நய்யாண்டி தர்பார் மெய்யா நீ கூறு

உலகத்தில் பெரிது பணமே ?மனமே ?(ஓரங்க நாடகம் )
இடம் :உலக தர்பார்
இடம்பெறுவோர் :சுப்புவும் சுசிலாவும்
கதை சுருக்கம் :சுசிலாவின் கேள்விக்கு சுப்புவின் முடிவென்ன ?
(இனி திரையில் )

பணம் பணமென்று அலையிற சுப்பு
பணமென்னென்ன செய்யும் கொஞ்சம் செப்பு ?

பணமிருந்தால் பாராளலாம்!
தேவைக்கு வேண்டியதை உடன் பெறலாம்
பணம் பத்தும் செய்யும் புரியாததடி உனக்கு
பணமே பிரதானம் தெரியாதாடி ? சுசி!

பணத்தை வைத்து பாசம் வாங்கிட முடியுமா ?

பணமிருந்தால் ...
"உண்ண உணவு வரும் பின்னே காரு பங்களா
பணிக்கு ஆளுவரும் "
வீடுமுழுக்க ஏசி காத்து வசதி வந்து வாழ்த்த !
வசதி வந்தா அன்பு பாசம் உறவுயெல்லாம் காலைசுத்தித்தான் கிடக்குமடி!

எல்லாம் வாங்க முடிந்தாலும் உன்னால்? பெற்ற தாயை வாங்கிட முடியுமா ?

அடியேய்! உனக்கென்ன கிறுக்கா ?விஞ்ஞானம் போற போக்குல இப்படி ஏனடி கேக்குற ?
நான் கருவாக ஒரு இடம் வேண்டும் ?கருவை சுமந்ததால் அவள் தாயானா !
நானும் பிறந்து வளர்த்துவிட்டேன் இனி அவளின் தேவையென்ன இருக்கு ?

குணமும்! மனமும் இல்லாமா பணமா? உன்னுடன் குடும்பம் நடத்தும் ?

"காசை அள்ளி வீசிபுட்டா தாசி மடியில் வந்து கிடப்பா" !பேசி பேசி கொல்லாம என்பக்கம் வந்து சேர்ந்துபுட்டா உலகம் முழக்க காட்டுவேனுனக்கு!

உறவு? உன் மானம் பற்றி யோசிக்காம பேசித்திரியும் மனுசா ?நாளை உலகம் கேலி பேசும் அதை கொஞ்சமாவது நீ யோசி?

போடி போடி பொம்பளை கிறுக்கி உலகமென்ன புதுசா? அது பார்க்கும் பல தினுசா ?பணமிருந்தால் ....
பாதம் விழுந்து வணங்கும் இரக்கம் கொண்டால் சேற்றை வாரி இறைக்கும்
முடமோ ! குருடோ! செவிடோ பணமிருந்தால் போட்டிபோட்டு முன்வந்து பேசும்
காசை அள்ளி வீசும் போது கொஞ்சி குலாவி அன்பை பொழிந்து கிடக்கும் .
எலும்புக்கு ஆசைப்பட்ட நாய் போல என்னை சுற்றி சுற்றி திரியும் ! .

நாடு வறட்சியுற்றா வசதியிருந்தாலும் வாழ்வுக்கு என்ன செய்வ ?

காசுகையில் இருந்தா கவலை பறக்கும் சோக்கா !
கண்டம் விட்டு கண்டம் ஆகாய விமானத்தில் ஏறி பறந்து போவேன்
வறட்சிக்கு காட்டுவேன் டாடா! தேவைனா சொல்லு கொடுப்பேனே உனக்கு பேட்டா ! சொர்க்க பூமிக்கு பறந்து சொகுசாக நானும் வாழ்ந்திடுவேன்.

இயற்க்கை சீற்றம் ஏதேனும் வந்தா நீயும் தானே அழிசுருவ?

ஆஹா ! ஹா... ஹா...ஹா ...

அதுக்குதானடி இருக்கவே இருக்கு " நாசா என்னும் விண்வெளி ஆராய்சிகூடம்".
இது பணக்காரனோட சொத்து ! நிகழ்வொன்று நடக்குமுன்னே பணக்காரனுக்கு தகவல் சொல்ல பல ஆயிரம் உறுப்பினராக பணக்காரனிருக்க பல கோடி கொட்டி விண்வெளிவோடம் ரெடியாதானிருக்கு! ஹையா பயணம் செய்து பிற கிரகத்தில் குடிபுகுவோம் .

சீசீசீசீ ...நீ என்ன மனுஷ ஜென்மமடா ?உணர்ச்சியே இல்லாமா இப்படி பணபேய் பிடித்து ஆட்டுதடா ?மனிதனை மதிக்காமல் பெற்ற தாயையும் உடன் சேர்க்காது வெறி கொண்டு அலையுறியே உனக்கு வெட்கமே கிடையாதா ?

நீ நிறுத்தடி உன் உபதேசம் எதுவடி நம்தேசம்?

ஒண்டி பிழைக்க வந்தவனை அரசனாக்கி அடிமையானதே நம் தேசம் ?எல்லா வளமும் சுரண்டிய பின் விழித்து ஓட விரட்டிய அதுவா நம் வீரம் !அவனை துரத்திட தையிரியம் வந்த உனக்கு இழந்ததை மீட்க முடியாமல் அவன் காட்டிய போதைக்கு மயக்கமுற்று இன்றும் அவனது பொருளின் மோகம் தொலையாமல் போற்றுவது தான் உன் பெருமையோ !

அவன் காட்டிய ஆசைக்கு மதிமயங்கி காசுக்கு பின்னால் ஓடிய கூட்டம் பல்லாயிரம்! தனக்கென தனிக்கொள்கை ஏதுமில்லாது கொள்ளையனை தலை தூக்கிவைத்து கொண்டாடும் உலகம் இது .
பண்பாடு கலாசாரம் வீரம் அனைத்தையும் தியாகிகள் குழியில் புதைத்து பின் துரோகிகளை துதி பாடும் நாடு இது .
உன்னப்பனை கொன்றவனுடன் உறவாட உன் மனம் ஒப்புமா ?பலகோடி இந்தியனை கொன்றவனுக்கு சிகப்பு கம்பள வரவேற்ப்பு கொடுக்குது பாரு !

அதற்காக நீ நாணயம் தவறுவது சரியா ?

நாணயம் ...நாணயம் ..
ம்ம்ம்கும் நாணயம் .தவறியதால் பிறந்தது ரூபாய் நாணயம் !பண்ட மாற்று முறையே இருந்திருந்தால் நம் பண்பாடு கலாசாரம் மாறதிருந்திருக்கும்.

மோகம் !மோகம்! அந்நிய மோகம் !உலக நாட்டுடன் உன்னை போட்டி போடா சொன்னது யார் ?
பேராசை ! வசதி! வளருனும் என்ற வெறி !உன்னை முதன்மையாய் உலகத்தின் முன் காட்டவேண்டுமென்ற ஆர்வம் !அதனால் விளைந்ததென்ன ?உனக்கு சொந்தமான பொருட்கள் அனைத்திற்கும் எவனோ? ஒருவன் காப்புரிமை பெற்றது தானே மிச்சம்.!பண்ட பரிமாற்றதோடவே நாம் வாழ்ந்திருந்தால் நீ சொன்ன அன்பு பாசம் உறவு மனம் குணமெல்லாம் உண்மையாய் நிறைந்து நிலைதிருந்திருக்கும் ! .

அதற்காக உலக நாடுகளுடன் நட்புறவு கொள்ளாமலும் பொருளாதார கொள்கை வகுக்காமலும் இருந்தால் பின்னுக்கு தள்ளப்பட்டு எவ்வித வசதியுமின்றி இருட்டினில் தானே இருந்திருப்போம் ?

வசதிகள்... வசதி அப்படி என்னத்தை தான் அனுபவிக்கிற கொஞ்சம் சொல்லு !
இப்ப இருளில்லாது ஒளிவெள்ளம் பெருகி சந்தோசம் கூத்தாடுதா நீ எண்ணு!

சொல்லுறேன் கேட்டுக்கோ....!

கல்வி முதல் கணினியும் , தொலைபேசி முதல் கைபேசியும் , இணைய தளம் முதல் செயற்கைகோளும், வானொலி முதல் வண்ணதொலைக்காட்சியும் ,இருசக்கர வண்டிமுதல் பல சக்கர வாகனமும் ,வான்வெளியில் பறந்திட ஆகாய விமானம் முதல் விண்வெளி ஓடம் இதுபோல இன்னும் பலபல அற்புத வசதி அனுபவிக்கவே உலக நாட்டோட ஒப்பந்தம் செய்தோம் நீயும் அனுபவிக்கையில் கேக்கலாமோ இந்த கேள்வி ?

வசதி !வசதி !"செய்திட்ட வசதிகள் யாவுமே வசதியிருப்போனுக்கு தானடி" !
அதற்க்கு பணம் தானடி தேவை !ஓசியில் காட்டிட உலக நாடுகலொன்னும் உன்போல் ...இழிச்சவாயனில்லையடி! போட்டிட்ட முதலுக்கு ரெட்டிப்பு பார்க்குற கூட்டமடி! பட்டிகாட்டான் மிட்டாய் கடை கண்டதுபோலே பல்லைகாட்டி நீயும் நின்னா பத்துக்கு பொறாதது பத்தாயிரமாகும்! புத்திகெட்டு தானே வெளிநாட்டு பொருளை வாங்கி குவிக்கிற மக்கா! உள்நாட்டு பொருளெல்லாம் தெருக் குப்பையாகி கிடக்க ! மனம் கெட்ட மனிதா! உனக்கு குணமா பெரிது ? மருத்துவ அறிஞர்கள் பல ஆண்டாக ஆராய்ந்து கண்ட குறிப்பை அழகாக திருடியே கொளுத்த பணக்காரன் வாங்கிகிட்டானே காப்பு !
அதை களவாடி போனதற்கு காரணம் யார் பொறுப்பு !

"வாடிய பயிர்கண்டு வாடிய வள்ளலாரும்
தமிழ்கவி பாடியே எழுச்சி கண்ட பாரதியும்
தலைமுறை தலைமுறையாய் வாரி தந்த கடையேழு வள்ளல்களும்"
இன்னும் பல தலைவரும் சொல்லியும் திருந்தாத ஜென்மனகள் வாழுற நாட்டில்

மனமே கோயிலாக கொண்ட பல மகாத்மாக்கள் இம்மண்ணில் புதையுண்டும்! பலர் மனதில் வாழ்ந்தாலும்! பல பூங்காவின் வாயிலில் சிலையாகி நின்றதே மிச்சம்! தலையை மூடி மறைக்குது காகத்தின் எச்சம் !கொள்கைகள் குப்பை தொட்டியில் கிடத்தி கொள்ளையை கோபுரமாக்கி தினம் பூஜிக்கும் மக்களிடம் மனமெங்கனம் வாழும் !

காலத்தின் கட்டாயம் பணமாயாச்சு !
கல்வியும் ஞானமும் கேள்விகுறியாச்சு!
பெற்றபிள்ளையும் பெற்றவரும் பிரிவினையாச்சு !
கஷ்டத்தில் கிடப்பது குருவேயானாலும் கவலையடையா கல்மனமாச்சு !
யாருக்கு யாரென்ன உறவுமுறை மாறி உறவில்லா உறவிலும் ஊடல் கொள்வது பணமே !உறவுகள் உதவிடுமென எண்ணியே பல உதவிகள் செய்தும் திரும்பி விரும்பாமல் தினம் கொள்ளாமல் கொல்வது மனமே !

(முற்றும் )

எழுதியவர் : கனகரத்தினம் (20-Jan-15, 7:34 pm)
சேர்த்தது : கனகரத்தினம்
பார்வை : 231

மேலே