மெய்ப்பொருள் காண்பது அறிவு - பொள்ளாச்சி அபி

மெய்ப்பொருள் காண்பது அறிவு - பொள்ளாச்சி அபி

மதியம் பனிரெண்டு மணி வெயிலிலும் பரபரத்துக் கிடந்த கோவை விமான நிலைய வாசல்.சுற்றுலா,வியாபாரம்,நண்பர்களைப் பார்க்க என ஒவ்வொருவரும் ஒவ்வொரு நோக்கத்திற்காக கறுப்பும் வெளுப்பும் மஞ்சளும் சிகப்புமாய் சர்வதேச மனிதர்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவனாக தனது லக்கேஜுகளுடன் வெளியே வந்த சண்முகத்தை டாக்ஸி ஓட்டுனர்கள் சுற்றிக் கொண்டனர். “சார் வாங்க சார் இண்டிகா இருக்கு.வாடகையும் சீப்தான்..”, “சார் நம்முது டவேரா சார்.ரொம்ப குயிக்காப் போயிடலாம் வாங்க சார்.,சார் நம்மகிட்டே ஏசி வண்டி சார்..” விதவிதமான குரல்கள் அவனை மொய்க்க..,அவன் கண்கள் குறிப்பிட்ட யாரையோ தேடியது போலிருந்தது.

லேசாய் பழுப்பேறிப்போயிருந்த,உள்மடிப்பில் கிழிந்த காலர் தெரிகின்ற,வெள்ளைச் சட்டையில்,அளவான சிரிப்போடு சண்முகத்தையே ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்த,மாநிற கார் ஓட்டுனர் ஒருவர் கண்ணில் பட.., “சார் நீங்க வாங்க..!” சண்முகம் கையை நீட்டி அந்த ஓட்டுனரை அழைத்துக் கொண்டு நகர்ந்தான். லக்கேஜுகள் அந்த ஓட்டுனரின் கைகளுக்கு மாற,அவர்கள் காரினை நெருங்கினர்.அந்தக் கார், என்ன மாடல் என்றெல்லாம் சண்முகம் பொருட்படுத்தவேயில்லை.

அந்த ஓட்டுனர்,அவசரமாய் பின்கதவை சண்முகம் ஏறுவதற்காகத் திறக்கப் போக,அவனைத் தடுத்து,பேக்குகளை மட்டும் பின்னால் வெச்சுடுங்க..நான் முன்னாடியே உட்காந்துக்கிறேன்.ஓட்டுனரின் பதிலுக்காக காத்திராமல் முன்கதவைத் திறந்து ஏறி அமர்ந்து கொண்டான்.

கிணத்துக்கடவு அருகிலுள்ள ஒரு கிராமத்தின் பெயரைச் சொல்லி,அங்கு போக வேண்டும் என்று சண்முகம் சொல்ல,இப்படியே செட்டிபாளையம் வழியாக போயிடலாம் சார்..,அதான் கொஞ்சம் பக்கம்..” சண்முகம் நினைத்து வைத்திருந்த மார்க்கத்தையே ஓட்டுனரும் சொல்ல,சரி போலாம்.. என்றபடி இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டான் சண்முகம்.கார் மெதுவே கிளம்பி வேகம் பிடித்தது.

“சார்..புதுப்பட பாட்டு ஏதாவது கேக்கறீங்களா சார்..?” சாலையில் பதித்திருந்த கண்களை விலக்காமலேயே கேட்டார் ஓட்டுனர். அப்போதுதான் காருக்குள் பென்டிரைவ் சொருகும் வசதியுடன் ஒரு பிளேயர் இருந்ததே சண்முகத்தின் பார்வையில் பட்டது.

“எங்கிட்டே ஒரு பென்டிரைவ் இருக்கு.அதை இதிலே போடலாமா..?

“ம்..ம்..போடுங்க சார்..வைரஸ் பயமெல்லாம் இல்லியே..”

ஹஹ்ஹஹ் ஹா..சே..சே..அந்த பயமெல்லாம் வேண்டாம்.. ..,என்றபடியே தனது ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்து எடுத்த பென்டிரைவை,ஊதித்துடைத்து விட்டு, பிளேயரில் செருக..சில விநாடிகளி கழித்து, ஒற்றைப் பறையின் ஓசை மெலிதான சுதியில் ட்ரங்..ட்ரங்..ட்ரங்..என்று சீரான இடைவெளியில் துவங்கியது. ஓட்டுனர் திடுக்கென்று அதிர்ந்து சண்முகத்தை விநாடி திரும்பிப் பார்த்து மெலிதாக தனக்குள் சிரிப்பை படரவிட்டபடி,சாலையில் மீண்டும் கவனத்தைப் பதித்தார்.

நேரம் செல்லச் செல்ல,பறையின் தாள இடைவெளி சுருங்கிக் கொண்டே போய்,இரட்டைத்தாளம்,முத்தாளம் என வேகம் அதிகரிக்க,அதிகரிக்க, பறை இப்போது அதிரத்துவங்கியது.டண்டணக்கு..டண்டணுக்கு.ட்ரங்.ட்ரங்...டண்டணுக்கு ட்ரங்ட்ரங்.. .., பறையின் அதிவேகத் துடிப்பு,பாய்ந்து செல்லும் குதிரையாக,நிலமதிர வேகமெடுத்து நடக்கும் யானையின் ஆக்ரோஷமாக, சமவெளியில் பாய்ந்து கொண்டிருந்த காட்டாறு,சொரேலென பள்ளத்தாக்கை நோக்கிப் பாய்வதாக..பறை,தனது தாளகதியில் ஜாலம் காட்டிக் கொண்டிருந்தது.

நீர்வீழ்ச்சியாய்க் கொட்டிக் கொண்டிருந்த பறையோசையின் வேகம்;,சட்டென்று ஒரு அணைக்குள் அடைபட்டதுபோல அமைதியான ஒரு நொடியில்,ஒரு வயலினும்,கிளாரிநெட்டும் ஒன்றாய் தமது ஒலியை எடுத்தவுடன் உச்சத்தில் ஒலிக்கத்துவங்க, அதே வேகத்துடன் இணைந்து சில பறைகளும் பின்னனியில் ஒலிக்க,இப்போது மேலும் சில இசைக்கருவிகள் அந்தக் கோர்ப்பில் கலந்து கொண்டன. ஒவ்வொரு கருவியும் அதனதன் அளவில் ஒலித்த அந்த இசையின் வெளிப்பாட்டில் இப்போது வேறொரு பரிமாணம் தெரிந்தது.

இந்தியாவின் பாணியில் துவங்கித் தொடர்ந்த இசையில்,பிரிட்டிஷ் பாணி,அமெரிக்க பாணி,ஆப்பிரிக்க,ரஷ்ய,சீன,ஜப்பான் பாணிகளென..தொடர்ந்து, மீண்டும் இந்திய பாணியிலான இசையிலும் தாளகதியிலும் முடிவடைய,சர்வதேச இசை வடிவங்கள் அத்தனைக்கும் ஈடு கொடுத்த பறையும்,ஆறாயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் மெதுவே தரையிறங்கி நிற்பதுபோல ஒலித்து ஓய்ந்து நிற்க,அடுத்த விநாடியில் அரங்கம் நிறைந்த கைதட்டல்களும்,வாழ்த்து முழக்கங்களும் மிக ஆரவாரமாய் ஒலித்ததைத் தொடர்ந்து,இப்போது முற்றிலும் அமைதி நிலவியது.

கண்களை மூடி அந்த இசையை அனுபவித்துக் கொண்டிருந்த சண்முகத்தின் கண்களுக்குள்,புகையிலைக் கறைபடிந்த,வெளுத்த மீசை,தாடியுடனான பாட்டையாவின் முகம், இப்போது ஒளிர்ந்து கொண்டிருந்தது.அதன் பின்னனியில் பாட்டையா கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த ஒற்றைப் பறையின் ஓசை துல்லியமாகக் கேட்டுக் கொண்டிருந்தது.அவரின் காலடியை நனைத்தபடி இரு சொட்டுக் கண்ணீர்த் துளிகள் சண்முகத்தின் இமைகளிலிருந்து விடுபட்டுக் கொண்டிருந்தன.

சண்முகத்தின் நிலையைக் கவனித்த கார் ஓட்டுனர், “சார்..இதென்ன சார் நம்ம ஊரு மியுசிக் கச்சேரி மாதிரி இருக்குது. ஆனா,முடிஞ்சவுடனே பாராட்டுன குரலெல்லாமே வெளிநாட்டுக்காரங்க குரல் மாதிரி தெரிஞ்சுதே..ஏதாவது வெளிநாட்டுலே நடந்த நிகழ்ச்சியோட ரெக்கார்டிங்கா சார் இது..?”

ஓட்டுனரின் துல்லியமான அவதானிப்பு சண்முகத்திற்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது.“ஆமாங்க..முந்தா நேத்து லண்டன்லே நடந்த இசைத் திருவிழாவிலே,நம்ம நாடு சார்பா, தனியார் தொண்டு நிறுவனம் மூலமா,எங்க இசைக்குழு கலந்துகிட்டப்போ,வாசிச்சதைத்தான் ரெக்கார்டு பண்ணிட்டு வந்தேன்.எப்படி நல்லாருக்கா..?”

“என்ன சார்..ரொம்ப சாதாரணமா இதை நல்லாருக்குன்னு மட்டும் சொல்லிட முடியாது சார்.நம்ம நாட்டு..ஊஹ{ம் நம்ம ஊரோட பேரை உலகம் பூரா சேத்து உச்சரிக்கிற மாதிரி பண்ணிட்டு வந்திருக்கீங்க.,உண்மையிலேயே எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு சார்..!”

ஒரு மணிநேரப் பயணத்தில்,அவனது கிராமத்தின் எல்லை நெருங்கிவிட்டது. “அதா..அந்தப் புளிய மரத்துகிட்டே நிறுத்துங்க..நான் இறங்கிக்குறேன்.”

“சார் ஊருக்குள்ளே போக இன்னும் கொஞ்சம் தூரம் போகணும்போல இருக்கே.ஏன் சார் இங்கியே நிறுத்தச் சொல்றீங்க..?”

“இல்லைங்க..சும்மா கொஞ்ச தூரம் காலாற நடக்கலாமுனுதான்..”

“சரியாப் போச்சு..இந்த வெயில்லேயா.. ஊருக்குள்ளே எதாவது டீக்கடை இருந்தா சொல்லுங்க சார்.உங்களை அங்கியே இறக்கிவிட்டுட்டு,நானும் ஒரு டீ குடிச்சுட்டு கிளம்புறேன்..”

சண்முகத்திற்கு அதற்கு மேல் ஓட்டுனரது வேண்டுகோளைத் தட்ட முடியவில்லை.

ஓலைக் கூரைக்கு மேல் அடர்த்தியாய் படிந்து மெதுவாய் புகை மேலெழுந்து போய்க் கொண்டிருந்த அந்த டீக்கடையின் முன்பாக கார் நின்றது.இருவரும் இறங்கினர்.ஓட்டுனரின் எத்தனிப்புக்கு முன்பே சண்முகம் தனது மூட்டைமுடிச்சுகளைத் தூக்கிக் கொண்டான்.

டீக்கடைக்கு வெளியே போடப்பட்டிருந்த சில பெஞ்சுகளில் பேப்பர் படித்துக் கொண்டும்,உள்ளே மதியச்சாப்பாட்டை உண்டபடி,வெள்ளை வேட்டி சட்டைகளுமாய் சில பெருசுகளும்,இளவட்டங்களும். சற்றுத்தள்ளி இருந்த சிறு அரசமரத்தடி நிழலில் ஒதுங்கியும்,தரையில் அமர்ந்தபடியும் சிலர் டீ குடித்துக் கொண்டிருந்ததும் கண்களில் பட்டது.

“சார்,உங்களுக்கும் டீ சொல்லவா..?

“சொல்லுங்க..” சண்முகம் தலையை ஆட்டினான்.

ஓட்டுனர் டீக்கடையின் தடுப்புக்கு உள்ளே தெரியும் முகத்தைப் பார்த்து “ரெண்டு டீ..”

சண்முகம் இறங்கியதிலிருந்து இருப்பு கொள்ளாமல் தவித்துக் கொண்டிருப்பதுபோலப் பட்டது.வீட்டுக்குப் போக என்ன அவசரமோ..என்று ஓட்டுனர் தனக்குள் நினைத்துக் கொண்டார்.

சில விநாடிகள் கழித்து இந்தாங்க டீ..என்ற குரல் கேட்டு நிமிர்ந்தபோது,தடுப்பின் மேல்,மரப்பலகையில் வைக்கப்பட்டிருந்த ஆவி பறக்கும் இரண்டு பிளாஸ்டிக் டீ கப்புகள் தெரிந்தன.சண்முகத்தின் கையில் ஒன்றைத் தந்துவிட்டு,அவரும் பருகத் துவங்கினார்.
சண்முகம் ஒன்றும் பேசாமல் டீ குடிப்பதிலேயே கவனமாக இருந்தான்.எதுவும் பேச விரும்பாதவன் போல அவனது முகம் இறுக்கமாக இருந்தது.

மிக மெலிதான பிளாஸ்டிக் கப்.டீயிலிருந்த சூட்டை,வேகமாக கையில் கடத்தத் துவங்க,இருகையிலும் மாறி மாறி வைத்தபடி டீயை உறிஞ்சிக் கொண்டிருந்த ஓட்டுனர்,இப்போதுதான் கவனித்தார்.டீக் கடையின் உள்ளே அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தவர்கள் கைகளில் சில்வர் டம்ளர்கள் மின்னிக் கொண்டிருந்தன. மரத்தடியில் நின்றும் அமர்ந்துமிருந்தவர்களின் கைகளில் பிளாஸ்டிக் கப்புகள் நெளிந்து கொண்டிருந்தன.எதையோ புரிந்து கொண்டவராக சண்முகத்தின் முகத்தைத் திரும்பிப் பார்த்தார் ஓட்டுனர். சண்முகத்தின் விழிகளில் நீர் திரண்டு நிற்பது தெரிந்தது.

---------

வணக்கம்..! இது ஒன்றும் கற்பனைக் கதையல்ல..,எண்பது சதவீதம் யதார்த்தமான நிஜம்தான்.இந்தக் கதை உங்களுக்கு உணர்த்தும் உங்கள் எண்ணங்களை,பொங்கல் விழாப் போட்டிகளுக்கான கவிதைகளாக வார்த்தெடுங்கள்.நமக்கு மனித சமத்துவம் நிறைந்த உலகம் தேவைப்படுகிறது.

பொங்கல் விழாப் போட்டிகள்.2015

தலைப்புகள்-

சாதி ஒழி ! மதம் அழி! சாதி !
நாளைய தமிழும் தமிழரும் !
இப்படி நாம் காதலிப்போம் !

கூடுதல் விபரங்களுக்கு தோழர் கே.எஸ்.கலை மற்றும் தோழர் நிலாசூரியனின் எண்ணங்களைப்- எண்ணம்-15577 கவிதை -227629. பார்வையிடுங்கள்.நண்பர்களிடம் பகிருங்கள்.மீண்டும் தொடர்ந்து பேசுவோம்.!

அன்புடன்
பொள்ளாச்சி அபி

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (4-Jan-15, 4:06 pm)
பார்வை : 419

மேலே