வாத்தியார்

எச்சரிக்கை: இந்த கதையில் "ஜாதி" "மதம்" என்ற வாரத்தைகள் இல்லை. எதிர் பாராத திருப்பங்களும் இருக்காது.
---------------------------------------------------------------------------------


பெண்ணுக்கு கல்யாணம்.

விமரிசையாக நிச்சயதார்த்தம் முடிந்தது. நிச்சயதார்த்தத்தை முடித்து வைத்த வாத்தியார் தன்னால் கல்யாணத்தை நடத்திவைக்க முடியாதென்று பின் வாங்கினார்.

இரு வீட்டார் இணந்தே நடத்தும் காதல் திருமணம். தங்கள் முதல் பெண் என்பதால் "அவர்கள் முறைப்படி திருமணம் நடக்க வேண்டும்" என விருப்பினர் பெண்ணைப் பெற்றோர். மாப்பிள்ளை வீட்டார் மாறுபட்ட பழக்க வழக்கங்கள் உடையவராயினும் தயக்கமின்றி "சரி" என்றனர்.

திடீரென்று வாத்தியார் தகராறு செய்தால். ...? என்ன செய்வது என்று திகைத்தனர் பெண்ணைப் பெற்றோர். அப்போது அவரே "வேறு ஒருவரை அனுப்பி வைக்கிறேன்...." என்றார். இரண்டு நாட்களுக்குப் பிறகு திருமணத்தை நடத்தி வைக்கப் போகும் வாத்தியார் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.

மாலை சாய்ந்து சுமார் 7:00 மணி இருக்கும். வாசல் மணி அடிக்க, திறந்து பார்தத்தால் சற்று வயதான தோற்ற முடைய ஒருவர், நரைத்த தாடி மீசை, நரைத்த கேசம், குடுமி, காதில் கடுக்கண், வேட்டி, மேல் துண்டு - காலில் செருப்பில்லை. உள்ளே வந்தவர் குளிர் சாதனப் பெட்டியில் சாய்ந்து கொண்டு தரையில் அமர்ந்து கொண்டார் (அந்த சிறிய முகப்பு அறையில் அவருக்கு அங்குதான் கிழக்கு நோக்கி இடம் கிடைத்தது) பெண்ணின் பெற்றோரும் எதிரே தரையில் அமர்ந்தனர்.

எடுத்தவுடன் அவர் "நீங்கள் எதற்கும் கவலைப் படாதீர்கள் - நான் நன்றாகத் திருமணத்தை நடத்திக் கொடுக்கிறேன். இதெல்லாம் இந்தக் காலத்தில் சகஜம், நீங்கள் பொறுப்பை என்னிடம் விட்டு விடுங்கள்...." என்றார்

பெண்ணைப் பெற்றவருக்கு ஒரு பெரிய பாரம் குறைந்தது பொல் இருந்தது. தொடரந்து அவர் ஒரு படி மேலே சென்று "நான் வேண்டுமானால் பிள்ளை வீட்டாரிடம் பேசுகிறேன்" என்றார்.

"அதற்கு தேவை இருக்காது, அவர்கள் சம்மதம் பெற்றாகி விட்டது" என்றனர். இருந்தாலும் மாப்பிள்ளை வீட்டாரிடம் பேசி விபரங்களை பகிர்ந்து கொள்வது நல்லது என்றார். பின்னர் ஒரு நாள் சென்று மாப்பிள்ளை வீட்டாரிடம் விரிவாக பேசி வந்தார்.

திருமண நாளுக்கு முந்தய நாள் மதியம். பெண் வீட்டார் மங்கல வாத்தியம் முழங்க கல்யாண மண்டபத்துள் நுழைந்தனர். வாத்தியார் சுத்தமாக தாடி மீசை மழித்து விட்டு பளிச்சென்று ஒரு வேட்டி அணிந்து பத்து வயது இளயவராகத் தோன்றினார். உடன் ஒரு உதவியாளரும் இருந்தார். மாப்பிள்ளை வீட்டார் வந்தவுடன் மங்கல இசை முழங்க, மாலை அணிவித்து, சகல மரியாதையுடன், மந்திரங்கள் முழங்க வரவேற்றார். பிறகு அவர்களிடம் சென்று வாத்தியார் அன்றய/அடுத்த நாள் நிகழ்ச்சி நிரலை சுருக்கமாக கூறி அவர்களை தயார் படுத்தினார். பிள்ளை வீட்டாரின் சடங்குகள் முடித்துக் கொள்ள நேரம் ஒதுக்கினார்.... அருகே உள்ள கோவிலுக்கு சென்று விட்டு அன்று மாலை விமரிசையாக ரிசெப்ஷன் நடந்தது. முக்கியமாக இருபக்க அலுவலக நண்பர்கள் வந்து மணமக்களை வாழ்த்தினர்.

மறு நாள் காலையில் காசி யாத்திரை, மாலை மாற்றல், ஊஞ்சல், நலங்கு, எல்லாம் முடிந்து, மாப்பிள்ளைக்கு பாத பூஜை செய்து, கன்னிகா தானம் கொடுத்து அப்பாவின் மடியில் பெண் அமர, கெட்டி மேளம் முழங்க, சுற்றமும், நட்பும் அட்சதையும் மலர்களும் தூவ மாப்பிள்ளை தாலி கட்டினார். இரு வீட்டடாரும் கை குலுக்கி ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டனர். சிலர் கண்கள் பனித்தன.

தாலி கட்டியவுடன் மணமக்களுடன் கை குலுக்க வந்த அனைவரையும் வாத்தியார் தடுத்து நிறுத்தி இன்னும் சில சடங்குகள் முடியும் வரை மாப்பிள்ளையும் பெண்ணும் ஒருவர் கை ஒருவர் பிரியக் கூடாது என்று கட்டளை யிட்டார். எல்லோரும் சற்று துணுக்கற்றாலும் அமைதி காத்தனர்.

வாத்தியார் தொடர்ந்து ஹோமம் வளர்த்தார். அம்மி மிதித்தனர், அருந்ததி பார்த்தனர், அக்னியை வலம் வந்து மணமக்கள் வணங்கி, ஏழடி நடந்து இருவரும் இனிதாய் இணைந்து யாவற்றையும் பகிர்ந்து மணவாழ்க்கை நடத்துவோம் என ஏழு சபதங்கள் எடுத்தனர். இவை முடிந்த பிறகுதான் வாத்தியார் மணமக்களை மற்றவர்களுடன் கை குலுக்க அனுமதித்தார். வாத்தியார் எடுத்துக் கொண்ட பொறுப்பை நிறைவாய் முடித்த நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

முடிவில் எளிதாகத் தோன்றினாலும் ஒவ்வொரு கட்டத்திலும் மாறுபட்ட பழக்கங்கள் கொண்ட இரு வீட்டாருடன் கலந்து பேசி, யார் மனமும் நோகாமலும் இரு குடும்பத்தையும் இணைத்து வாத்தியார் சுமுகமாக திருமணத்தை நடத்திய திறனை அனைவரும் பாராட்டினர்.

அவர் மறைமுகமாக செய்தது - மாறுபட்ட பழக்கமுள்ள இரண்டு குடும்பங்களை திருமண பந்தத்தால் இணைத்தது.
-------------------------------oooOooo---------------------------------

எழுதியவர் : முரளி (9-Jan-15, 11:09 pm)
Tanglish : vathiyaar
பார்வை : 236

மேலே