கல்யாண காலம்

இது கல்யாண சீசன்...அமர்க்களமாய் செலவு செய்து திருமணங்கள், வரவேற்புகள் என்று ஒவ்வொரு ஊரும் திணறிக் கொண்டிருக்கும் சமயம்.. மாறி வரும் கலாச்சாரம் பற்றிய சிந்தனை சில..

எங்கிருந்து, எப்போது வந்தது என்று தெரியாமல் சில வழக்கங்கள்.. மாப்பிள்ளை , பெண்ணை மணமேடையில் மணிக்கணக்காய் நிற்க வைத்து..வீடியோ , போட்டோ, எடுக்கிறேன் பேர்வழி என்று எறும்புகள் போல் வந்தவர்களை வரிசையில் நிற்க வைத்து செய்யப்படுவது ஒரு அட்டகாசம்.. பளீர் ஒளியில் வியர்வை துளிகள் போட்டிருக்கும் மேக்கப்புகளை முடிந்த வரை கலைத்துக் கொண்டிருக்க, ஆட்டுக் குட்டிகள் போல் மாப்பிள்ளையும் பெண்ணும் வித விதமாய் சிரிக்க வைக்கப் பட்டு,
வாழ்த்த வருபவர்களும் வாழ்த்தை விட விறைப்பாக வீடியோவுக்கு (!) போஸ் தரவே சரியாகி விடுகிறது நேரம்.. வேடிக்கை என்னவென்றால் போட்டோ எடுக்கும் போது அட்டென்ஷனில் போட்டோவுக்கு போஸ் தருபவர்கூட, போட்டோ எடுத்தது தெரிந்தும் /தெரியாமல் சர்வ ஜாக்கிரதையாய் பார்வை குத்திட்டபடி அசையாமல் நின்று கொண்டிருக்க வைக்கும் காட்சிகள்... சரி..இயல்பாக பேசிக் கொண்டிருப்பது போல் தெரிய வேண்டும் என்பதற்காக மாப்பிள்ளையின் பெற்றோரிடமோ அல்லது மணமக்களிடமோ , சம்மந்தா சம்மந்தமில்லாமல் தத்து பித்து என்று உளறிக் கொட்டும் அவசியம் ஏற்பட்டு விடும் சிலருக்கு.. " இப்ப எங்க வேல..(பத்திரிகையை பெரும்பாலும் சரியாகப் படிப்பதில்லை..அல்லது தெரிந்ததையே ஏதாவது கேட்டு வைக்க வேண்டுமே என்ற நிர்ப்பந்தம்..) அதுக்குள் யாரோ நகருங்கன்னு சைகை காண்பித்ததும் அப்படியே அந்த பேச்சையும், பெசிக்கொண்டிருந்தவரிடம் ஏதோ பழைய விரோதம் போலவும் தடாலென சொல்லிக்கொண்டு புறப்படவேண்டிய கட்டாயம்.. இதி சிலர் சும்மா போகாமல் ..அவசரத்தில்
மாப்பிள்ளை கையைக் குலுக்கி "Many Happy Returns of the day" (அடப்பாவி...கல்யாணத்திற்குமா...!) என்று ஒருவர் ..
"பெஸ்ட் ஆப் லக்"(என்ன இண்டர்வியூவுக்கா போறாங்க) ..இன்னொருவர்.. சொல்லி செல்வது போன்ற காட்சிகள் கூட கிடைக்கும் ..சற்று கிட்டப் போய் கவனித்தால்..!

எவர் கேட்கா விட்டாலும் என்னை ஒன்றும் செய்யமுடியாது என்று ஒரு மூலையில் திறமை உள்ள/ இல்லாத இசை மழை/அட்டகாசம் நடந்து கொண்டிருக்கும்..

கல்யாணத்தில் சுவை மிக்க உணவு சுகாதாரமாக இலையில் பரிமாறி கல்யாண வீட்டுக் காரர்கள் பந்தி விசாரித்து குறை நிறைகளை கவனிக்கும் பழக்கம் ஏறக்குறைய இல்லாமல் போய்விட்டது என்றே தோன்றுகிறது.. அதற்கு பதிலாக..

மேடையிலிருந்து இறங்கி வந்தால்..ஏதோ கிஷ்கிந்தைக்கு உள்ளே சென்று விட்டது போல் உணவு சாப்பிடும் இடம்.. வரிசையாக கடைகள் போல ..சூப், ஸ்வீட், சமோசா..எளிதில் கிழித்துவிட முடியாத சப்ப்ப்பாஆஅத்த்த்தி (சப்பாத்தி தான் ) .. (பாவம் கல்யாணக் காரர் ..வழக்கமாக பெண்ணின் தந்தை ..பணத்தை மட்டும் அழுதிருப்பார்)
சன்னா (என்னா?) ..
வீட்டில் ஒரே ஒரு நாள் அப்படி செய்துவிட்டால் குதிக்கும் அளவுக்கு குழப்பிய குழப்பமாய் பிசி பேலா பாத் , பகாளா பாத் ...,
நிறப் பாகுபாடின்றி வறுத்த காலி பிளவர் ..இன்னும் அது.. இது.. என்று ஒவ்வொரு கடையிலும் கூட்டம்..

முக்கியமாக சுமக்க முடியாத கனத்தில் ஒரு கோப்பைத் தட்டு (அதை தாங்கிய இடது கையில் கொஞ்ச நேரத்திலேயே கட்டை விரல்கீழே நரம்பு வலி உணர்ந்தவர்கள் சொல்லுவார்கள்..)

அந்த தட்டில் .. பெரும் தவறு செய்து விட்ட குற்ற உணர்ச்சியுடன் அல்லது அசகாய வெற்றிக் களிப்புடன் பயந்து ..பணிந்து ..(ஏம்ப்பா இப்படி முறைக்கிறே..இப்பதானே மொத தடவ எடுக்கிறேன்..) வாங்கி வந்து ரெண்டு பேர் மூன்று பேர் ஒபாமா..மோடி .. அலுவலக சண்டைகள் என்று எதையாவது பேசிக்கொண்டே சாப்பிட்டும் சாப்பிடாமலும் அவசரப்பட்டு பாதியில் முடிப்பதும்..அவசரப்படாமல் சிலர் எல்லாக் கடைகளும் மூடும் வரை திரும்ப் திரும்ப சென்று " ரெய்டு " செய்து கொண்டும்..என .பல ரகங்களில் கையேந்தி நிற்பவர்களை காண முடியும் இந்த கூட்டங்களில்.. சிலர் சட்டையை (பொதுவாக... அவரிடம் இருப்பதிலேயே நல்லதை ) சாம்பாராக்கிக் கொள்வதும்.. சன்னாவாக்கி கொள்வதும் நடப்பதும் உண்டு..(ஒழுங்கா சாப்பிடக் கூட தெரியாத ஆள கட்டிக்கிட்டு..அப்புறமா வீட்டில் கிடைக்கும் வசவு ) ...

இந்த கும்பலில் எங்கே நுழைந்து எங்கே வெளியே வருவது என்று தெரியாமல் கல்யாண வீட்டார்களும்.. சில குழந்தைகளும். இதில் விசாரிப்பு எங்கிருந்து நடக்கும்..
(நான் சைவம் என்பதால் என் அவஸ்தைகளை சொன்னேன்..அசைவர்களின் பாடு பற்றி எனக்கு தெரியவில்லை)

சம்பிரதாயமான புன்னகைகள்.. (அட்சதைகள் எல்லாம் யாருக்கு வேணும்..) வெளியில் வரும் போது (தாம்பூலம் ஏதுக்கடி) ஒரு கைப் பை அல்லது பிளாஸ்டிக் பாத்திரம் என்று எதையாவது வீடு வரை பத்திரமாக எடுத்து சென்று அனாவசியமாக தூக்கிப் போட..ஒரு "கிப்ட்"...
எல்லாம் முடிந்து வெளியில் வந்த பின் வழியில் எதிர்ப்படும் நபரின் கிண்டல் .." சூப்பர் விருந்து போல..ஜமாயுங்க" ( படுபாவி.. பசியோட ஹோட்டலுக்கு போய்க் கிட்டிருக்கேண்டா) ..
தம்பதி சமேதராய் வந்து வசவு வாங்கும் கணவன்மார்களும் உண்டு ( இனிமே இந்த மாதிரி கல்யாணத்துக்கெல்லாம் என்ன கூப்பிடாதீங்க ..சாப்பாடா அது.. தாம்பூலம் பாருங்க.. மூஞ்சுறு மாதிரி ஒரு தேங்கா.. இவன்லாம் தேங்கா போடலன்னு எவ கேட்டா..எந்த ஜென்மமாவது வந்து சாப்பிடும் போது எதாவது வேணுமா. கேட்டுதுங்களா ..) ..

வெளியில் மைக் செட் கட்டி "வாராயென் தோழி வாராயோ.." என்று கலகலப்பும், பிள்ளைகளின் விளயாட்டு சப்தங்களும் கொண்டாட்டமும், மணமக்களுக்கு பெரியவர்கள் கையால் அட்சதையும் அன்பான வாழ்த்துகளும் நல்லா இருக்கணும்னு வந்தவர்களும் ..வெளியில் வந்து உணவுக்கு நிற்பவர்களும் வாழ்த்திவிட்டு போன காலம்... போன காலம்தானோ..?

நமது கலாச்சாரம் படு வேகத்தில் முன்னேறிக் கொண்டிருப்பது போல் ஒரு எண்ணம் ..அவ்வளவுதான்.. இது தப்பாகக் கூட இருக்கலாம்..மனதில் பட்டது..சொன்னேன்..வேறு மாதிரி பட்டால் .. மறந்து விடுங்கள்..படித்ததை!

எழுதியவர் : கருணா (2-Feb-15, 4:13 pm)
Tanglish : kalyaana kaalam
பார்வை : 179

மேலே