தொடுதலில் விரசமும் பாசமும்
பற்றிக்கொள்ளும் கரங்களில்
தொடு பாவனைகள்
விதம் விதம் தான்.
அப்பா என் கைத்தொட்டு
கடைவீதிக்கு அழைத்தப்போது
பஞ்சுமிட்டாய் சுவை உணர்ந்தேன்
பதினாறு வயதில்
பூப்படைந்தபோது
தலையில் வருடி
என் கைகளைப்பற்றி
அவர் விழிகளில் அணைத்தப்போது
அந்த ஆண்மகனுக்குள்ளிருக்கும்
தாய்மையை ருசித்தேன்
கல்லூரி பட்டமளிப்பு விழாவில்
நான் பெற்ற தங்கப்பதக்கத்தை
தன் கழுத்தில் அணிந்தாவாறே
என் கரங்களில் முத்தமிட்டப்போது
மீண்டும் தாயின் கருவுக்குள்
குடிக்கொண்ட பரவசம் பெற்றேன்.
இன்றும் கூட
கூட்டமுள்ள பேருந்துவில்
மேற்கைப்பிடியை பிடித்த
என் கையை பிடித்தார்.
வருடினார். தடவினார்
என்
தகப்பன் வயதுடையவர்.
அட அவர்
பார்வையில் பாசமில்லை
காமம் நிரம்பி சிவந்திருந்தது
மெதுவாய் அவர் காதில் சொன்னேன்.
அப்பா போல இருக்கீங்க
செருப்பால அடிவாங்காதீங்கன்னு
என் சங்கடத்தை கவனித்து,
மற்றொரு கரத்தை மெதுவாய் பற்றி இழுத்து
தன் இருக்கையை எனக்கு கொடுத்து
ஒரு ஆண் கண்ணியத்திலிருந்த
முப்பதுகளின் வயதுடைய
அந்த அண்ணா
அந்த நிமிடத்தில்
எனக்கு அப்பா ஆனார்.