காக்கைச் சிறகினிலே

காக்கைச் சிறகினிலே சூழ்ந்திருக்கும் காரிருளில்
நோக்க நம்மனதில் தோன்றும் கருப்பொருளே
நீக்கமற எல்லோரும் இருந்திட்டே வந்ததாயின்
அக்கரையில் மூழ்கிய கருவறையின் கருப்பே

இப்புவியில் நாம்வரவே இதமாகவே போற்றி
ஈரைந்து மாதங்கள் இணையில்லா துணையாய்
கருப்பென்று சிவப்பென்று நிறமறியா வாழ்க்கைக்கு
பொறுப்பான முன்னோட்டம் தந்தனள் தாயே

சோறூட்ட காட்டிய காக்கையின் இறகினிலே
நினைவூட்டு கின்றாளோ இருந்தறையின் நிறத்தை
பறந்தங்குச் சென்ற பறவையின் வீரியம்போல்
சிறகொன்று பெற்றுச் சிறக்க நீயென்றாளோ

கண்ணின் கருவிழியில் களைகூட்டும் மையெழிலில்
மண்ணில் மாந்தர்தம் பொய்யுரையில் மறைந்திருக்கும்
கள்ளத்தன காரிருளை கணித்தங்கே ஆழ்மனதில்
உள்ளத்தில் உள்ளுவாய் உயர்வென்று செப்பினளோ

ஒளிக்கற்றை உள்வாங்கும் தனிச்சிறப்பு உண்டுனக்கு
வெளிச்சத்தை வகைப்படுத்தி வேறுலகம் நீயமை
இருட்டென்று ஒன்றில்லை இயம்பிடுவாய் இனி
இமயமுதல் குமரிவரை என்றனளோ ஈன்று

--------- முரளி

எழுதியவர் : முரளி (15-Feb-15, 11:55 am)
பார்வை : 73

மேலே