கால மாற்றம்

இந்த கட்டுரையை தொடங்கும்போது இந்த தலைப்பு சரியானதா என சிந்திக்கிறேன். காலம் மாறுகின்றதா அல்லது காலதிற்கேற்றற்போல் நாம் மாறுகின்றோமா ? இரண்டுமே உண்மை....

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நமது அன்றாட வாழ்கையை எண்ணிப்பார்க்கிறேன். சிறு வயதில் நான் தெருவில் கண்ட பல காட்சிகள் இப்போது இல்லை.. வீட்டிற்கு தேவையான அன்றாட பொருட்கள், வீட்டு வாசலிலேயே கிடைப்பதுண்டு.. உப்பு விற்பவர்களும், பாத்திரம் மற்றும் துணி விற்பவர்களும், தங்களுக்கென்ற பாணியில் கூவி கூவி அழைத்து விற்பனை செய்வதுண்டு.. "கீரம்மோவ்... அரக்கீர.." என்று கீரை விற்பவனின் ஒலி இன்னும் என் காதுகளில் ஒலிக்கின்றன...

"இந்தப்பா ஐஸ்..." என்று ஐஸ் விற்பவரை அழைத்து எனது அன்னை ஐஸ் வாங்கிக்கொடுத்தது இன்னும் என் நினைவில் உள்ளது.. "என்னப்பா காய்கறி விலை கேட்டா, ஆனை விலை குதிரை விலை சொல்லுற" என்ற கேள்வியும், " ஆனை குதிரை எல்லாம் கிடைக்கும், காய்கறி கிடைக்கிறதுதான் கஷ்டம்" என்ற பதிலும் எனது இனிமையான நினைவுகள்..

சிறு வயதில் மாலை நேரங்களில் நண்பர்களுடன்.. கிட்டி.. கோலி.. பம்பரம் விளையாடிய சம்பவங்கள் என் மனத்திரையில் விரிகின்றன.. இப்படி நிறைய நினைவுகள் சொல்லிக்கொண்டே போகலாம்.. இந்த நினைவுகள் எல்லாம் நினைவுகளாகவே ஆகிவிட்டன இந்த கால மாற்றத்தால்..

நான் கூறிய எந்த விஷயங்களும் தற்போது காணக்கூடியதாக இல்லை.. குழந்தைகள் விளையாடுவதற்கு வெளியே வருவதில்லை. கணிப்பொறி.. கையடக்க தொலைபேசி.. என்று விஞ்ஞான வளர்ச்சியால் விளைந்த பொருட்களைக்கொண்டு வீட்டிலேயே விளையாடுகின்றனர்.. அவர்களுக்கு நான் கூறிய விஷயங்கள் அனைத்தும் சிரிப்பூடுவதாகவே இருக்கின்றது. அதில் கிடைக்கும் சந்தோஷங்களை அவர்களால் உணர முடிவதில்லை. நமது அன்றாட தேவைக்கு நாமே கடைக்கு சென்று நிர்ணயிக்கப்பட்ட விலையில் பொருட்களை வாங்கி வருகிறோம்.. அண்டை வீட்டாருடன் பேசும் வாய்ப்பு குறைந்து விட்டது.. அவர்களின் உதவியோ அறிமுகமோ தேவை இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். அடுத்த வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று கூட தெரிவதில்லை..

மொத்தத்தில் இந்த கால மாற்றத்தால், பல வசதிகளும் வாய்ப்புகளும் அதிகரித்து இருந்தாலும்.. நாமும் நமது சந்ததியினரும் இழந்ததே அதிகம் என்று தோன்றுகின்றது...

எழுதியவர் : சிந்தனை சிற்பி (25-Feb-15, 2:14 am)
Tanglish : kaala maatram
பார்வை : 625

மேலே