படிக்கட்டு
அன்பு படிக்கட்டு ஆசைப் படிக்கட்டு
இன்பம் பெருகும் படிக்கட்டு – துன்பம்
விலகும் படிக்கட்டு. வெண்ணிலா வந்து
உலவும் படிக்கட்டு நீ.
எண்ணப் படிக்கட்டு எண்ணும் படிக்கட்டு
வண்ணப் படிக்கட்ட மண்விட்டு – விண்ணில்
அடிக்கல் இடுதற்கு அஸ்திவாரம் செய்து
படிக்கட்டுக் கட்டு பயின்று.
கட்டி முடிச்சிட்டக் கட்டி லகப்பட்டுக்
கட்டில் சுகப்பட்டு கட்டுண்டக் – கட்டைநீ
விட்டு விடைபெற்று விண்ணில் கொடிக்கட்ட
கட்டும் படிக்கட் டுயர்த்து.
வாழ்க்கைப் படிக்கட்டு வாழும் படிக்கட்டு.
வாழ்ந்து மடிந்தோரும் வந்திருந்து – வாழ்த்தும்
படிக்கட்டு. வாழ்ந்து படித்திட்ட வாழ்க்கைப்
படிப்பை படிக்கப் புகட்டு.
துயரப் படிக்கட்டு தூர நடந்து
உயர படிக்கட்டு இங்கே.- அயரா
துழைக்கின்ற அன்பு உறவுகள் நன்கே
பிழைக்கப் படிக்கட்டு நீ.
வாங்கும் படிஇங்கு வாழ்க்கைச் செலவுக்கு
ஏங்கும் படியாக இன்றிகண் – தூங்கும்
இரவில் துரத்தும் கடன்காரன் நீங்க
வரவுப் படிக்கட்டு வாய்.
கள்ளப் படிக்கட்டுக் கட்டி நடக்காமல்
உள்ள படிக்கட்டு உத்தமமாய் – உள்ள
படிக்கட்டு. உண்மை குடிகொள்ள நல்ல
படிக்கட்டி பக்குவமாய் வாழ்.
படிக்கட்டும் தன்னை படிக்கட்டு மென்று
படிக்கட்டுக் கட்டும் பணியை – படித்துப்
படிப்படியாய் ஓங்கும் படிக்காத பேரின்
படிப்பறிவைப் பற்றிப் படி.
அழகு படிக்கட்டில் வாழ்வை நடந்து
பழகும் படிக்கட்டு எங்கள் – உழவர்
பெருமக்கள் உட்கார்ந்து உண்டு களிக்க
விரும்பும் படிக்கட்டி வை.
தேயும் நிலவுன்னைத் தேடி நடந்திட
தேயாப் படிக்கட்டு. தென்றலும் –ஓயாப்
படிக்கட்டு கட்டு. புதுமைப் புரட்சி
வெடிக்கும் படிக்கட்டு வா.
ஒடுக்கும் படிக்கட்டி உந்தன் உணர்வை
தடுக்கும் படிக்கட்டு வோரை – நடுங்கும்
படிக்கட்டிப் போட்டுக் கொடுக்கின்ற பாடம்
படிக்கும் படிக்கட்டிப் பார்.
நெய்யாய் உருகும் படிக்கட்டி நீசர்தம்
பொய்கள் கருகும் படிக்கட்ட – மெய்யாய்
பருகும் அமுத படிக்கட்டை அன்பாய்
அருந்தும் படிக்கட்டு வாய்.
சிமிழாய் உடையும் படிகட்டா தெங்கள்
தமிழை விசமாய் நினைத்து - உமிழ்வோர்
நிமிரும் படிக்கட்டு . கட்டி யவர்க்கு
அமிர்தம் எனநீ புகட்டு.
கலகப் படிக்கட்டு கட்ட மறந்தே
உலகப் படிக்கட்டில் நின்றே - நிலவைப்
பிடிக்கப் படிக்கட்டு கட்டிக் கவிதை
வடிக்கும் படிசெய் வனப்பு. .
மெய்யன் நடராஜ்