அமெரிக்க தூதரகம் முற்றுகை - மே 17 இயக்கத்தின் வினோதமான போராட்டம் --

அமெரிக்க தூதரகம் முற்றுகை - மே 17 இயக்கத்தின் வினோதமான போராட்டம் -- !

மே 17 இயக்கத்தை சேர்ந்தவர்கள் மார்ச் 14 -ல் சென்னையில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தினை முற்றுகை இடுகிறார்களாம். அமைதியான வழியில் போராட்டம் நடத்தும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது.

ஆனால், அந்தப் போராட்டத்துக்கு அவர்கள் சொல்லும் காரணம் தான் விநோதமாக இருக்கிறது.

" ஐநா அறிக்கை தள்ளிப்போனதில் மே 17 இயக்கத்துக்கு என்ன கவலை? "
" ஐ.நா மனித உரிமை மன்றத்தில் இலங்கை மீதான அறிக்கையை சமர்ப்பிக்க தேவையில்லை, சற்று கால அவகாசம் கொடுப்போம் என்று சொல்லி, அறிக்கையை பின்னுக்கு தள்ளியது அமெரிக்கா " என்கிறது மே 17 இயக்கம்.

கடந்த 2014 ஆம் ஆண்டில், மே 17 இயக்கம் எந்த அமெரிக்க தீர்மானத்தை எரித்து போராட்டம் நடத்தியதோ, அதே தீர்மானத்தின் அடிப்படையில்தான் ஐநா மனித உரிமை ஆணையரின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருந்தது.

இப்போது மார்ச் 25 க்கு பதில் செப்டம்பருக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தீர்மானமே தேவையில்லை என்று அதனை எரித்தவர்கள் - அந்த தீர்மானத்தின் அறிக்கை தள்ளிப்போடப்படுவதாக ஏன் குற்றம் சாட்ட வேண்டும்?

" ஐ,நாவின் விதிப்படி நடக்க வேண்டிய சர்வதேச சுதந்திர விசாரணையை தடுத்து நிறுத்தாதே " - என்கிறது மே 17 இயக்கம்.

" ஐ,நாவின் விதிப்படி நடக்க விசாரணை " - இப்படி ஒரு மாய மான் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை.

ஐநாவில் ஒரு ' சர்வதேச விசாரணை ' நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டுமானால், ஐ.நாவின் உறுப்பு நாடுகள் அதனை தீர்மானமாகக் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை, ஐநா பொதுச்சபை, ஐ.நா பாதுகாப்பு சபை ஆகிய இடங்களில் மட்டுமே இத்தகைய தீர்மானத்தை முன்வைக்க முடியும்.

இவற்றில் ஓரளவு ஜனநாயகம் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா மட்டுமே இவ்வாறான தீர்மானத்தை முன்வைத்தது.

இன்னும் வலிமையான விசாரணையும் அதன் மீது பன்னாட்டு குற்றவியல் நீதிவிசாரணையும் நடக்க வேண்டும் என்றால் - அது ஐ.நா பாதுகாப்பு அவையால் மட்டுமே முடியும். அங்கு தீர்மானத்தை ரத்து செய்யும் வீட்டோ அதிகாரத்துடன் சீனாவும் ரஷ்யாவும் உள்ளன.

இதையெல்லாம் கடந்து ஐ.நா பொதுச் செயலர் பான் கி மூன் தன்னிச்சையாக விசாரணை நடத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்த எந்த வழியும் இல்லை.

இலங்கைக்கு எதிராக அப்படிப்பட்ட முயற்சி எதுவும் இதுவரை முயற்சிக்கப்படவே இல்லை.
ஐ,நாவின் விதிப்படி " நடக்க வேண்டிய சர்வதேச சுதந்திர விசாரணை " என்று மே 17 இயக்கம் எதைக் கூறுகிறது ?

அப்படி ஒரு விசாரணைக்கான முன்முயற்சி எதுவுமே இல்லாத நிலையில், இல்லாத அந்த விசாரணையை யார் தடுப்பது?

ஈழத்தமிழர் இனப்படுகொலையில் அமெரிக்காவை மட்டும் குற்றம் சாட்டுவது வேண்டாத வெட்டி வேலை.

இனப்படுகொலையில் இந்தியாவும், சீனாவும் தான் மிகப்பெரிய குற்றவாளிகள். இந்த நாடுகள்தான் இலங்கையை இன்றுவரை காப்பாற்றி வருகின்றன.

இனப்படுகொலையில் அமெரிக்காவுக்கும் பங்கு உண்டு என்றாலும், அந்த நாடு வரிசையாக 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து, இலங்கை சர்வதேச அரங்கில் விவாதிக்கப்பட காரணமாகவும் இருந்துள்ளதை மறந்துவிடக் கூடாது (அமெரிக்கா சுயநலத்துடன் தான் இதைச் செய்தது. சுயநலம் இல்லாத வெளியுறவுக் கொள்கை உலகின் எந்த நாட்டிலும் இல்லை)

( 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் ஜெனீவா ஐநா மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, நான் அந்த அவைக்குள் இருந்தேன். அங்கு இந்தியா, சீனா, ரஷ்யா, கியூபா ஆகிய நாடுகளின் ஈழத்தமிழர்களுக்கு எதிரான மனித்ததன்மையற்ற செயல்பாட்டை நேரில் பார்த்துள்ளேன்)

ஐ.நா விசாரணை அறிக்கை செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. ஆனால் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு அமெரிக்காவை தனியாகவோ, முதன்மையாகவோ குற்றம் சாட்டுவது நியாயம் இல்லை.
Courtesy
அருள் ரத்தினம்
- பசுமைத் தாயகம் -

எல்லாம் சரி..... திருவாளர் அருள் அவர்களே...
இவ்வளவு தெளிவான கருத்துக்களை கொண்ட நீங்கள் பா.ம.க. வில் இருப்பது தான்...தமிழர்களுக்கு / இடது சாரிகளுக்கு மேலும் பின்னடவை ஏற்படுத்தும்....என்று கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்..!
- சங்கிலிக்கருப்பு -

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (26-Feb-15, 2:57 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 62

சிறந்த கட்டுரைகள்

மேலே