ஓட ஆரம்பித்தேன், அவசர உலகினுள்

சின்னச் சிணுங்களில் உறக்கம் கலைத்தவளை
செல்லமாய் தட்டி உறங்க வைத்து..

உதைத்தும், கசக்கியும்கூட முகம் சுளிக்காமல்
அணைத்துக் கிடந்தவனை விலக்கி எழுந்து..

நீலக்கடலில் நெடுங்குளியல் கண்டு
மின்னும் பொன்மேனியில் எதிர்வந்தவனிடம்
கண்சுருக்கி சூரியவணக்கம் சொல்லி..

அந்தி சாய்கையில் அஞ்சி ஒளிந்து
அதிகாலையில் இதழ்கள் விரித்து
நகைத்தாடிய பூக்குழந்தைகளை உச்சிமுகர்ந்து..

பச்சைகளை பஞ்சணையாக்கி கண்ணயர்ந்த
நீர்த்திவலைகளை இலைகட்டிலிலிருந்து தள்ளிவிட்டு
சரிந்து விழுந்தவர்களை ரசித்துவாறு நடக்க..

குளிரை அணிந்துகொண்டு பவனி வந்த
தென்றல் தீண்டிச் சென்ற திசைநோக்கி
அனிச்சை செயலாய் நான் திரும்பி முன்செல்ல..

முன்செல்ல.. முன்செல்ல..

இல்லை.. இல்லை..

அம்மா குரலில்
உறக்கம் களைந்து

பின்செல்ல.. பின்செல்ல..

வாய்திறந்து அலற ஆரம்பித்தது, கடிகாரம்
எட்டு ஆனது சொல்லி..

நானும்.. அய் அய்யோ..

ஓட ஆரம்பித்தேன், அவசர உலகினுள்!!

எழுதியவர் : சு.முத்துக்குமார் (11-Feb-15, 10:17 pm)
சேர்த்தது : சுமுத்துக்குமார்
பார்வை : 77

மேலே