பிடிச்சிருக்கா

என்னை பிடிச்சிருக்கா..?

சின்ன வயசினிலே
பல நேரம் மொறச்சிருப்ப‌
சில நேரம் சிரிச்சிருப்ப‌
எனை ஏனோ வெறுத்திருப்ப‌
என் பார்வை பொறுத்திருப்ப‌

என்னை பிடிச்சிருக்கா..?

கல்லூரிக் காலத்தில‌
காதல நான் சொல்லவர‌
காத தூரம் ஓடவச்ச‌
கடைசிவரைக்கும் பேசமறுத்த‌
என்மனசப் போட்டு நல்லா வறுத்த‌

என்னை பிடிச்சிருக்கா..?

காதலிச்ச பின்னாலும்
கண்ணால மட்டும் பேசிடுவ‌
கரத்தால பேசவந்தா
மொறத்தால அடிச்சிடுவ‌
சிரத்தால மோதிடுவ‌

என்னை பிடிச்சிருக்கா..?

கைபிடிச்ச நேரத்தில‌
கண்சிவந்த வெக்கத்தில‌
மண்பாத்த மொதமொதலா
மனசுக்குள்ள ஆட்சிபிடிச்ச‌
மத்தாப்பையும் குளிரவச்ச‌

என்னை பிடிச்சிருக்கா..?

பல ஆண்டு இல்லறத்தில்
பல சண்டை கோபம் கண்டோம்
ஒரு முறை கூட கேட்காத வார்த்தை
இப்போ நூறு முறை கேக்குறேனே
என்னை பிடிச்சிருக்கா..?

என்னை பிடிச்சிருக்கா..?

வார்த்தை கொடுக்கும் பற்கள் போச்சு
சொற்கள் இப்போ குழறியாச்சு
கைத்தடியே நடக்க உதவியாச்சு
கண்கள் ரொம்ப மங்கியாச்சு
நான் கேட்பது காதில் விழுகிறதா?

என்னை பிடிச்சிருக்கா..?

உனக்கும் முகத்தில் சுருக்கமாச்சு
இரு கைவிரலும் நடுக்கமாச்சு
மெலிதாய் என்வினா கேட்டதுமே
கண்ணில் உதித்தது கண்ணீரன்றோ..
அதுவென் கேள்வியின் விடையும‌ன்றோ..

என்னை பிடிச்சிருக்கு...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (6-Mar-15, 6:07 am)
பார்வை : 301

மேலே