
பார்வை : 185

மேலே