ஜென் முத்தம்
நிறமற்ற மனதுக்குள்
வானவில் வெறும் கோடு
மனமற்ற கனவுக்குள்
கானமயில் பெரும் பாடு...
உறவோடு உயிரோடு
உதிருகின்ற சுடுகாடு
சதிராடும் படுவேகம்
அதிருகின்ற உன் கூடு....
தொடுவானம் உடைக்கின்ற
என் ஜன்னல் சிறையோடு
கடுந்தாகம் படைக்கின்ற
விண் தேசம் எதன் ஏடு......
உயிர் பிழியும் உடல் வாளின்
பயிர் எதுவோ கள நாளில்
விடை இல்லை படை சேர
கலை தேடும் கள் நூலில்.....
வளையங்கள் விரிந்தாலும்
சட்டங்கள் நிலை ஆளும்
பலியான பின்னிரவில்
அரை நிலவின் தலை வாழும்.....
எதைத் தேடும்
என் வார்த்தை
எதைச் சூடும்
என் வரிகள்.....
மனமில்லா உன்மத்தம்
பூணுகின்ற ஜென்முத்தம்
காணுகின்ற உயிர்சத்தம்
எனதில்லை எனக் கத்தும்......
உடைகின்ற வெளி மொத்தம்
உடையில்லா ஒளி சத்தம்
விடை தேடி கண் பொத்தும்
புதுக்கேள்வி தனைவித்தும்.....
கவிஜி

