சோறு போடும் சாமி

கருசொமக்குற
தான் பொண்ணும்!
வெளஞ்சி நிக்கிற
நெலமண்ணும்!
ஒண்ணுன்னு - இவன்
மனசு எண்ணும்!

விதைச்ச வெத
ஊடு வந்து
சேந்தாதான்!
இவன் உசுரு
ஒடம்பு கூடு
வந்து சேரும்!


காத்து மழையின்னு பார்க்காம
வெளஞ்ச பயிருக்கு
வேலி வைப்பான்!
களையெடுத்த ஆளுக்கு
கூலி தர - தான் பொண்டாட்டி
தாலிய அடவு வைப்பான்!

தழைச்சத்து மணிச்சத்து
பத்தலைன்னு -தான் வேர்வையையும்
வெதயோட வெதச்சிடுவான்!
மண்ணுக்குள்ள போட்ட வெத
பொன்னாவ - தான் ஒடம்பையும்
கயிறாதான் திரிச்சிடுவான்!

வெதக்கிற வேளயில
மண்ண பாப்பான்!
வெளயிற நாளுல
விண்ண பாப்பான்!
களமடிச்சி கடசியா
கணக்கு பாக்கையில - நீரு
உடஞ்சி போவும் - ரெண்டு
கண்ண பாப்பான்!

இவன் வாழ்வு
நம்பிருக்குது பூமி!
இவன் நமக்கெல்லாம்
சோறு போடும் சாமி!

எழுதியவர் : சங்கீதா இளவரசன் (27-Jan-15, 11:48 pm)
பார்வை : 141

மேலே