அவற்றிற்கென்று எதுவுமில்லை

எனது அலுவலகத்தில் பொது மேலாளரிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது என்றால் அது எப்போதுமே கவிதை (நிறைய வாழ்த்துக் கவிதைகள்தான்) எழுதி தரக் கூறியும் ஆங்கிலத்திலிருந்து தமிழிற்கு மொழி பெயர்ப்பு செய்யும் பணி நிமித்தமாகத்தான் இருக்கும். மூன்று நாட்கள் விடுப்பிற்கு பின் இன்று அலுவலகம் சென்றதில் திணறத் திணற வேலைகள். இன்றும் அழைப்பு வரவே கொஞ்சம் முனகலுடன் தான் அவரைக் காணச் சென்றேன். வேலை அதிகமாக இருக்கும் சமயத்தில் இப்படியான அழைப்பினில் கொஞ்சம் முனகுவேன்.
அவர் ஏதாவது கவிதை எழுத கூறுவாரோ என்கிற சிந்தனையில் சென்ற போது எனக்கு ஒரு அருமையான கவிதையினை (அவருக்கு பொங்கல் வாழ்த்தாக வந்த அட்டையினை) என்னிடம் அளித்து படித்துப் பார்க்க சொன்னபோது மிகவும் ரசித்துப் படித்தேன். அதனை உங்களிடத்தில் பகிர்வதில் மகிழ்ச்சி. ,
அவற்றிற்கென்று எதுவுமில்லை....
================================
நல்லாவின் பால்முழுதும் கன்றுக்கில்லை
நறும் பூவின் மணம் முழுதும் சோலைக்கில்லை
நெல்லாகும் கதிர் முழுதும் நிலதிற்கில்லை
நிறைகின்ற நீர் முழுதும் குளத்திற்கில்லை
பல்லாறும்** கனி முழுதும் மரதிற்கில்லை
பண் நரம்பின் இசைமுழுதும் யாழுக்கில்லை
எல்லாமே பிறர்க்குழைக்க காணுகின்றேன்
என் வாழ்வும் பிறர்க்குழைக்க வேண்டும்... வேண்டும்..
நம் வாழ்வும் பிறர்க்குழைக்க வேண்டும்.. வேண்டும்...
**பலவாறும்
(வேதாத்ரியம் ஆன்மீக மாத இதழிலிருந்து)