தாய் என்னும் தெய்வம்

தாய் என்னும் தெய்வம்.
வயிற்றினில் சுமந்தாய்! வலிதனில் துடித்தாய்!
வரும்சுகம் அனைத்தையும் துறந்தாய்!
உயிர்தனைக் கொடுத்தாய்! உவகையில் களித்தாய்!
உலகென என்னையே பார்த்தாய்!
துயர்தனைத் துடைத்தாய்! தூக்கமும் தொலைத்தாய்!
தோளினில் தூங்கிட வைத்தாய்!
உயர்வுற என்னை உலகினில் வளர்த்தாய்!
உனைவிட உயர்ந்ததும் எதுவோ?

அழகெனச் சிரித்தாய்! அள்ளியே அணைத்தாய்!
அமுதெனப் பாலினைச் சுரந்தாய்!
அழைத்திடி லோடி யருகினில் வந்தாய்!
அணைத்தொரு முத்தமும் தந்தாய்!
பிழையெனில் அடித்தாய்! பின்னரோ அழுதாய்!
பிரியமாய் என்னையும் வளர்த்தாய்!
மழலையில் நனைந்தாய்! மடிதனில் சுமந்தாய்!
மற்றவை யனைத்தையும் மறந்தாய்!.

உணவினை ஊட்டி உலகினைக் காட்டி
உருப்படும் வழிகளை விதைத்தாய்!
பணிவினைச் சொல்லிப் படித்திடப் பள்ளி
பருவத்தில் அனுப்பியும் வைத்தாய்!
துணிவுடன் வாழ்வில் தொடர்நடை போடத்
தோழனாய் அணைத்தெனை நடந்தாய்!.
மணமுறு பூவாய் மகிழ்வினைத் தந்தாய்!
மனதினுள் தினம்தினம் இனித்தாய்!

இடைதனில் என்னை யிருந்திட வைத்து
இதமெனச் சுமந்தெனைத் திரிந்தாய்!
நொடியினில் தொற்றும் நோயினில் வீழில்
நோவுறு மனதொடு துடித்தாய்!
அடிக்கடி நினைவில் அமர்ந்திட வைத்தாய்!
அங்குறு தினம்மலர்க் கொத்தாய்!
கடமையில் நீயோ கண்கண்ட தெய்வம்
கால மெல்லாம் இரு என்னுள்!

எழுதியவர் : வ-க-பரமநாதன் (22-Mar-15, 4:20 am)
சேர்த்தது : பரமநாதன் கணேசு
பார்வை : 237

மேலே