காதலும் கவிஞனும் தொடர் 3 ,காதலைப் பாடலாமா

இதுவே என் எதிர்க் கவிதை

குருதிப் புனலும் சதையும் கொண்டே
குலவும் ஒருபோதில்
மருகிக் கணமே மின்னல் போலும்
மாயை சுகம் காட்டும்
உருவைத் தொழுதே தினமும் பாடும்
ஒருவன் கவியாமோ
சருகைப் போலே காயும் நாறும்
பிணமும் கருவாமோ

நிலவை அழகென் றுலகில் நின்றே
கண்டால் அழகாகும்
நிலவில் நின்றால் மண்ணும்தூசும்
வெறுமை என்றாகும்
சிலையில் பெண்ணை வடிக்கும் சிற்பி
செயலை வியந்தோரின்
கலையென் றுள்ளம் ஏற்கும் கவியில்
கண்டால் பிழையாமோ

மதனை ரதியை மனதில் கொண்டால்
மறுவென் றிகழ்வாமோ
அதனைப்பாட அடிகள்கொண்டால்
ஆக்கம் பழுதாமோ
எதனைப் பாடக் கவிஞன் எண்ணம்
எழுமெப் பொருள்யாவும்
உதவிக் கவிதைக் கருவாய் பொருளாய்
உருவம் பெறும்மாறும்

உணர்வில் உயிரில் ஊற்றும்வண்ணக்
குழம்பைக் கைக்கொண்டு
கணமும் நில்லா துலகத்திரையில்
காட்சி ஓவியமாய்
தணலைத் தீயைத் தண்ணீர்க் குளுமை
தருமாம் எதுதானும்
கணமே தீட்டும் கலைஞன் கையில்
கட்டும் விலங்கில்லை

பெண்மை அழகுஎன்றால் என்ன
பிழைகள் அதிலுண்டு
பெண்ணே இல்லா வாழ்வுகொண்டார்
பாரில் எவருண்டு
பெண்ணி லழகைகண்டோர் அதனை
பேசல் பிழையென்றால்
மண்ணில் தமிழின் கவிகள் பலதும்
மறைந்தேபோகாதோ

உலகம் எங்கே உதயம்கொண்டாய்
உந்தன் வரவறியேன்
கலகம் செய்யும் விண்ணின் தீயின்
கடிதோர் சுடுகோரம்
வலமும் புறமும் இடியும் வெடியும்
இவைகள் தாமறியேன்
நிலமும் கண்ட நாளில் இருந்தே
உலகை நானறிவேன்

புவியில் மரமும் செடிகள் கொடிகள்
மலரை நான்கண்டேன்
ரவியும் மதியும்முகிலும் விண்ணின்
மீனும் நான்கண்டேன்
குவியும் விரியும் மலரில் அழகைக்
கொட்டி வைத்தவரே
கவியில் காட்டும் பெண்ணிலெழிலைக்
காணச்செய்கின்றார்

மனிதம் என்னும் அழகைக் கலையின்
கண்ணால் அதைநோக்கி
மனதில் குற்றம் இல்லா துணர்வு
கொண்டால் மகிழ்வாமே
அழகை அழகென் றுள்ளம் சொல்ல
அதற்கோர் வயதில்லை
மலரை எழிலென் றெழுதும் கைகள்
மாற்றம் தேவையில்லை

அழகு என்பார் எதுவும் பொருளில்
இலதாம், விழிகொண்டே
பழகும் மனதின் பார்வைகொள்ளும்
உணர்வே எழிலென்றார்
மழலைசெல்வம் மடியில்தூங்கும்
அழகை விழிகாணும்
குழலில் பூவைச் சூடும் வதனம்
எழிலும் அதுபோலும்

************************

எழுதியவர் : கிரிகாசன் (11-Feb-15, 3:55 pm)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 57

மேலே