சாதி ஒழி மதம் அழி சாதி பொங்கல் கவிதைப் போட்டி 2015

மனிதனை விலங்கு போலாக்கி
மாட்டினர் சாதியை விலங்காகவே,
இனியதாய் அன்பைப் போதிக்க
இயற்றிய மதங்களைத் தன்னலத்தால்,
மனிதனை மனிதன் அழித்திடவே
மதம்பிடித் தலைய விட்டுவிட்டார்,
கனிதரும் மரமென வளர்த்துலகைக்
கெடுத்திட அரசியல் வந்ததுவே...!

பிறக்கையில் பேதம் தெரியவில்லை
பிள்ளை வளர்ந்ததும் வந்ததுவே,
சிறப்புடன் கற்ற அறிஞர்களும்
சிறகாம் சாதியை விடவில்லை,
மறக்கவே யில்லை மதம்தனையே
மண்டைகள் உடைவது கடவுளுக்காம்,
மறமென மக்களைத் தூண்டிவிட்டே
மடியினை நிறைத்திடும் அரசியலே...!

பாரதி சொன்னதை மறந்தவனைப்
பார்த்தொரு சங்கம் சேர்த்துவிட்டார்,
வீரச் சண்டையாய் மதம்பிடித்தே
வேதம் சொன்னதை மறந்துவிட்டார்,
போரிது என்றும் முடியாமல்
பேணிக் காப்பார் அரசியலார்,
வேரது அன்பே எனக்கொள்வாய்
வேற்றுமை மறந்து சாதிக்கவே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-Jan-15, 8:01 pm)
பார்வை : 92

மேலே