உங்களை புரிந்து கொண்டால்

உங்களை புரிந்து கொண்டால்...
....................................................

ஒருஆட்டு மந்தையில் ஒருபெண் சிங்கம் நுழைந்தது. பயந்துபோன ஆடுகள் சிதறி ஓடின.தாய்மை நிலையிலிருந்த அந்தப் பெண் சிங்கம் ஒரு குட்டியை பெற்றுப் போட்டு விட்டு இறந்து போனது.

தாயை இழந்த சிங்கக் குட்டிக்கு ஆட்டுக் கூட்டம் அடைக்கலம் தந்து பாலூட்டி வளர்த்தன.ஆட்டுப்பாலைக் குடித்தும், புல் தின்றும், ஆடுகளோடு விளையாடி மே… மே… என்றும் கத்தியது.

வீரமும் கர்ஜனையும் மறந்து செம்மறி ஆடாகவே தன்னை எண்ணி வந்தது.ஒரு நாள் ஒரு சிங்கம் ஆடுகளை வேட்டையாட வந்தது. எல்லா ஆடுகளும் பயந்து ஓடின.

கூடவே குட்டிச் சிங்கமும் பயந்து ஓடுவதைக் கண்டது. வேட்டைச் சிங்கம் வேட்டையாடுவதை விட்டு விட்டு தன்னைப் போலிருந்த குட்டி சிங்கத்தை மட்டும் துரத்திப் பிடித்தது.

சிங்க ஆடு நடுங்கியது.அதைப்பார்த்து சிங்கம் கேட்டது,நீ ஏன் என்னைக் கண்டு பயந்து ஓடுகிறாய்,நீயும் என்னைப் போல வலிமையான என் இனம் அல்லவா?சிங்க ஆடு மே.. மே… என்று கத்தியபடி பதில் சொன்னது,

“நான் செம்மறி ஆடு தானே…நான் எப்படி சிங்கமாவேன்” என்றது.தான் ஒரு சிங்கம் என்பதை அதற்கு உணர்த்த அந்தக் காட்டில் இருந்த ஒரு குளத்தின் அருகே இழுத்துச் சென்றது பெரியசிங்கம்.

“இதோ பார் நீயும் சிங்கம், நானும் சிங்கம் தெரிகிறதா?” என்று கோபமாக கர்ஜித்துக்கொண்டே அதன் தலையை தண்ணீரில் தெரியும்படி கவிழ்த்துக் காட்டியது.

“ஆமாம் நானும் சிங்கம்தான்” என்று தண்ணீரில் தன் நிழலைப் பார்த்த குட்டி சிங்கம் கூறியது.

“ஆஹா! உனக்கு தன்னம்பிக்கை வந்து விட்டது” என்று சிங்கம் பலமாக கர்ஜித்தது.அதைப்பார்த்த சிங்க ஆடும் கர்ஜித்தது.அதன் புதிய கர்ஜனை காடு முழுவதும் எதிரொலித்தது.

தான்ஒரு சிங்கம்தான் என்ற தன்னம்பிக்கை வந்ததால் அது செம்மறி ஆட்டுக் கூட்டத்தை விட்டு சுதந்திரமாக சுற்றித் திரிந்தது.

ஆம்,அன்பு நண்பர்களே.,

இந்தக் கதை சொல்லும் கருத்து யாதெனில்,

மனிதர்கள் தங்கள் சக்தியைப் புரிந்து கொள்ளாத வரை செம்மறி ஆடுகளைப் போல நடந்து கொள்கிறார்கள்.

புரிந்து கொண்டாலோ அப்போதே அவர்கள் சிங்கத்தைப் போலவே வலிமை உடையவர்கள் ஆகிறார்கள்.

மனித மனம் அளப்பரிய சக்தி கொண்டது.

ஒன்றை நினைத்தால் அதை நிச்சயம் அடையக்கூடிய

சக்தியை தரவல்லது. எழுந்திருங்கள்.

துணிவோடு நில்லுங்கள். 

உங்களை சுற்றி பிணைக்கப்பட்டுள்ள 

தளைகளை அறுத்தெறியுங்கள்.

உங்களால் நிச்சயம் சாதிக்க முடியும். -

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (3-Feb-15, 1:11 pm)
பார்வை : 400

மேலே