நாளைய தமிழும் தமிழரும்

நாளை தமிழும் தமிழரும் இங்கோங்கும்
வேளை அதற்காக இன்றெங்கள் – தோளை
நிமிர்த்தி தொலைதூர நோக்கோடு செய்வோம்
அமிர்த மொழிக்கு அரண்

பழமை மறவா புதுமை படைத்து
அழகும் பொழிவும் அமைய – வழங்கும்
புலமைத் தமிழை புவனம் முழுதும்
உலவ விடுவோம் உவந்து.

தமிழராய் வாழும் தரம்மிகுந்த வாழ்வை
அமிலம் தெளித்தழிப்போர் முன்னால் = நிமிர்ந்தே
எதிர்நின்று எம்தமிழை ஏற்றி விளைந்த
கதிராகச் செய்வோம் தெளிந்து

மூத்த மொழியாய் முகிழ்த்த மொழியென்றே
பார்த்து அறிந்து பழகிட –ஈர்த்தெடுக்கும்
எம்மொழி இன்னல் எதிர்கொண்டு நிற்பினும்
செம்மொழி யானதே சீர்.

ஓசோன் துளைவழியே ஓர்நாள் உலகத்தில்
வீசும் வளியற்றுப் போனாலும் = பேசும்
மொழியாய் தமிழ்வாழ முன்னெடுத்துச் செல்லும்
வழியமைத்தால் வாழும் தமிழ் !

* மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (21-Jan-15, 1:46 am)
பார்வை : 156

மேலே