கல்லெண்ணெய் பொறியாளன்

பெற்றத் தாயினை தவிக்கவிடும்
அற்ப மானிடர் சிலரென்றால்-அச்
சிற்சில பேரில் நானொருவன்....

உயிர் கொடுத்த மண்ணை
உயர் அழுத்த பூமிப் பெண்ணை
தாயவள் எனவுணர்ந்தும்
துகிலுரித்து பலமுறை
பாலியல் வதை செய்கிறோம்.....!

துச்சமென எம்மை
தூக்கி எரியாமல் -
கரும்பச்சை நிறத்தினில்
கல்லெண்ணெய் ஊற்றாய்
கருணை பொழிகிறாள்....!

கல்லெண்ணெய் காய்ச்சி தரம்பிரித்து
கரியமில வாயுவை வளிபரப்பி
செயற்கை பொருள்கள் யாவும் செய்கிறோம்
சொகுசாய் இடம்பெயர்தல் காண்கிறோம்
சுவைகண்ட பூனையாய்-அன்னை பூமியை
சுரண்டி இன்பம் விழைகிறோம்...!

முலைப்பால் கொடுத்து எமை வளர்த்தாள்
முப்போகம் விளைவித்து உணவிட்டாள் -
நச்சால் முத்தமிட்டோம் நன்றியற்று
நாள்பல சுரந்து உயிர்வறண்டு போனவள்
மீண்டும் சுரக்கிறாள் உடல்சதை கசக்கி....

இத்துணை கொடுமை உனக்கன்றோ....?
இழைப்பவர் நாங்கள் சிலரன்றோ...?
இறக்கும்வரை உமக்கு பாரமானோம்
இறந்தபின்னேனும் உரமாவோம் -அந்த
வாய்ப்பை நோக்கி வாழ்வை கழிக்கிறோம்.....!

எழுதியவர் : காசி தங்கராசு (23-Feb-15, 12:46 am)
பார்வை : 71

சிறந்த கவிதைகள்

மேலே