பொங்கல் கவிதைப் போட்டி - நடுவர் தீர்ப்பு - 06

வணக்கம் தோழர்களே...

பொங்கல் கவிதைப் போட்டியினை நெறியாள்கை செய்த சிறப்பு நடுவர்களின் அனுபவப் பகிர்வுடன் இணைந்துவரும் அறிவுரைகள் உங்களின் கவனத்திற்காக முன்வைக்கப் பட்டு வருகின்றன.

அந்தவகையில்... எமது வேண்டுகோளுக்கு மதிப்பளித்து சிறப்பு நடுவராக கடமையாற்றிய மதிப்பிற்குரிய தா. ஜோ. ஜூலியஸ் அவர்களின் செய்தி கீழே இணைக்கப் பட்டிருக்கின்றது !


===================================நடுவர் தீர்ப்பு - தா. ஜோ. ஜூலியஸ்.

கவிதை என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாடாக இருக்க வேண்டும். அதனால் வாழ்வில் சந்திக்கும் மகிழ்ச்சி, சோகம், வலிகள், இன்பங்கள், துன்பங்கள், அதிசயங்கள் ஆகியவற்றை திறத்துக்கேற்ப படைத்து கொடுக்கப்பட்ட தலைப்பின் கீழ் சமர்ப்பித்தல் அனைவர்க்கும் நலம் பயக்கும்.இவ்வாறு இருக்க வேண்டுமென்றே, பொங்கல் கவிதைப்போட்டி 2015 என மிகச் சிறந்த மூன்று தலைப்புக்கள் கொடுக்கப்பட்டு இருக்க அதற்கு மொத்தம் 426 படைப்புக்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த 426 கவிதைகளும் இத்தளத்திற்கு பெருமை சேர்க்க வல்லன என்பதில் ஐயமில்லை.

நடுவர் என்ற முறையில், குறிப்பாக ஒரு கட்டத்தின் நடுவர் என்ற முறையிலும், வாசகன் என்ற முறையிலும் நான் இக்கவிதைகளை படித்துப் பார்த்ததில் பின் வரும் கருத்துக்களைக் கூறிட விழைகிறேன்.

படைப்பாளிகள் தங்கள் படைப்பில் சொல் பொருள் இலக்கணம் போன்ற குற்றங்கள் நீக்கி தங்கள் படைப்புக்களை அளித்தால், இத்தளத்தில் பதியப்படும் கவிதைகள் கல்லில் எழுத்தென நின்று நிலை பெறும். எழுத்து, சொல் யாப்பு, அலங்காரம் என இலக்கண நூல்கள் எடுத்து இயம்பும் முக்கிய நாற்பொருட்கள், அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவை மட்டுமே ஆகும்.. அனைத்து தமிழ் கவிதைகளையும் இந்த பெரும் தலைப்புக்களுக்குள் எந்த கால கட்டத்திலும் அடக்கி விடலாம் எனும் பொழுது கவிதைகள் மாட்சி உடைத்தனவாக அமைதல் வேண்டும். இத்தகைய மாட்சியாவன:

சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்,
நவின்றோர்க் கினிமை நன்மொழி புணர்த்தல்
ஓசையுடைமை ஆழமுடைத்தாதல்
முறையின் வைப்பே உலக மலையாமை
விழுமியது பயத்தல் விளங்கு தாரணத்(து)
ஆகுதல் நூலிற்கு அழகெனும் பத்தே.

என்று கவிதைக்கும் ஒரு கவிதை நூலுக்கும் மாட்சிகள் பத்து என வட நூலாகிய “மீமாங்கிசை”யின் தமிழ் மொழி பெயர்ப்பாகிய குவலயானந்தம் எனும் அணி நூல் அழகுபடக் கூறுகிறது. இந்த வகை மாட்சிக்கு நேர் எதிரான குற்றங்களும் பத்து ஆகும்.

குன்றக் கூறல் மிகைபடக் கூறல்
கூறியது கூறல் மாறுகொளக் கூறல்
வழூஉச்சொற் புணர்த்தல் மயங்க வைத்தல்
வெற்றெனத் தொடுத்தல் மற்றொன்று விரித்தல்
சென்றுதேய்ந் திறுதல் நின்றுபய னின்மை
என்றிவை யீரைங் குற்றம் நூற்கே.

என்பதால் படைப்புகளில் இப்பத்து வகை குற்றங்கள் தவிர்த்து படைப்பது நலம் பயக்கும். இக்கருத்துக்களை நான் எனது ஆட்டிப் படைக்கும் சிந்தனைகள் என்ற கட்டுரைத்தொடர் மூலம் ஏற்கெனவே சுட்டிக்காட்டி இருக்கிறேன். எனினும் அதனையே இங்கு வலியுறுத்திக் கூறுகின்றேன்.

பரிசுத் தொகை பெரியதாய் இருப்பதால் நாமும் கல் விட்டுப் பார்ப்போமே என்ற மன நிலையில் பல கவிதைகள் பதியப்பட்டு உள்ளன. இது தன் நிலை புரியாமை ஆகும். ஆகவே படைப்பு என பதியும் முன் ”சபை நடுவே நீட்டோலை” வாசிக்கத் தகுந்ததா என ஒரு முறைக்கு இருமுறை உறுதி செய்த பின் பதிடுவதே நலம் பயக்கும். நடுவர்கட்கும் வலி குறையும். ஆயினும் நம்பிக்கை கொண்டு, தங்களைத் திருத்தி, தமிழ் நூல்கள் பல பயின்று எழுதுங்கள். நிச்சயம் நீங்களும் பரிமளிக்க முடியும்.

வாழ்த்துக்கள்.

தா. ஜோ. ஜூலியஸ்.

எழுதியவர் : விழாக்குழு (28-Jan-15, 9:11 am)
பார்வை : 138

மேலே