திக்குத் தெரிந்தது காட்டில்

மினுக் மினுக்கென
மலையின் ஏற்றத்தில்
தெரியும் தூரத்து
விளக்கொளி..

தூறலா..சாரலா
என்று தெரியாத
நீர்த்திவலைகள்
தெறிப்பு..

இருள் கவ்வும் நேரம்
அவள் கைகளில் நான்..
அழைத்து செல்கிறாள்..
புதர்களின் ஊடே..

காட்டுவாசியாம்..!
காட்டுவாளாம்
எனக்கு வழி..!

முன்பின்
பார்த்ததில்லை..
அவளை..நேரில்..
ஆனால்..
ஆனால் ..
ஆனால்..
என்னவோ நெருடுகிறதே..
என்ன அது..?

தனியே ஒரு ஏகாந்தப்
பயணம்
இந்த குளிர் மலையில்
எங்கோ தவறு..
வழி மறந்தது..
திக்குத் தெரியாத காட்டில்
இப்போது நான்!

சுற்றி சுற்றி..
புதிய புதிய
கால் தடங்களற்ற
காட்டினில்
உழன்ற போதுதான்
அவள் கால் தண்டை சத்தம்
கேட்டது..

இன்னும் எவ்வளவு தூரம்..
கேட்டேன் அவளை..
பேசாமல் வா..
என்று சைகை..
பதிலாக..!

பதுங்கிடு ..உடனே..
என்று படுத்தாள்..
புதரின் இடையிலே..
அசைந்து செல்லும்
ஒற்றை யானை
பார்க்கவில்லை எங்களை..

இதோ..
தெரிகிறது..
வளைந்து போகும்
கொண்டை ஊசி
வளைவுச் சாலை..

போய் வா என்றாள்.
ஒன்று சொன்னால்
நம்புவாயா என்றேன்..

ம்ம்ம்..

நேற்றிரவு
என் கனவில் வந்த
தேவதை நீதான் ..
எதிர்பார்க்கவில்லை..
உன்னை இன்று பார்ப்பேனென்று..
நம்புவாயா..?

அவள் நம்பவில்லை
என்பது அவள் சிரிப்பில்
தெரிந்தது..
இப்போது நம்பு என்றேன்..

உன்னோடு வருகிறேன்
நீ எனக்கு வேண்டும்..
உன் குடிசைக்கே போ..
என்றேன்..

விழித்தாள்..
கை பிடித்தேன்
திக்குத் தெரிந்தது..
காட்டில்..
நெருடலும் அகன்றது! .

எழுதியவர் : கருணா (7-Mar-15, 2:08 pm)
பார்வை : 122

மேலே