இந்தியாவின் முதல் ஐஎப்எஸ் வீராங்கனைசிபி முத்தம்மா

இந்தியாவின் உயர் அதிகாரிகளாக ஆவதற்கு ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்.ஆனால் அவற்றில் வெற்றிபெற்றாலும் பெண்கள் அதில் சேர முடியாத நிலை இருந்தது. அதை முதலில் உடைத்து வெற்றி பெற்ற பெண் சி. பி. முத்தம்மா (1924 - 2009).அவர் கர்நாடகத்தில் பிறந்தவர்.

அவர் சென்னையில் உள்ள பெண்கள் கிருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். சென்னை பிரெசிடென்ஸி கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பை முடித்தார். கல்லூரிகளில் மூன்றுமுறை தங்கப்பதக்கம் பெற்ற மாணவி.

இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரியாக 1949-ல் பணியில் சி.பி. முத்தம்மா சேர்ந்தார்.

அவர் காலத்தில் வெளியுறவுத் துறையில் உள்ள பெண் அதிகாரி திருமணம் செய்ய வேண்டும் என்றால் அரசின் அனுமதியைப் பெற வேண்டும், திருமணம் வேலையைத் தடுக்கிறது என அரசு கருதினால் அவர் ராஜினாமா செய்துவிட வேண்டும் என்பன உள்ளிட்டுப் பெண்களுக்கு எதிரான பல விதிகள் இருந்தன.

அவற்றை எதிர்த்து முத்தம்மா உச்ச நீதிமன்றத்தை அணுகினார். வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணய்யர் தனது தீர்ப்பில் “வெளியுறவுத் துறையில் காணப்படும் 8(2)-ம் விதி பெண்களுக்கெதிரான பாகுபாட்டை வெளிப்படையாகக் காட்டுகிறது.

ஒரு பெண் திருமணத்துக்கு முன்னர் அரசின் அனுமதியைப் பெற வேண்டுமென்றால் ஒரு ஆண் அதிகாரியும் அத்தகைய அனுமதியைப் பெற வேண்டும் என்பது அவசியம். தமது குடும்பப் பொறுப்புகள் காரணமாக ஒரு பெண் தனது பணியைச் சரிவரச் செய்ய முடியாவிட்டால் அவரது பணி பறிபோகும் என்றால் அந்த விதி, மணமான ஆணுக்குமல்லவா பொருந்தும்?

விதி 18 அரசியல் சாசனத்தின் 16-ம் பிரிவுக்கு முரண்பட்டதாகும். திருமணமான ஆண் வெளியுறவுத் துறையில் பணியிலமர்த்தப்படுவதை உரிமையாகக் கோரமுடியும் என்றால் திருமணமான பெண்ணுக்கும் அல்லவா அது பொருந்தும்? பெண்கள் பலவீனமானவர்கள் என்ற கருத்தாக்கம் கொண்ட ஆணாதிக்கக் கலாச்சாரத்தின் தொடர்ச்சியல்லவா இத்தகைய நடவடிக்கைகள்? சுதந்திரமும் நீதியும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. அரசியல் சாசனம் சொல்லுகிற சமநீதித்துவம் நடைமுறையில் செயல்படுத்தப்படுவதில்லை என்பதை அல்லவா இது காட்டுகிறது என்று எடுத்துரைத்தார்.

மேற்காணும் பாலியல் பாகுபாடு நிறைந்த விதிகள் நீக்கப்பட்டதாக வெளியுறவுத் துறையின் சார்பில் பிரமாணப் பத்திரம் அளிக்கப்பட்டதை நீதிபதி ஏற்றுக்கொண்டார். முத்தம்மாவின் தகுதி பதவி உயர்வுக்கு ஏற்றதாக இருக்கிறதென அறிவித்த அரசு அவரை நெதர்லாந்துக்கான இந்தியத் தூதராக நியமித்தது.

இந்த வழக்குக்குப் பிறகு ஆணாதிக்க விதிகள் உடனே மாற்றப்பட்டன. இதனால் முத்தம்மா பதவி உயர்வுகளைப் பெற்றார். வெளிநாட்டு தூதர், ஹைகமிஷனர் பதவிகளில் அமர்ந்த முதல் இந்தியப் பெண் ஆனார்.

32 ஆண்டுகள் அரசுப்பணியைச் செய்தபிறகு 1982-ல் ஓய்வு பெற்றார்.அனாதை ஆசிரமம் கட்ட அன்னை தெரசாவுக்கு டெல்லியில் இருந்த அவரது சொந்த நிலம் 15 ஏக்கரைத் தந்தார். தனது 85-வது வயதில் 14.10.09 அன்று காலமானார்.

எழுதியவர் : (8-Mar-15, 8:07 pm)
பார்வை : 110

சிறந்த கட்டுரைகள்

மேலே