காலமகள் ஓவிய மே - நேரிசை வெண்பாக்கள்

விழிவழி என்னுள்ளே தந்தாய் வருகை,
மொழிவழியில் மாலையின் அர்த்தம் – எழிலே
மனவழி சொல்லி மகிழ்ந்துனைத் தந்தாய்
உனதுநெஞ்சில் வாழ்வேன் உவந்து! 1 *

பூவே புதுமலரே புன்னகை பூத்தவளே!
நாவினில் தேனே! நயனமதில் – பூவிதழே!
வானம் வசப்படும் வாழ்வும் அளித்தாயே!
நானுமினி வாழ்வேன் மகிழ்ந்து! 2 *

காதல் கவிதையாம் கண்கவர் தேவதைநீ
ஆதலால் அந்திப் பொழுதினில் – காதலர்
பாதையில் நின்றயெனைப் பார்வையால் வென்றுநற்
பாதை விரித்தமலர்ப் பா! 3 *

மானே! மனதிற் கினியமஞ் சள்நிலாவே!
தேனே! சுவைமிகு தீந்தமிழே! – மீனேதான்!
ஏனோ உனதுபார்வை இன்சுவையாம் என்னுள்ளே
தேனோடை யாய்ப்பாயும் போது! 4 *

பூங்குழலி புன்னகை செய்யும் புதுக்கவிதை!
மாங்கனிக் கன்னமோ மன்மத – தேங்கிண்ணம்!
தேனிதழ்கள் இன்பத்தின் தேனாறு ஆகுமே!
நானின்றேன் என்னை இழந்து! 5 *

கயல்விழி யோரம் உனதுகாதல் சொன்னாய்
புயல்வந்த மாலையிலும் பொன்போல் - தயங்கி
புதுத்தென்றல் போலவரு வாயந்தி நேரம்
அதுதந்த நல்லுறவே நீ! 6 *

உயிரே உணர்வுகளின் காதல் உயிலே
வெயில்கால வீச்சுக் குளிர்ந்த - துயிலே
பயிர்பசுமை போல்வாழ்வில் வந்த வளம்நீ
உயிரில் துடிக்கும் உணர்வு! 7 *

உணர்வுகள் பூக்கும் மனமலர்த் தோட்டம்
உணர்வுகள் பேசா இதழ்கள் – உணர்வே
கனவு விரிபொழில் காதல் – நனவே
நினைவின் வளர்நிலவு நீ! 8 *

வளர்நிலா வானிலா என்வாழ்வி(ல்) உண்டோ
வளர்மலர் பூவனத்தி லாயென் – களரில்
வளர்கனா உன்நெஞ்சி லாயென் கவியில்
வளர்காதல் சொல்லுமேநம் நெஞ்சு! 9 *

நெஞ்சின் நினைவுகளை நீலவிழி யில்வைத்த
மஞ்சள்வான் சங்கமமா லையெழிலே - கொஞ்சுதமிழ்
நீலவிழி யில்நீயே மௌனமொழி பேசுகிறாய்
காலமகள் ஓவிய மே! 10 *

படம்: லண்டன் நகரிலுள்ள 'Madame Tussauds Museum' த்தில் உள்ள 'Sleeping Beauty' என்ற மூச்சு விட்டு உறங்கும் நிலையில் தோன்றும் அழகியின் மெழுகு பொம்மை.

நன்றி: கவின் சாரலனின் ‘காதல் அந்தாதி’ பாடல்கள் பத்துமே இவ்வெண்பாக்களுக்கு ஆதாரம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Feb-15, 3:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 82

மேலே