பச்சை மையில கையெழுத்து
மூன்றாவது முடித்தபின்
வறுமையின் பிடியில்
வந்துசேர்ந்தான்
அக்கடைக்கு அவன் ...
எச்சில் கிளாஸ்
கழுவும் பொழுதுகளில்
சீனியும் ...நீரும்
தரும் பாதிப்பால்
சிற்சில ஓட்டைகள்
உள்ளங்கைகளில்
உருவாகியிருக்கும்
நிதமும் ...
அன்போடு
அவன் காயத்திற்கு
அன்னை மருந்திடுவாள்
அவன் உறங்கியபின்
இரவு பொழுதுகளில் ...
உன்னத உழைப்பினாலும்
உயரிய பண்பினாலும்
உயர்ந்துள்ளான் டீ மாஸ்டராக
அதே கடையில் முருகனின்று...
கடை முதலாளி கரீம் பாய்
அற்புத மனிதர்
அவர் அன்பினாலே
அவனால் அவரைவிட்டு
இன்றுவரை விலகமுடியவில்லை ...
இஞ்சிச்சாறு
தேயிலை நீர்
கொஞ்சம் பால்
அளவாய் சீனியென
அவன்போடும் டீக்காக
அலைமோதும் கூட்டம்
அக்கடைக்கு எப்போதும்
அவனுள்ளம் கண்டு
அவன் அத்தைமகள்
அவனை விரும்பி
மணமுடித்தாள்...
அவ்வப்போது
அவனுள்
படிப்பின் ஏக்கம் மட்டும்
பற்றி எரிந்துகொண்டிருக்கும் ...
ஐந்தாவது படிக்கும்
அவன் மகன்
அக்கடைக்கு யதேச்சையாய்
வந்தானன்று ...
பக்கத்துக் கடைக்கு
படு அவசரமென
தேநீர் தர முருகன் முயல
தான் கொடுக்கிறேனென்று
மொழிந்தான் அவன் மகன்...
அகோர கோபத்துடன்
அத்தனைபேர் மத்தியில்
திட்டித்தீர்த்து விட்டான்
அவன் மகனை ...
பாய் எதோ புரிதலுடன்
முருகனின் கண்களை
உற்று நோக்க
மெல்ல பேசினானவன்...
''படிச்சு முடிச்சு
பச்சை மையில கையெழுத்து
போடுராப்புல பெரிய ஆளா
அவன் வரணும் பாய் ''
என் தொழில்
என்னோடு போகட்டும்
கரீம் பாய் புன்னகைத்தார்
செஞ்சிடுவோம் முருகா
அல்லா துணை நிற்பார்
எல்லாம் அவன் செயல் ..!
-------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்