நெஞ்சுப் பொறுக்குதில்லையே – மண் பயனுறவேண்டும் கவிதைப்போட்டி

கையில் காந்தி படம் பதித்த ருபாய் நோட்டு – மனம்
போதைப் போத்தல் வாங்கத் துடிக்குது......!

ஆரத்தித் தட்டில் வீழ்ந்த ஐந்நூறு ருபாய் – மனம்
ஓட்டுரிமையை கையூட்டாக மாற்றுது......!

தமிழையும் தன் இனத்தையும் – மனம்
தாரைவார்க்கச் சொல்லுது சுய நல அரசியல்......!

தன் மார்பக அழகு தடுமாருமென – மனம்
தர மறுக்குது, தாய் பாலை......!

அறிவுத் தோட்டத்தில் பூ மலரும் முன்பே – மனம்
காமக் கழிவு நீர் இறைத்துக் கசக்குகிறது......!

உதடுகள் தமிழ் உயிர் மூச்சு என்று சொல்லுது – மனம்
ஆங்கிலப் பள்ளிக்கு படிவம் வாங்க அலையுது......!

காத்தவளுக்குக் கஞ்சி ஊற்ற காசில்லை என்ற – மனம்
கல்வெட்டில் தன் பெயர் பதிக்கத் துடிக்குது.......!

சிந்தனைக் கல்வியைச் சிதைக்கச் செய்த – மனம்
புத்தகப் பொதிமூட்டையைச் சுமக்கச் சொல்லுது.......!

கணினியைக் கட்டிபிடித்துக் காமத்தை ருசித்த - மனம்
அதைக் காதல் எனச் சொல்லுது.......!

மனிதத்தைத் தொலைத்த நீச்ச – மனம்
செய்யும் செய்கையால் நெஞ்சுப் பொறுக்குதில்லையே......!

எழுதியவர் : பெ.கோகுலபாலன் (7-Feb-15, 4:10 pm)
பார்வை : 85

மேலே