நெஞ்சு பொறுக்குதில்லையே ===மண் பயனுற வேண்டும் போட்டிக் கவிதை

பச்சைக் குழந்தைப் பசிதீர்க்க ஏங்கும்தாய்
பிச்சைஎடுத்துப் பிழைத்திருக்க -இச்சித்து
வஞ்சிக்க எண்ணி வலைவிரிப்போர் கண்டாலே
நெஞ்சு பொறுக்குதில்லை யே!

முகையவிழாச் சின்ன மலர்கசக்கி வீசி
திகைப்படையச் செய்கின்றோர் வாழ –நகைப்போடு
அஞ்சாமல் வாதாடி ஆதாயங் கொள்வோரை
நெஞ்சு பொறுக்குதில்லை யே!

சாதி மதமழிக்குஞ் சாதி நமதென்னும்
சாதி சமைக்காமல் சாதிப்போர் சாதிக்கு
நஞ்சூட்டிக் கொன்று நலிவடையச் செய்வோரை
நெஞ்சு பொறுக்குதில்லை யே!

உழைப்போ ருதிரம் உறிஞ்சிக் குடித்தேப்
பிழைக்கும் பெருச்சாளிக் கூட்டம் இழைக்கின்ற
வஞ்சகம் வளர வளமிட்டு வைப்போரை
நெஞ்சுப் பொறுக்குதில்லை யே!

போதைப் பொருளால் புரியா இளைஞர்தம்
பாதை தனைமாற்றிப் பித்தாக்கும் தீததனை
கஞ்சுகன்மார் செய்யும்கண் மூடித் தனங்கண்டு
நெஞ்சு பொறுக்குதில்லை யே!
(கஞ்சுகன்=காவலன்)
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (8-Feb-15, 2:37 am)
பார்வை : 151

மேலே