என் செய்வதாய் உத்தேசம்

எனக்கியல்பில்லாததாகிப்
போனவொன்றை
ஆடையென
வடிவமைத்தெனை
அணியச் சொன்னாய் ....

உனது பிரியத்தின்
நேசங்களைக்கூட்டி
வெகு பிரயாசையுடன்
அதை நீ
நெய்திருக்க வேண்டும் ...

சரியாகப் பொருந்தாது
அளவற்றிருந்த அதற்க்குள்
உனது
நேசத்தின் உச்சத்தினை
மெச்சியபடி
எனது உடலளவினை
மாற்றி
உள்நுழைந்தேன் ...

நீ வடிவமைத்த
கால அளவு
நான் உள்நுழையும்
கால அளவினைவிட
குறுகியதாகயிருந்ததால்
நுழைவதெனக்கு
அசௌகரியமாகயிருந்தது
ஆயினும்
மிகுந்த சிரத்தையுடன்
நுழைந்தேன் ...

திடீரென
மீள கழற்றித் தரக்
கோரினாய் -
உயிர்பசை சேர்ந்து
உடலோடு ஒட்டிப்போயிருந்த
அதை
மனமில்லாமல் கழற்றி
உரியவள் உன்னிடமே
ஒப்படைத்தேன் ...

அதோ
கொடியில் காயப்போட்டுவிட்டு
கண்டுகொள்ளாமல்
போய்விட்டாய் -
இன்னமும்
காதலின் ஈரம்
சொட்டச் சொட்ட
காயப் பட்டுக்கிடப்பதை
என் செய்வதாய் உத்தேசம் ?

எழுதியவர் : பாலா (24-Mar-15, 9:02 pm)
பார்வை : 128

மேலே