ஞானக் கீற்று -2--------அஹமது அலி-----
இம்மைக்காக
வாழ்பவனுக்கு
இவ்வுலகம் சொர்க்கம்
அவ்வுலகம் நரகம்!
0
மறுமைக்காக
வாழ்பவனுக்கு
இவ்வுலகம் சிறைச்சாலை
அவ்வுலகம் சொர்க்கம்!
0
உலகப் பற்றை
பற்றும் போது
இன்ப துன்பம்
இருவேறு!
0
உலகப் பற்றை
உதறும் போது
இன்ப துன்பம்
இரண்டும் ஒன்று!
0
மனோ இச்சையின்
நிர்வாணமே
இம்மைப் பற்று!
0
மனோ இச்சைக்கு
நிவாரணமே
மறுமைப் பற்று!
0
நிர்வாணமா
நிவாரணமா
அறிவால் பற்று!
0
கோபம்
மனித உணர்ச்சி-அதை
அடக்குதலே
மனிதனாகும் முயற்சி!
0
சிரிப்பு
உயிர் பூக்கும் நிகழ்வு
உதிர்க்கின்ற பொழுதெல்லாம்
உயிர் பூக்கச் சிரி-பிற
உயிர் நோகமல் விரி!
0
எல்லோருக்கும் உள்ளூர
மகானாகவே ஆசை
மகானாவது எளிது
மனிதனாகி விட்டால்
0
ஆக....... மனிதனாகி விடு!
0