ஒத்திகை நேரம்-Mano Red

பாதரச பிம்பங்களின்
ஆதரவு நிழலில்,
ஓரளவு ஒழுகி
பேரழகில் படர்ந்திருந்தது
ஒத்திகை நேரத்துக்கான
ஒப்பனை முகங்கள்..!!

பழக்கப்பட்ட நடிப்பு,
சலிக்கப்பட்ட கலைஞர்கள்,
முந்தானை பிடித்து
முறையாய் நடக்கும்
மூத்த மகனை
நினைவூட்டியது காட்சிகள்..!!

போதிய காற்றுடன்
ஊதிய பலூன்,
மோதிய பின்னும்
வீதியில் பறந்ததைப் போல
கேலிப் பேச்சுக்களை தாண்டி
அழகாய் நிறைவாய்
வாழ்ந்து நடித்தனர்..!!

சோகத்தில் வெளிறியிருந்தது
அம்முகச் சாயல்,
இருப்பினும்
மேக வெளியில்
வேகமாய் கிழிந்த
மின்னலின்
புன்னகையை ஒத்திருந்தது
கோமாளியாய் அவன் நடித்ததில்..!!

தாய் இறந்த
பதட்டத்தில் அவள்
உதட்டுச் சாயம் பூசியதில்,
உதட்டை மிஞ்சி
முகமெல்லாம் அழகாயிருந்தது,
அழுகை மறைத்து நடித்த
கதையின் நாயகிக்கு..!!

இதயக் கோளாறு உள்ளவனாம் ,
அதையும் மீறி
எதையும் தாங்கி,
சதையும் நகமும் போல
பாத்திரத்தில் பொருந்தி
நடைபோட்டான் நாயகன்..!!

ஒத்திகை முடிந்திருந்தாலும்
ஒப்பனைகள் படிந்திருந்தது,
அழுதவன் சிரித்தால்
சிரித்தவன் அழுக வேண்டுமே..??
இவ்வளவே வாழ்க்கையென்பதை
அவ்வளவு சீக்கிரம்
புத்திக்கு சொல்லியிருந்தது நாடகம்..!!

எழுதியவர் : மனோ ரெட் (14-Mar-15, 8:20 am)
பார்வை : 88

மேலே